திரு அவதாரப் படலத்தின் தொடர்ச்சியாக கலைக்கோட்டு முனிவனின் வரலாற்றை தயரதனிடம் வசிட்டன் கூறுதலும், கலைக்கோட்டு முனிவனை அழைக்க தயரதன் உரோமபதன் நாட்டுக்கு சொல்லுதலும் கலைக்கோட்டு முனிவர் அயோத்திக்கு புறப்படுவதையும் இப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது


கலைக்கோட்டு முனிவனின் வரலாற்றை வசிட்டன் உரைத்தல்

'புத்து ஆன கொடு வினையோடு அருந் துயரம் போய் ஒளிப்ப,-புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன், தயையினொடும் தண் அளியின் சலை போல்வான்,
எத்தானும் வெலற்கு அரியான், மனுகுலத்தே வந்து உதித்தோன், இலங்கும் மோலி
உத்தானபாதன்,-அருள் உரோமபதன் என்று உளன், இவ் உலகை ஆள்வோன்;

புற்றுப் போலப் பெருகும் கொடிய வினைகளும், அவற்றால் விளையும் அரிய துன்பங்களும் சென்று நீங்க நாட்டைக் காத்து ஆட்சி புரியும் மிக உண்மையான குணம் உடையவனும், தயைக்கும் தண்ணளிக்கும் இருப்பிடம் போன்றவனும், எம்முறையிலும் பகைவரால் வெல்ல அரியவனும், மனுவின் குலத்தில் பிறந்தவனும், ஆனவிளங்கும் மணிமுடி தரித்த உத்தான பாதன் என்னுமரசன் பெற்ற மகனான உரோம பதன் என்னும் பெயர் பெற்ற இவ்வுலகத்தை எல்லாம் ஆள்கின்ற அரசன் ஒருவன் இருக்கிறான்.

'அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடுங் காலம் அளவது ஆக,
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம் பெருகுதலும், வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து, மா தானம் கொடுத்தும், வான் வழங்காது ஆக,
பின்னும், முனிவரர்க் கேட்ப, "கலைக்கோட்டு-முனி வரின், வான் பிலிற்றும்" என்றார்.

அந்த உரோமபத மன்னன் காத்து ஆட்சி புரியும் அந்தச் சிறந்த நாட்டில் நீண்ட கால அளவாக, மின்னி எழுகின்ற மேகங்கள் இல்லாமையால் கொடிய துன்ப நோய் மிகவே அந்த அரசன், வேதங்களையெல்லாம் கற்றறிந்த முனிவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேதங்களில் கூறியபடி சிறந்த தானங்களைக் கொடுத்த போதும் மழை பெய்யாது போகவே மறுபடியும் முனிவர்களை அழைத்து மழை பெய்விக்க வழி யாதெனக் கேட்க கலை கோட்டு முனிவன் வந்தால் இங்கு மழை பெய்யும் என்றார்கள்.

'"ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை யாவது?" எனக் குணிக்கும் வேலை
சோதி நுதல், கரு நெடுங் கண், துவர் இதழ் வாய், தரள நகை, துணை மென் கொங்கை,
மாதர் எழுந்து, "யாம் ஏகி, அருந் தவனைக் கொணர்தும்" என, வணக்கம் செய்தார்.

குளிர்ந்த பெரிய கடலை ஆடையாகஉடைய இவ்வுலகிலே வாழும் மனிதர்களைஎல்லாம் விலங்குகள் என்றே நினைத்திருக்கின்ற குற்றமற்ற குணங்களை உடைய அரிய தவத்தை உடைய அந்த முனிவனை இங்கு அழைத்து வரக்கூடிய வழி யாது என்று சிந்திக்கும் போது ஒளி பொருந்திய நெற்றியையும் கருமையான நீண்ட கண்களையும் பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடைய பெண்கள் அந்த அவையிலே எழுந்து நின்று. நாங்கள் சென்று அத தவமுனியை அழைத்து வருவோம் என்று வணங்கிக் கூறினர்.

ஆங்கு, அவர் அம் மொழி உரைப்ப, அரசன் மகிழ்ந்து, அவர்க்கு, அணி, தூசு, ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளி, "பனிப் பிறையைப் பழித்த நுதல், பணைத்த வேய்த் தோள்,
ஏங்கும் இடை, தடித்த முலை, இருண்ட குழல், மருண்ட விழி, இலவச் செவ் வாய்ப்
பூங்கொடியீர்! ஏகும்" என, தொழுது இறைஞ்சி, இரதமிசைப் போயினாரே.

அங்கு. அம்மகளிர். அச்சொற்களைச் சொல்ல அதைக் கேட்ட மன்னன் மகிழ்ந்து அவர்களுக்கு வேண்டிய அணிகலன்கள் ஆடை மற்றும் தேவையானவைகளைக் கொடுத்து குளிர்ந்த பிறை மதியைப் பழித்த நெற்றி பருத்த மூங்கிலை ஒத்த தோள்கள் நுண்ணிய இடை, பருத்த தனம்கரிய கூந்தல், மான்போல மருண்ட கண்கள், இலவம் பூவைப் போலச் சிவந்த வாய் ஆகிய உறுப்பு நலம்வாய்ந்த மலர்க்கொடி போன்றவர்களே சொல்லுங்கள் என்று கூற அரசனைப் பணிந்து வணங்கித் தேர் ஏறிச் சென்றனர்.

'ஓசனை பல கடந்து, இனி ஒர் ஓசனை
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி,
பாசிழை மடந்தையர், பன்னசாலை செய்து,
ஆசு அறும் அருந் தவத்தவரின் வைகினார்.

மன்னனிடம் விடைபெற்றுச் சென்ற அப்பெண்கள் பல ஓசனை கடந்து சென்று குற்றமற்ற தவ முனிவன் வாழும் இடம் இதுவாகுமென இனி ஒரு யோசனை தூரம் தானிருக்கிறது என்று கூறப்படும் இடத்தில் தழை, குழை, கொம்புகளால் உறைவிடமமைத்து பசிய அணிகலன்களை அணிந்த அப்பெண்கள் குற்றமறுத்த அரிய தவத்தினர் போல அங்கு வாழத் தொடங்கினர்.

'அருந் தவன் தந்தையை அற்றம் நோக்கியே,
கருந் தடங் கண்ணியர், கலை வலாளன் இல்
பொருந்தினர்; பொருந்துபு, "விலங்கு எனாப் புரிந்து
இருந்தவர் இவர்" என, இனைய செய்தனர்.

