கம்ப இராமயணத்தின் ஒவ்வொரு காண்டமும் பல படலங்களை உட்பிரிவுகளாக கொண்டு விளங்கும். பால காண்டம் இருபத்து மூன்று படலங்களை கொண்டது அதில் ஆற்று படலமானது ஆற்றை பற்றிய படலமாகும்.இங்கு சிறப்பித்து பேசப்படும் நதி சரயு நதியாகும்.கோசல நாட்டிற்கு வளமூட்டும் சரயு நதியின் வெள்ளம், போக்கு ஆகிய வற்றினை இப்படலம் விளக்குகின்றது. ஆற்றுப் படலம் இருபது படலங்களை கொண்டது.அதனை இரண்டு பகுதிகளாக பிரித்து பதிவு செய்துள்ளேன்.

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும் ,
காசு அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூருவாம்.

குற்றத்தை மிகுதியாக செய்கின்ற ஐந்து பொறிகளாகிய அம்புகளும், மணியாரங்கள் ஒலிக்கின்ற மார்பகங்களை உடைய பெண்களின் கண்களாகிய போர்த்தொழில் வல்ல அம்புகளும், ஒழுக்க நெறிக்கு அப்பால் செல்லாத கோசல நாட்டை அழகு செய்கின்ற ஆற்றின் அழகினை கூறுவோம்.

நீறு அணிந்த கடவுள் நிறுத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்,
சேரு அணிந்த முலைத் திருமங்கை தன்
வீறு அணிந்த மேனியின் மீண்டவெ.

திரு நீற்றைத் திருமேனி முழுதும் பூசிய சிவபெருமானின் நிறுத்த(வெள்ளை) நிறத்தை உடையவனாகிய மேகங்கள், போகும் வழிகளை அழகு செய்து கொண்டு போய் கடல் நீரை குடித்து, அகிற்குழம்பாகிய சேற்றினால் அழகு கொண்ட மார்பகத்தாளாகிய, இலக்குமியால் ஏற்பட்ட தனிசிறப்புடைய திருமாலின்(கரிய) நிறம் கொண்டு திரும்பின.

பம்பி மேகம் பரந்தது, ‘பானுவால்
நம்பன் மாதுவன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றதும்’ என்று, அகன் குன்றின் மேல்,
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.

மேகங்கள் நெறுங்கி இமயமலையில் படிந்த காட்சி, சிவபெருமானின் மாமன் சூரியனால் வெப்பத்தை அடைந்தான். நாம் தண்ணீரால் குளிப்பாட்டுவோம், என்று பரந்த இமயமலையின் மேலே இவ்வுலகத்தில் உள்ள கடல் எழுந்ததைப் போலக் காணப்பட்டது.

புள்ளி மால் வரை பொன் என நோக்கி, வான்,
வள்ளி வீழ் இடை வீழ்த் தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எலாம் வெந்து ஈயும் அவ்
வள்ளியோரின், வழங்கின-மேகமே.

பெறுமை மிகுந்ததும் பெரியதுமான இமயமலை, பொன்மயமாக இருப்பதை கருதி வின்னுலகத்தவர்கள் வானுக்கும் மலைக்கும் இடையே வெள்ளி விழுதுகளை வீழ்த்தியது போல எண்ணிப் பார்த்து தம்மிடத்துள்ள எல்லாவற்றையும் உவந்து ஈயும், வள்ளல்களை போல் மேகங்கள் மழைத்தாரையை பொழிந்தன.

மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
போன தன் குடை வேந்தன் புகழ் என,
நானம் முன்னிய நான் மறையளர் கைத்
தானம் என்ன, தழைத்து- நீத்தமே.

மான உணர்வு பொருந்தி, தரும நெறிகருதி, மனுநீதிப்படி நடக்கும் குளிர்ந்த குடை நிழலின் கீழ் இருக்கும், மன்னன் புகழ் போலவும் ஞான வழியை நாடுகின்ற நான்கு மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும் சரயு ஆற்றில் வெள்ளம் பெருகிற்று.

தலையும் ஆகமும் தாளும் தழிஇ, அதன்
நிலை நிலாது, இறை நின்றது போலவே,
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்,
விலையின் மாதரை ஒத்தது.

தலை, உடல், கால்கள் முதலிய எல்லா உறுப்புகளையும் தழுவி, அவ்வளவோடு அன்றி சிறிதளவு காலமே விரும்பியிருந்தது போல மலையின் உச்சி, நடுவிடம், அடிவாரம் ஆகிய பகுதிகளில் உள்ள எல்லாவற்றையும் வரிக்கொண்டு விரைந்து
சரயுவில் பெருகிய அந்த வெள்ளம் விலை மகளிரை ஒத்திருந்தது.