அரிய தவத்தை உடைய கலைக் கோட்டு முனிவனது தந்தையாகிய விபாண்டகர் இல்லாத சமயம் பார்த்து கரிய, அகன்ற கண்களை உடைய அப்பெண்கள் எல்லாக் கலைகளிலும் வல்லவராகிய அம்முனிவரின் குடிலை அடைந்தனர். அங்ஙனம் அடைந்த போது மனிதர்களை விலங்கினங்களோடு ஒப்ப மதித்து இருக்குமவன், முனிவர்களே இவர்கள் எனக் கருதிப் பின்வருமாறு செய்யத் தொடங்கினான்.
'அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து,
"இருக்க" என, இருந்த பின், இனிய கூறலும்,
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா,
பொருக்கென எழுந்து போய், புரையுள் புக்கனர்.

அருக்கியம் முதலான உபசரிப்புகளோடு அமர்வதற்கு உரிய ஆசனமும் தந்து அமர்வீராக என முனிவன் கூற அந்த மகளிர் அமர்ந்ததன் பின்னர்இனிய உரையால் முகமன் கூறி வரவேற்கமுருக்கம் பூப் போன்ற உதடுகளை உடைய அப்பெண்கள் அந்த முனிவனைத் தொழுது பின்பு விரைந்தெழுந்து சென்று தமது பன்ன சாலையை அடைந்தனர்.

'திருந்து இழையவர், சில தினங்கள் தீர்ந்துழி,
மருந்தினும் இனியன வருக்கை, வாழை, மாத்
தருங் கனி பலவொடு, தாழை இன் கனி,
"அருந் தவ, அருந்து" என, அருந்தினான் அரோ.

திருந்திய அணிகலன்களை அணிந்திருப்பவர்களாகிய அப்பெண்கள் சில நாட்கள் சென்ற பிறகு அமுதத்தை விட இனிமையாகிய பலா, வாழை, மா என்னும் மூவகை மரங்களும் தருகின்ற பழங்கள் பலவுடனே தேங்காய்களையும் கொணர்ந்து அரிய தவமுனிவரே ! இவற்றை அருந்துவீராக என வேண்ட அம்முனிவனும் அவற்றை உண்டான்.

'இன்னவன் பல் பகல் இறந்தபின், திரு
நல் நுதல் மடந்தையர், நவை இல் மாதவன் -
தன்னை, "எம் இடத்தினும், சார்தல் வேண்டும்" என்று,
அன்னவர் தொழுதலும், அவரொடு ஏகினான்.

இவ்வாறு பல நாட்கள் சென்றபின் அழகிய நல்ல நெற்றியை உடைய அப்பெண்கள் குற்றமில்லாத சிறந்த தவத்தை உடைய அக்கலைக் கோட்டு முனிவனை எங்கள் இருப்பிடத்துக்கும் தாங்கள் எழுந்தருள வேண்டும் என்று கூறி அம்மகளிர் வணங்கி வேண்டிட அம்முனிவனும் அவர்களுடன் சென்றான்.

'விம்முறும் உவகையர், வியந்த நெஞ்சினர்,
"அம்ம! ஈது, இது" என, அகலும் நீள் நெறி,
செம்மை சேர் முனிவரன் தொடரச் சென்றனர்;-
தம் மனம் என மருள் தையலார்களே.

விளங்கிப் பெருகும் மகிழ்ச்சி உடையவராயும்பெருமிதங் கொண்ட மனத்தினராயும் உள்ள மருண்ட கண்களை உடைய அம்மாதர்கள் சிறந்த அம்முனிவன் அவர்களைத் தொடர்ந்து வர அகன்று நீண்ட அந்த வழியிலே எங்கள் இருப்பிடம் இதுதான் இதுதான் என்று வேகமாகச் செல்லும் தமது மனம் போலச் சென்றார்கள்.

'வளநகர் முனிவரன் வருமுன், வானவன்
களன் அமர் கடு எனக் கருகி, வான் முகில்,
சள சள என மழைத் தாரை கான்றனகுள
னொடு நதிகள் தம் குறைகள் தீரவே.

கலைக் கோட்டு முனிவன் அந்தவளம் பொருந்திய நகருக்கு வரும் முன்னே பெரு மேகங்கள் சிவபிரானுடைய கழுத்தில் தங்கியுள்ள நஞ்சு போலக் கருநிறம் கொண்டு குளங்களும், ஆறுகளும் குறை தீரும்படியாக மழைத் தாரைகளைச் சளசள என்ற ஒலியுடன் பொழிந்தன.

'பெரும் புனல், நதிகளும் குளனும், பெட்பு உற,
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட,
இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்து போது, அரசு உணர்ந்தனன்.

பெய்த மழையால் பெருகிய வெள்ள நீரால், நீரோடும் ஆறுகளும், நீர் நிறைந்த குளங்களும் மக்கள் விரும்புமாறும் கரும்பும், செந்நெற் பயிரும் அழகு கொண்டு செழித்தோங்கவும் பெரு மேகங்கள் வானவீதியில் எழுந்து நின்று அரிய மழைப் பெருக்கினை இடைவிடாமல் சொரிந்த வேளையில் அந்த நாட்டு மன்னனான உரோமபதன் முனிவரது வருகையைத் தெரிந்து கொண்டான்.

"காமமும், வெகுளியும், களிப்பும், கைத்த அக்
கோமுனி இவண் அடைந்தனன் கொல்-கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?"

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றினையும் வெறுத்து நீக்கிய முனிவர்களுக்கெல்லாம் தலைவனாகிய அந்தக் கலைக் கோட்டு முனிவன் கொவ்வைக் கனி போன்ற வாயையும், தாமரை மலர் போன்ற முகத்தையும் முத்துப் போன்ற ஒளிபொருந்திய பற்களையும் அகிற் புகையூட்டிய மென்மையான குழலையும் உடைய அப்பெண்கள் செய்த சூழ்ச்சியினால் இங்கு வந்து சேர்ந்தனன் போலும்.

'என்று எழுந்து, அரு மறை முனிவர் யாரொடும்
சென்று, இரண்டு ஓசனை சேனை சூழ்தர,
மன்றல் அம் குழலியர் நடுவண், மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் - குவவுத் தோளினான்.

என்று நினைத்த திரண்ட தோள்களை உடைய அந்த மன்னன் (உரோமபதன்) நாற்பெரும் படையும் தன்னைச் சூழ்ந்து வர எழுந்து புறப்பட்டு சென்று மணமும் அழகும் உடைய கூந்தலை உடையவர்களான பெண்களின் நடுவே சிறந்த தவமலை போன்றவராகிய கலைக் கோட்டு முனிவனைக் கண்டான்.

'வீழ்ந்தனன் அடிமிசை, விழிகள் நீர் தர்
"வாழ்ந்தனெம் இனி" என, மகிழும் சிந்தையான்,
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி, "நீர்
போழ்ந்தனிர் எனது இடர், புணர்ப்பினால்" என்றான்.

அம்முனிவனைக் கண்ட மன்னன் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிய அம்முனிவரின் திருவடிகளில் வணங்கி எழுந்து இனி யானும் எனது நாட்டு மக்களும் வாழ்வு பெற்றோம் என்று கூறி மகிழ்ச்சிமிக்க மனத்தையுடைய மன்னவன் தன்னை வணங்கி எழுந்து நிற்கும் அந்தப் பெண்களைப் பார்த்து நீங்கள் உங்கள் உபாயத்தினால் எனது பெருந்துன்பத்தைப் போக்கிவிட்டீர்கள் என்று கூறினான்.

'அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை,
வர முனி, "வஞ்சம்" என்று உணர்ந்த மாலைவாய்,
வெருவினர் விண்ணவர்; வேந்தன் வேண்டலால்,
கரை எறியாது அலை கடலும் போன்றனன்.

உரோமபத மன்னனும் அவனைச் சூழ்ந்து வந்த முனிவர்களும் தன்னை வந்தடைந்த காலத்தில் சிறந்த முனிவனாகிய கலைக்கோட்டு முனிவன்தன்னை இங்கு அழைத்து வந்து ‘வஞ்சகச் செயல்’ என்று தெளிந்த போதிலே தேவர்கள் அஞ்சி நடுங்கினர் அரசன் வேண்டிக் கொண்டதால்கரையை மோதி அழித்துவிடாது அலைக்கும் கடல் போல அந்த முனிவன் கட்டுப்பட்டிருந்தான்.

'வள் உறு வயிர வாள் மன்னன், பல் முறை,
எள்ள அரு முனிவனை இறைஞ்சி, யாரினும்
தள்ள அருந் துயரமும், சமைவும், சாற்றலும்,
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம் அரோ.

கூர்மை பொருந்திய வாளை உடைய அம்மன்னன் பலமுறையும் இகழ்தற்கரிய அந்த முனிவனை வணங்கி யாராலும் போக்க முடியாத மழை இன்மையாகிய துன்பத்தையும் அத்தகைய துன்பம் முனிவன் வருகையால் நீங்கியதனையும் விரிவாகச் சொல்லவும் அம் முனிவனது உள்ளத்தே உண்டான கோபம் நீங்கி மறைந்தது.

'அருள் சுரந்து, அரசனுக்கு ஆசியும் கொடுத்து,
உருள் தரும் தேரின்மீது ஒல்லை ஏறி, நல்
பொருள தரும் முனிவரும் தொடரப் போயினன் -
மருள் ஒழி உணர்வுடை வரத மா தவன்.

உள் எழுந்த சினம் நீங்கிய அம்முனிவன் அருளைச் சுரந்துஅந்த வேந்தனுக்கு ஆசியும் கூறி உருண்டு செல்லும் தேரின் மீது விரைந்தேறி நல்ல கருத்துகளையே எப்போதும் தரும் மற்ற முனிவர்களும் பின்வரமயக்கம் நீங்கிய நல்லுணர்வுடைய யாவருக்கும் வரந்தர வல்ல தவத்தையுடைய கலைக்கோட்டு முனிவன் சென்றான்

'அடைந்தனன், வள நகர் அலங்கரித்து எதிர்
மிடைந்திட, முனியடும் வேந்தன்; கோயில் புக்கு,
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி, ஓர்
மடங்கல்-ஆதனத்தின்மேல் முனியை வைத்தனன்.

வளம் பொருந்திய அந்நகரை மன்னன் கட்டளைப்படி அலங்கரித்து அந்த நகரத்து மக்கள் எதிர்கொண்டழைத்துச் செல்வதற்குக் கூட்டமாய் நெருங்கி வர அவ்வரசன் கலைக்கோட்டு முனிவனுடன் அந்நகருள் சென்று அரண்மனைக்குள் போய் குறைவுபடாத பொன் திணித்துப் புனைந்த ஒரு மண்டபத்தை அடைந்துஒரு சிங்காதனத்தின் மேலேஅந்த முனிவனை அமரச் செய்தான்.

'அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி, வேறு
உரைக்குவது இலது என உவந்து, தான் அருள்
முருக்கு இதழ்ச் சாந்தையாம் முக நலாள்தனை,
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன்.

முனிவனை ஆசனத்தில் அமரச்செய்த பின்னர் இனி வேறு உரைப்பதற்கு எதுவுமில்லை என்னும்படி அருக்கியம் கொடுத்தல் முதலான கடமைகள் பலவும் செய்தளித்து மன்னன் தான் பெற்ற முருக்கம்பூப் போன்ற இதழ்களையுடைய சாந்தை என்னும் அழகிய பெண்ணரசியான தன் மகளை வேத நெறிப்படி இருக்கு முதலான வேத மந்திரங்களைக் கூறி இனிமையாக மணம் செய்து கொடுத்தான்.

'வறுமை நோய் தணிதர வான் வழங்கவே,
உறு துயர் தவிர்ந்தது, அவ் உலகம்; வேந்து அருள்
செறிகுழல் போற்றிட, திருந்து மா தவத்து
அறிஞன், ஆண்டு இருக்குநன்; அரச!' என்றனன்.

மழை இல்லாமையால் நீண்ட காலம் அந்த நாட்டைப் பற்றியிருந்த கொடிய வறுமை நோய் தணியும் படி பெருமழை பொழியவே அந்த நாடு மிக்க துன்பம் நீங்கப் பெற்றது. வேந்தன் பெற்ற செறிந்த கூந்தலையுடைய சாந்தை போற்றி உபசரிக்க திருத்தமான தவத்தை உடைய அறிஞனாகிய அம்முனிவன் அங்கே வாழ்கின்றான் அரசே என வசிட்டன் கூறினான்

கலைக்கோட்டு முனிவனை அழைக்கத் தயரதன் உரோமபதன் நாட்டுக்குச் செல்லுதல்

என்றலுமே, முனிவரன் தன் அடி இறைஞ்சி, 'ஈண்டு ஏகிக் கொணர்வென்' என்னா,
துன்று கழல் முடிவேந்தர் அடி போற்ற, சுமந்திரனே முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சர் தொழ, மா மணித் தேர் ஏறுதலும், வானோர் வாழ்த்தி,
'இன்று எமது வினை முடிந்தது' எனச் சொரிந்தார் மலர் மாரி, இடைவிடாமல்.

வசிட்டன் கூறியதும் தயரதன் வசிட்டனது திருவடிகளைத் தொழுது இப்போதே சென்று அந்த முனிவரை அழைத்து வருவேன்’’ என்று கூறிவீரக்கழலும், மணி முடியும் அணிந்த அரசர் பலரும் அடிகளில் வீழ்ந்து வணங்கிப் போற்றவும், சுமந்திரன் முதலான வலிமை மிக்க அமைச்சர்களெல்லாம் வணங்கி வாழ்த்தவும், அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தயரதன் ஏறுதலுமே தேவர்களெல்லோரும் அரசனை வாழ்த்தி இன்றுடன் எங்கள் தீவினை யாவும் தீர்ந்து என்று மன்னனைப் போற்றி இடைவிடாமல் தொடர்ந்து பூ மழை பொழிந்தனர்

காகளமும் பல் இயமும் கனை கடலின் மேல் முழங்க, கானம் பாட,
மாகதர்கள், அரு மறை நூல் வேதியர்கள், வாழ்த்து எடுப்ப, மதுரச் செவ் வாய்த்
தோகையர் பல்லாண்டு இசைப்ப, கடல்-தானை புடை சூழ, சுடரோன் என்ன
ஏகி, அரு நெறி நீங்கி, உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே.