மணியும், பொன்னும் மயில் தழைப் பீலியும்,
அணியும் ஆணை வெண் கோடும்,அகிலும், தண்
இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான்,
வணிக மாக்களை ஒத்தது.

முத்துகள், பொன், மயில் இறகுகள்,அழகுடைய யானைத் தந்தங்கள், தனக்கு ஒப்பு இல்லாத சந்தன மரம் ஆகிய இத்தகையவற்றை வாரிச் செல்லுதலால் சரயுவின் அந்த வெள்ளம் வணிகர்களை ஒத்திருந்தது.

பூ நிரைத்தும், மென் தாது பொருந்தியும்,
தேன் அளாவியும், செம்பொன் விராவியும்,
அனை மா மதாஆற்றோடு அளாவியும்,
வான வில்லை நிகர்த்து-அவ்வாரியே.

அந்த வெள்ள பெருக்கு பலநிற மலர்களை வரிசை படுத்தியும், மென்மையான மகரந்த பொடி பொருத்த பெற்றும்,தேனோடு கலந்தும், செம்பொன் கலந்தும் ஆனைகளின் மிகுந்த மத நீர் கலந்தும் பல நிறங்கள் கொண்ட வான வில்லை ஒத்திருந்தது.

மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம்-அந்நீத்தமே.

மரங்களை பெயர்த்துக் கொண்டும், பக்கங்களில் உள்ள இலை முதலிய பொருள்களால் எல்லாவற்றையும் ஏந்தி வருவதால் அலைகளையுடைய கடலிடத்தே இராம பிரான் கடலை கடக்க நேர்ந்த அந்த காலத்தில் அணைகட்ட விரும்பிய நிலை பேறுடைய வானர பெருங்கூட்டத்தைப் போலவே அந்த சரயுவின் வெள்ளம் விளங்கிற்று.

ஈக்கள் வண்டோடு மொய்ப்ப, வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து, உள் தெளிவு இன்றியே,
தேக்கு எறிந்து வருதலின்,-தீம் புனல்
வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே.

இனிய நீர் பெருக்கு ஈக்கள் வண்டுகளோடு சேர்ந்து மொய்த்திட, அணை கடந்து ஒழுகலாற்று எல்லையை மீறி எழுச்சி பெருகி பள்ளத்தில் தெளிவு இல்லாமல் தேக்கு மரங்களை மோதி இழுத்து வருவதால் மது அருந்தி விட்டு வரும் குடியர்களை போல் இருந்தது.




என் இனிய பதிவுலக நண்பர்களுக்கு அன்பு வணக்கம், பதிவுலகிற்கு புதியவன் நான். என்னுடைய முதல் முயற்சியாக கம்பராமாயணத்தை மூலம் மற்றும் உரையுடன் பதிவு செய்யலாம் என்று எண்ணி தொடங்குகின்றேன். என்னுடைய பதிவில் ஏதேனும் பிழை இருப்பின் அருள் மன்னிக்க வேண்டுகிறேன்.

கம்பர் இயற்றிய இராமகாதையில் பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரண்ய கண்டம், சுந்தர காண்டம், கிட்கிந்தா கண்டம், யுத்த காண்டம் என் ஆறு காண்டங்கள் உள்ளன.

இராமகாதை நாடு முழுவதும் பரவியிருந்த காரணத்தினாலும், பௌரானிகர்கள் இராமயணத்தை அதிகம் பேசுவதற்காக எடுத்து கொண்ட காரணத்தினாலும், தனி தனியே பல்வேறு இடன்களிலிருந்து பிரவசனம் செய்கின்றவர்கள் தங்களுக்கு தேவையான பாடல்களை புதிதாக பாடி சேர்த்திருக்கிறார்கள். அவற்றை மிகை பாடல்கள் என்று பிரித்திருக்கிறார்கள். இதில் முதலாவது காண்டமான பால காண்டம் ஆற்றுப் படலத்தில் தொடங்கி பரசுராம படலம் வரை இருபத்து மூன்று படலங்களை உடையது. கம்ப இராமயணத்தில் பால காண்டம் என்பது பெரும்பாலும் இராமனுடைய பால பருவத்தின் நிகழ்ச்சிகளை பற்றி கூறியிருக்கிறார். கடவுள் வாழ்த்தில் முதல் பாடலுடன் எனது பதிவினை தொடங்குகின்றென்

பால காண்டம்

கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

எல்லா உலங்களையும் தாம் தம் சங்கர்பத்தால் படைத்தலையும், நிலைத்திருக்குமாறு காத்தலையும், அழித்தலையும், என்றும் முடிவுறாததும், அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய அவரே தலைவராவார் அப்படிபட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்