எக்காளமும். வேறுபல வாத்தியங்களும் ஒலிக்கின்ற கடலை விடப் போரொலி செய்து முழங்கவும்பாடகர்கள் இன்னிசை பாடவும் அரிய மறைவல்ல அந்தணர்கள் வேத மந்திரங்களைக் கூறி வாழ்த்திசைக்கவும் இன்மொழி கூறும் வாயினரான மயில் போன்ற மங்கையர் பல்லாண்டு பாடவும்கடல் போன்ற படைகள் தன்னைச் சூழ்ந்து வரவும் சூரியனைப் போல விரைந்து சென்று அரிய நெறிகளையெல்லாம் கடந்து சென்று உரோமபத மன்னனது அழகிய நாட்டை அடைந்தான்.

உரோமபதன் தயரதனை எதிர்கொண்டழைத்து உபசரித்தல்

கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற,
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல்-தானை புடை சூழ, கழற் கால் வேந்தன்,
செழுந் தோடும் பல் கலனும் வெயில் வீச, மாகதர்கள் திரண்டு வாழ்த்த,
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் - அரசை எதிர்கோள் எண்ணி.

கொழுந்து விட்டு ஓடிப் படர்கின்ற கீர்த்தியை உடைய மன்னர் மன்னான தயரதன் தம் நகரை அடைந்த செய்தியை ஒற்றர்கள் உரோமபத மன்னனிடம் சென்று கூற, வீரக் கழலணிந்த கால்களை உடைய அவ்வரசன் தேய்ந்து மழுங்கித் திரண்ட வரியமைந்த வில்லைக் கையிலுடைய கடல் போன்ற வீரர்கள் கொண்ட படை புடை சூழ, செழுமை மிக்க காதணிகளும் பிற அணிகலன்களும் ஒளிரவும், மாகதர்கள் திரண்டு வாழ்த்தவும், மேலெழுந்து பொங்கும் மகிழ்வொடு தயரத மன்னனை எதிர்கொண்டு அழைத்து வர நினைத்து தனது நகரிலிருந்து ஒரு யோசனை துரம் சென்றான்.

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் - தனைக் கண்ணுற்று, எழிலி நாண
அதிர்கின்ற பொலந் தேர் நின்று அரசர்பிரான் இழிந்துழி, சென்று அடியில் வீழ,
முதிர்கின்ற பெருங் காதல் தழைத்து ஓங்க, எடுத்து இறுக முயங்கலோடும்,
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி, இவை உரைத்தான் - களிப்பின் மிக்கான்:

தன்னை எதிர் கொண்டு அழைத்துச் செல்ல வருகின்ற வெற்றி பொருந்திய உரோமபத மன்னவனை பார்த்து, மேகமும் நாணும்படியாக முழங்குகின்ற தனது பொன் தேரிலிருந்து தயரதன் கீழே இறங்கும் போது உரோமபத மன்னன் சென்று தயரதன் பாதத்தில் வீழ்ந்து வணங்க, மேன்மேலும் முதிர்கின்ற பேரன்பு பெருகி ஓங்க உரோமபத மன்னனைத் தன்கைகளால் வாரி எடுத்துத் தழுவியவுடன் கதிர்விட்டு ஒளிரும் வேலையுடைய தயரதனைப் பார்த்து மகிழ்ச்சி மிகக்கொண்ட உரோமபதன் பின்வருமாறு கூறலானான்.

'யான் செய்த மா தவமோ! இவ் உலகம் செய் தவமோ! யாதோ! இங்ஙன்,
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?' என, மனம் மகிழா மணித் தேர் ஏற்றி,
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச் செழு நகரில் கொணர்ந்தான் - தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவுத் தோளான்

வானுலகத்தை நிலைபெறச் செய்த ஒளி மிகுந்த வேலை உடைய அரசே! இங்குத் தாங்கள் எழுந்தருளக் காரணம் நான் செய்த பெருந்தவமோ! இந்த நாடு செய்த நல்ல தவமோ! மற்றும் வேறு ஏதேனும் நற்செயல்களோ! எனக் கூறிமனம் மகிழ்ந்து தயரதனைத் தேரில் ஏற்றி, பகைவருடலை உயிரற்ற ஊனுடலாக்கிய ஒளிமிக் கூரிய வேலை உடைய உரோமபதன் எனக் கூறப்படும் வலிய தோள்களை உடைய அவ்வரசன், தேன் பிலிற்றும் பூமாலையணிந்த மணிமுடி சூடியிருப்பவனாகிய தேர்ப்படையை உடைய தயரத வேந்தனை செழிப்புடைய தனது நகருக்கு அழைத்து வந்தான்.

ஆடகப் பொன் சுடர், இமைக்கும் அணி மாடத் திடை, ஓர் மண்டபத்தை அண்மி,
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர் பல்லாண்டு இசைப்ப, பைம் பொன் பீடத்து,
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி, கடன்முறைகள் யாவும் நேர்ந்து,
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப, இனிது உவந்தான், சுரர் நாடு ஈந்தான்.

பொன்னொளி விளங்கும் அழகிய மாளிகை ஒன்றிலே அமைந்த ஒரு மண்டபத்தை அடைந்து பாடகம் அணிந்த அழகிய பாதங்களை உடைய மகளிர் பலர் பல்லாண்டு பாட, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூரிய வேலை உடைய தயரதனைப் பசிய பொன்மயமான ஆசனத்திலே இருக்கச் செய்து பேரரசனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் யாவும் செய்து இதழ் நெருங்கிய மாலையணிந்த மன்னனாகிய உரோமபதன் விருந்து கொடுக்க, அமரர் நாட்டை மீட்டுக் கொடுத்தவனான தயரத மன்னன் இனிதே மகிழ்ந்தான்.

கலைக்கோட்டு முனிவனை தயரதன் விருப்பப்படி அயோத்திக்கு அழைத்துவருவதாக உரோமபதன் கூறல்

செவ்வி நறுஞ் சாந்து அளித்து, தேர் வேந்தன் தனைநோக்கி, 'இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி' என, நிகழ்ந்த பரிசு அரசர்பிரான் கழறலோடும்,
'அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந் தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வி முடியோய்!' எனலும், தேர் ஏறிச் சேனையடும் அயோத்தி சேர்ந்தான்.

விருந்து முடிந்தவுடன் மணம் மிகுந்த சந்தனம் அளித்த உரோமபதன் தயரத மன்னனைப் பார்த்து தாங்கள் இங்கு வந்த காரியத்தைச் சொல்லியருள வேண்டுமென்று உரைக்க அதற்கு அரசர்க்கு அரசனாகிய தயரதன் நிகழ்ந்த செய்தியைச் சொல்ல லோடும், பொறாமை முதலிய தீய குணங்களை நீக்கிய மனத்தை உடையவரான கலைக்கோட்டு முனிவரை அயோத்திக்கு அழைத்து வந்து உன்னிடம் சேர்த்து விடுவேன் உயர்ந்த அழகிய மணிமுடி தரித்த வேந்தே! என உரோமபதன் கூறியதும் உடனே தயரதன் தேரேறி சேனையோடு அயோத்தி சென்று சேர்ந்தான்.

உரோமபதன் வேண்ட, கலைக்கோட்டு முனிவன் மனைவியுடன் அயோத்திக்குப் புறப்படுதல்


மன்னர்பிரான் அகன்றதன் பின், வய வேந்தன், அரு மறை நூல் வடிவம் கொண்டது
அன்ன முனிவரன் உறையுள்தனை அணுகி, அடி இணைத் தாமரைகள் அம் பொன்
மன்னு மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட, 'இவண் நீ வருதற்கு ஒத்தது
என்னை?' என, 'அடியேற்கு ஓர் வரம் அருளும்; அடிகள்!' என, 'யாவது?' என்றான்.

அரசர்க்கரசனான தசரதன் புறப்பட்டு நீங்கிய பிறகு வெற்றி பொருந்திய வேந்தனான உரோமபதன் அரிய மறைகளே வடிவெடுத்து வந்தது போன்றுள்ள
முனிவனான கலைக் கோட்டு முனியின் இருப்பிடத்தை அடைந்து அம்முனிவனது தாமரை போன்ற இரு பாதங்களையும் அழகிய தனது பொன்முடிக்கு அணியாகுமாறு வணங்கி, வேண்டிய உபசாரங்களைச் செய்து நிற்க முனிவர் அரசனைப் பார்த்து நீ இங்கு வந்த காரியம் என்ன என்று கேட்க அதற்கு மன்னன்அடிகளே! அடியேனுக்கு ஒரு வரம் தரவேண்டும் என்று சொல்ல அது என்ன என்றான்.

'புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க பெருந்தகைதன் புகழில் பூத்த
அறன் ஒன்றும் திரு மனத்தான், அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடி வேலான், "தசரதன்" என்று, உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்,
விறல் கொண்ட மணி மாட அயோத்திநகர் அடைந்து, இவண் நீ மீள்தல்!' என்றான்.

ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே தரத்துணிந்து தராசுத்தட்டிலேறிய பெருந்தகையான சிபிக் சக்கரவர்த்தியினது புகழ் பொருந்திய பெருங்குடியில் தோன்றிய அறப்பண்பு பொருந்திய நல்ல மனத்தினனும், தேவர்களுக்குத் துன்பம் தந்த அசுரரின் வலிமையை அழித்த வேலை உடையவனும், தயரதன் என்னும் பெயர்கொண்ட புகழ்மிக்க செங்கோலுடையவனுமான வேந்தனது வலிமையை அணியாகக் கொண்ட மணிகளால் இழைத்த மாளிகைகளையுடைய அயோத்தி நகரத்தை அடைந்து பின் இங்கு மீண்டு திரும்புதலே நான் வேண்டும் வரமாகும் என்று உரோமபதன்
சொன்னான்.

'அவ் வரம் தந்தனம்; இனித் தேர் கொணர்தி' என, அருந் தவத்தோன் அறைதலோடும்,
வௌ; அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன், அடி இறைஞ்சி, 'வேந்தர்வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன்' என்று, அதிர் குரல் தேர் கொணர்ந்து, 'இதனில், கலை வலாள!
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக!' என, ஏறிச் சிறந்தான் மன்னோ.

நீ கேட்ட அந்த வரத்தைக் கொடுத்தோம். இனி தேர் கொண்டு வருக! என்று அந்தத் தவ முனிவன் கூறிய உடனே வெவ்விய அரத்தால் அராவப்பட்டு கூரிய ஒளியுடைய வேலை உடைய, உரோமபதன் கலைக்கோட்டு முனிவனது பாதங்களைத் தொழுது மன்னர் மன்னனான தயரதன் துன்பம் நீங்கி உயர்வான் என்றெண்ணி, அதிர்ந்து ஒலிக்கும் தேரை வரவழைத்து கலைகளில் வல்லோனே! இதோ இத்தேரில் அழகிய நெற்றியை உடைய திருமகளைப் போன்ற சாந்தையுடன் ஏறி அருள்க! என்று கூறஅவ்வாறே அம்முனிவன் ஏறி அமர்ந்தான்.

முனிவன் போவதைக் கண்டு, தேவர்கள் மகிழ்தல்

குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட,
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர,
வனிதையும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும், பொறிமிசை நெறியை முன்னினார்.

வளைந்த வில்லையுடைய வெற்றி மிகுந்த வேந்தனான உரோபத மன்னனும் கைகளைக் குவித்து வணங்கி நிற்கவும், குற்றம் நீங்கிய மனத்தினரான முனிவர்கள் பலரும் தொடர்ந்து பின்பற்றிவரவும், தனது வாழ்க்கைத் துணைவியான சாந்தையுடன், அரிய வேதங்களே உருவெடுத்து வந்தது போன்ற அந்த முனிவனும் இயந்திரத் தேர் மீது அமர்ந்து அயோத்தியின் வழியே செல்ல எண்ணினார்.

அந்தர துந்துமி முழக்கி, ஆய் மலர்
சிந்தினர், களித்தனர் - அறமும் தேவரும் -
'வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்ம்முதல்
வந்து எழ அருள் தருவான்' என்று எண்ணியே.

அறக்கடவுளும் தேவர்களும் வெந்து எழுந்து நம்மை வருத்தும் கொடிய துன்பங்களை அழிக்கும் மெய் முதற் பொருளாகிய பரமன் இங்கு வந்து தோன்ற, இம் முனிவன் அருள் புரிவான் என நினைத்து தேவ வாத்தியங்களை முழக்கிக் கொண்டு ஆய்ந்தெடுத்த நறுமண மலர்களைத் தூவி மகிழ்ச்சி மிகக் கொண்டனர்.


பால காண்டத்தில் ஐந்தாவது படலம் திரு அவதாரப் படலமாகும்.திருமாலின் அவதாரமான ராமபிரான் அவதாரம் செய்ததை கூறும் பகுதியாகும். இதில் தயரத மன்னன் மகப்பேறின்றி இருத்தலை வசிட்ட முனிவரிடம் கூறுதலும், வசிட்டர் தேவர்களுக்கு திருமால் அருளியதை சிந்தித்தலும், புதல்வரை அளிக்கும் வேள்வி செய்யத் தயரதனுக்கு வசிட்டர் கூறுதலும், வேள்வித் தீயில் எழுந்த பூதம் பிண்டம் கொண்டுதருதலும், அப்பிண்டத்தை தயரதன் தேவியர் மூவருக்கும் பகிர்ந்தளித்தலும், அதன் காரணமாக தேவியர் கருவுருதலும், ராமன் முதலிய நால்வரும் அவதரித்தலும், புதல்வர்களுக்கு வசிட்டர் பெயர் சூட்டுதலும், பிள்ளைகளின் வளர்ச்சியும்-கல்வி பயிற்சியும்-யாவரும் போற்ற ராமன் இனிதிருத்தலும் விவரிக்கப்படுகின்றன. இதில் நூற்று முப்பத்து இரண்டு பாடல்கள் உள்ளன. எனவே நான்கு பகுதியாகப் பிரித்து நான்கு பதிவுகளாக பிரித்து இடுகையிடுகின்றேன்.

மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன் வசிட்டனிடம் வருந்துதல்

ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது, 'தொல் குலத்
தாயரும், தந்தையும், தவமும், அன்பினால்
மேய வான் கடவுளும், பிறவும், வேறும், நீ;

அரசியல் படலத்தில் கூறிய அப்பெருமையெல்லாம் பொருந்தியவனான அந்தத் தயரத மன்னன் ஒரு நாள் பிரமனுக்கு ஒப்பாகத் திகழும் தூய்மை பொருந்திய மாமுனிவனாகிய வசிட்ட முனிவனை வணங்கி பழமை பொருந்திய எமது குலத்தாய்மாரும் தந்தைமாரும்தவப்பயன்களும் அன்பு கொண்டு நான் விரும்பும் கடவுளும் மற்றையோரும், வேறுபட்ட உயிர்களும் அனைத்தும் எனக்குத் தாங்களே தாம்.

'எம் குலத் தலைவர்கள், இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்,
மங்குநர் இல் என, வரம்பு இல் வையகம்,
இங்கு, நின் அருளினால், இனிதின் ஓம்பினேன்.

எமது சூரிய குலத்தலைவர்கள் எல்லோரும் தமது குல முதல்வனான சூரியனை விடவும் தங்கள் குலம் விளக்க முறும்படியாக இவ்வுலகை ஆதரித்துக் காத்தனர் புகழில் மயங்கியவர்கள் இல்லை என்னுமாறு எல்லைகாண இயலாத இவ்வுலகத்தை இங்கு, இவ்வயோத்தியிலிருந்தே உனது அருளின் உதவியால் இனிமையுறக் காத்து வந்தேன்.

அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;-
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ.

நான் ஆட்சி செய்த அறுபதினாயிரம் ஆண்டுகளும் கழிந்து போகும்படி உற்ற பகைவர்களை ஒடுங்குமாறு செய்து இவ்வுலகத்தைக் காத்து வந்தேன். எனக்கு வேறு ஒரு குறைவும் இல்லை. எனது ஆட்சிக்குப் பிறகு இந்த உலகம் நல்லாட்சியின்றி குழப்பமடைய நேரிடும் என்று ஒரு மனக்கலக்கம் எனக்கு இருக்கிறது.

'அருந் தவ முனிவரும், அந்தணாளரும்,
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும், என் அகத்தை' என்றனன்.

அரிய தவத்தை உடைய முனிவர்களும் அறவோர்களாகிய அந்தணர்களும் யாதும் வருத்தமுறுதல் இல்லாமலே துன்பமற்று நல்வாழ்விலே இருந்தார்கள். மக்கள் பேறில்லாத எனது ஆட்சிக்குப் பிறகு அப்பெரியவர்கள் மிகவும் துன்பத்தாலே வருந்துவார்களே என்பதொரு அரிய துயரமானது எனது மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது என்றான்.


முன்னம் அமரர்க்குத் திருமால் அருளியதை வசிட்டன் சிந்தித்தல்

முரசு அறை செழுங் கடை, முத்த மா முடி,
அரசர் தம் கோமகன் அனைய கூறலும்,
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்-

முரசு முழங்கும் கடை வாயிலை உடையவனும் முத்து முதலிய மணிகளால் அமைந்த மணிமுடி தரித்திருப்பவனுமான, மன்னர் மன்னனாகிய தயரதன் அத்தகைய சொற்களைச் சொல்லும், அது கேட்ட மணம் செறிந்த தாமரை மலரின் அகவிதழ் உச்சியில் அமர்ந்திருப்பவராகிய மேலான நான் முகனது மகனாகிய வசிட்டன் பின்வருவனவற்றை தனது மனத்திலே நினைப்பானாயினான்.

அலை கடல் நடுவண், ஓர் அனந்தன் மீமிசை,
மலை என விழி துயில்வளரும் மா முகில்,
'கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென்' என்று,
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையே.

அலைகள் மிகுந்துள்ள பாற்கடல் நடுவே ஒப்பற்ற ‘அனந்தன்’ எனும் பாம்பணை மேலே கரியமலை போல கண்வளர்கின்ற பெரிய மேகம் போன்ற (நிறமும், செயலுமுடைய) திருமால் உயிர்களைக் கொல்லுதலே தொழிலாக உடைய அரக்கரின் கொடுமையைத் தீர்ப்பேன் என்று அவ்வரக்கர்களால் வருந்தும் தேவர்களுக்கு சொன்ன வாக்குறுதியை.

முந்திய பாடலில் ‘எண்ணினான்’ என்பதனுடன் “வாய்மையை” என்பது முடிகிறது. அலைகடல் என்று பொதுவாகக் கூறினாலும். திருமாலின் உறைவிடமான ‘பாற்கடல்’ என்று பொருள் உரைக்கப்பட்டது. மீமிசை: உருபின் மேல் உருபு வந்து ‘மிக மேலே’ என்ற பொருள் தந்து நின்றது. ‘மலை’ என்ற பொதுச்சொல்லும் திருமாலைக் குறிப்பதாதலின் ‘கரியமலை’ என்ற பொருளை உடையதாயிற்று. தேவர்களுக்கு அரக்கரால் மரணமில்லை என்பதை உணர்த்த ‘அமரர்’ என்றார். அமரர்: மரணமற்றவர். வல்மை: வாக்குறுதி. அடுத்து வரும் 23 பாடல்கள் தேவர்களுக்குத் திருமால் வாக்குறுதி அளித்த செயலை விரித்துரைப்பனவாகும்.


பாக சாதனந்தனைப் பாசத்து ஆர்த்து, அடல்
மேகநாதன், புகுந்து இலங்கை மேய நாள்,-
போக மா மலர் உறை புனிதன்,- மீட்டமை,
தோகை பாகற்கு உறச் சொல்லினான் அரோ.

சுடுகின்ற தொழிலை உடைய அரக்கர்களால் வானுலகில் வாழும் தேவர்கள் வாழ்வறிந்து நஞ்சுதங்கிய மிடற்றை உடைய சிவபெருமானது பாதங்களை அடைந்து தம
சுடுகின்றது துன்பத்தைக் கூறலும் மேலே நிகழ வேண்டியவைகளை முன்னரே உணர்ந்துள்ள அப்பெருங்கடவுளான சிவபெருமான், இனி யான் அரக்கருடன் போர்புரிய மாட்டேன் என மறுத்து உரைத்து அவ்வமரர்களுடன் நான்முகனது இருப்பிடம் நோக்கிச் சென்றான்.

இருபது கரம், தலை ஈர்-ஐந்து, என்னும் அத்
திருஇலி வலிக்கு, ஒரு செயல் இன்று, எங்களால்;
கரு முகில் என வளர் கருணை அம் கடல்
பொருது, இடர் தணிக்கின் உண்டு' எனும் புணர்ப்பினால்.

இருபது கைகளும். பத்துத்தலைகளும் உடையவன் என்று சொல்லப்படும் அந்த அருட் செல்வமில்லாத இராவணனது உரவலிமை, வரவலிமை ஆகிய வல்லமைக்கு எங்களால் ஒரு எதிர்ச் செயலும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம். கரிய மேகம் போல பாற்கடலில் கண்வளர்கின்ற கருணைக் கடலாகிய திருமால் பொருது அவ்வரக்கருடன் போரிட்டு, எங்கள் துன்பத்தைத் தணித்தால்தான் எங்களுக்கு உய்வுண்டு என்னும் கருத்தினால்.

திரை கெழு பயோததித் துயிலும், தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்,
கர கமலம் குவித்து இருந்த காலையில்,-
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன்,

அலைகள் கெழுமிய பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் தெய்வத்தன்மை பொருந்திய உயர்ந்த மரகதமலை போன்ற திருமாலை மனத்தால் வணங்கித் துதித்து தாமரை போன்ற கைகளைக் கூப்பி தியானித்து இருந்த போது மேலான கதியிது என உணர்ந்து துதிப்பவர்களுக்கு காலம் தாழ்த்தாது உதவும் திருமால்

‘வந்து தோன்றினான்’ என்ற அடுத்த பாடல் தொடருடன் பொருள்முடிவு பெறும்.

கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவபோல், கலுழன்மேல் வந்து தோன்றினான்.

ஒரு கருமை நிறமான மேகம் தாமரை மலர்த் தொகுதியை மலர்த்திக் கொண்டும், நீண்ட இரு சுடர்களை இருபுறத்தும் ஏந்திக்கொண்டும், செம்பொன்னால் ஆகியதொரு மலை மேல் ஏறிவருவதைப் போல மலர்ந்த தாமரையில் அமர்ந்திருக்கும் இலக்குமியோடும் அம்மேரு மண்டபம் பொலிய கருடன் மீது வந்து காட்சி தந்தான்.

எழுந்தனர், கறைமிடற்று இறையும்; தாமரைச்
செழுந் தவிசு உவந்த அத் தேவும் சென்று, எதிர்
விழுந்தனர் அடிமிசை விண்ணுளோரொடும்;
தொழும்தொறும், தொழும் தொறும், களி துளங்குவார்.

நீலகண்டனாகிய இறைவனும், தாமரையாகிய செழித்த ஆசனத்தினை விரும்பி அமர்ந்திருக்கும் நான்முகனும் திருமாலின் திருவடிகளை வணங்கி தேவர்களொடும் எழுந்தவர்களாகி, அங்குத் தோன்றிய திருமாலுக்கு எதிரே சென்று, அவரை துதித்துத் தொழும் போதெல்லாம்மகிழ்ச்சியால் ஆடுவாராகி நின்றனர்.

ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்,
சூடினர், முறை முறை துளவத் தாள்-மலர்.

அசுரர்கள் இறந்து பட்டார்கள் என மனம் மகிழும் பொருமலால் அத்தேவர்கள் மகிழ்ச்சி என்னும் தேனைப் பருகி, எதுவும் அறியாதவர்களாய் ஆடியும். பாடியும் அங்கும் இங்குமாய் ஓடினவர்களாக அப்பரமனது துழாய் மணக்கும் பாத மலர்களை வரிசை வரிசையாகச் சென்றுவணங்கித் தலையில் சூடிக்கொண்டார்கள்.

பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,
என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்,
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து, அரி
துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான்.

பொன்மலையாகிய மேருவிலிருந்து கீழே இறங்குகின்ற ஒரு மேகத்தின்அழகுதோன்ற என்னைஆளாக ஆட்கொண்டிருக்கும் கலுழனுடைய தோள்களில் இருந்து ஆகாயமளாவிய சிகரத்தை உடைய அம் மண்டபத்தை அடைந்து சிங்க வடிவுடைய பொன்ஆசனத்தின் மேல் எம்பெருமானாகிய திருமால் பொலிவுறத் தோன்றலானான்.
விதியடு முனிவரும், விண்ணுளோர்களும்,-
மதி வளர் சடைமுடி மழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து, அயல் இருந்துழி-
கொதி கொள் வேல் அரக்கர் தம் கொடுமை கூறுவார்:

நான்முகனும், முனிவர்களும் விண்ணுலகில் வாழும் தேவர்களும் பிறைச் சந்திரன் வாழும் சடை முடியுடைய, மழுவாளியான சிவபிரானும் மிகுந்த வியப்புடன், மகிழ்ந்து திருமாலுக்கு அருகிலமைந்த ஆசனங்களில் இருந்த போது கொதிக்கும் வேலை உடைய அரக்கர்களது கொடுந்தொழிலைச் சொன்னார்கள்.

ஐ-இரு தலையினோன் அனுசர் ஆதியோன்
மெய் வலி அரக்கரால், விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன் -திருவின் நாயக!-
உய் திறம் இல்லை' என்று உயிர்ப்பு வீங்கினார்.

இலக்குமிக்கு நாயகனாகிய பெருமானே! பத்துத் தலைகளை உடைய இராவணன் அவனுக்குப் பின் பிறந்தவர்கள் முதலான உடல் வலிமை மிக்க அரக்கர்களால் விண்ணுலகமும், மண்ணுலகமும் தாம் செய்துள்ள புண்ணியங்களை இழந்து வருந்துகின்றன. அவை உய்வதற்கு வழியே இல்லை என்று கூறி, பெரு மூச்சு விட்டனர்.

'எங்கள் நீள் வரங்களால், அரக்கர் என்று உளார்,
பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இது தீர்த்தி; இல்லையேல்,
நுங்குவர் உலகை, ஓர் நொடியில்' என்றனர்.

எங்களுடைய மிகுந்த வரபலத்தால் அரக்கர் என்னும் ‘கொடியவர்கள் வளர்ந்தோங்கிய மூவுலகத்துயிர்களையும் பொருது கொன்றனர். அழகிய கண்களையுடைய தலைவனே இனி, இவ்வரக்கர்களின் கொடிய செயலைத் தீர்க்கவில்லையானால் வெகுவிரைவில் உலகம் முழுவதையும் அழித்துவிடுவர் என்றார்கள்.

என்றனர், இடர் உழந்து, இறைஞ்சி ஏத்தலும்,
மன்றல் அம் துளவினான், 'வருந்தல்; வஞ்சகர்-
தம் தலை அறுத்து, இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீர் கேண்ம்' என, உரைத்தல் மேயினான்:

என்று கூறியவர்களான தேவர்கள் துன்பத்தால் வருந்தி திருமாலைத் துதித்து வணங்கிடவும் மணமும், அழகும் உடைய துழாய் மாலையணிந்த திருமால் அத்தேவர்களை நோக்கி வருந்தாதீர்கள்! வஞ்சக அரக்கர்களின் தலைகளைத் துணித்து உலகத்தின் துன்பத்தைத் தணிப்பேன் அதற்குரிய தொன்றைக் கேளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தான்.

'வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்,
கானினும், வரையினும், கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று' என,
ஆனனம் மலர்ந்தனன் -அருளின் ஆழியான்:

விண்ணுலகில் வாழும் தேவர்கள் ஆகிய நீங்கள் எல்லோரும் குரங்கினங்களாக காடுகளிலும், மலைகளிலும், அம்மலைத் தாழ் வரைகளிலும் சென்று பிறப்பீராக என்று கருணைக் கடலான திருமகள் நாயகன் திருவாய் மலர்ந்தருளினான்.

'மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்,
தசரதன், மதலையாய் வருதும் தாரணி.

கானல் நீரைப் போன்றவர்களாகிய அரக்கர்களுடைய வரபலத்தையும், வாழ்வையும் எமது குறி தவறாத அம்புகளால் சாம்பலாக்க (அழிக்க) யாமே, யானை, தேர், காலாள் என்னும் கடல் போன்ற நாற்பெருஞ்சேனைகளை உடைய வேந்தனான தயரதன் புத்திரனாக உலகத்தில் வந்து அவதரிக்கின்றோம்.

'வளையடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
வளைமதில் அயோத்தியில் வருதும்' என்றனன்.

எமது படைக்கலங்களான சங்கும், சக்கரமும், வடவா முகாக்கினியும் தீய்ந்து போகச் செய்யும் நஞ்சினை உடைய எமது படுக்கையான அனந்தனும் தம்பியராகப் பிறந்து எம்மை அடிவணங்க பூமியில் சென்று சுற்றும் வளைந்த மதிலை உடைய அயோத்தி மாநகரில் அவதரிப்போம் என்றான்.

என்று அவன் உரைத்தபோது, எழுந்து துள்ளினார்;
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;-
'மன்றல் அம் செழுந் துளவு அணியும் மாயனார்,
இன்று எமை அளித்தனர்' என்னும் ஏம்பலால்.

அத்திருமால் கூறியருளிய போது கேட்ட அத்தேவர்கள் அனைவரும் மணம் பொருந்திய, அழகிய துழாய்மாலை அணியும் மாயனாகிய திருமால் இன்று எங்களை எல்லாம் காப்பாற்றி அருளினார் என்னும் மகிழ்ச்சியால் எழுந்து நின்று ஆடினார்கள், நன்மையான மங்கல கீதம் பாடினார்கள்.

'போயது எம் பொருமல்' என்னா, இந்திரன் உவகை பூத்தான்;
தூய மா மலர் உளோனும், சுடர்மதி சூடினோனும்,
சேய் உயர் விசும்பு உளோரும், 'தீர்ந்தது எம் சிறுமை' என்றார்;
மா இரு ஞாலம் உண்டோன், கலுழன்மேல் சரணம் வைத்தான்.

எங்கள் துயரம் தீர்ந்தது என்று கூறி இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். தூய அழகிய தாமரையில் வாழும் பிரமனும், ஒளியுடைய சந்திரனைத் தலையில் அணிந்துள்ள சிவபெருமானும், மிக உயர்வான விண்ணுலகிலே வாழ்பவர்களும் எமது தாழ்வு தீர்ந்தது என்றார்கள். அகன்ற பெரிய இவ்வுலகை உண்டருளிய திருமால் தான் ஏறிவந்த கருடன் மீது திருவடிகளை வைத்தான்.

என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
"முன்னரே எண்கின்வேந்தன் யான்"-என, முடுகினேன்; மற்று,
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்' என்றான்.

என்னை ஆட்கொண்ட தலைவனாகிய திருமால் கருடன் மீது எழுந்தருளிச் சென்றதன் பின்பு நான்முகன், தேவர்களைப் பார்த்துப் பேசலானான். முன்பே, கரடிகட்கு அரசனான ‘சாம்பவந்தன்’ என்பவனாக நான் வந்து பிறந்துள்ளேன். மற்றும் அப்படியே நீங்கள் எல்லோரும் சென்று அவதரித்திடுவீராக என்று கூறினான்.

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான், 'எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்' என்ன்
இரவி, 'மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்' என்று ஓத்
அரியும், 'மற்று எனது கூறு நீலன்' என்று அறைந்திட்டானால்.

கற்பகம் முதலிய ஐந்து மரங்களையுமுடைய தேவர்களுக்கு அரசனான இந்திரன் சொல்லலுற்றான்.எனது அம்சமானது. பகைவர்களுக்கு இடி போன்ற வாலியும், அவன் மகன் அங்கதனும் ஆகும் என்றுரைக்க, சூரியன் பின்னை. எனது அம்சம் அங்கேயே அந்த வாலிக்குத் தம்பியான சுக்கிரீவன் என்று சொல்ல நெருப்புக் கடவுள் பின்னை. எனது அம்சம் ‘நீலன்’ என்னும் வானர வீரனாகும் எனக் கூறினான்.

வாயு, 'மற்று எனது கூறு மாருதி' எனலும், மற்றோர்,
'காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின்மீது
போயிடத் துணிந்தோம்' என்றார்; புராரி, 'மற்று யானும் காற்றின்
சேய்' எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.

காற்றுத் தேவனான வாயு எனது அம்சம் மாருதி என்று சொல்லலும், மற்ற தேவர்கள் எல்லோரும் பகைவரைச் சினக்கும் வானரங்கள் ஆகி, பூமியிலே சென்று பிறக்க முடிவு செய்துவிட்டோம் என்றார்கள். திரிபுரத்தை எரித்த சிவபிரான் யானும் வாயுகுமாரனான அனுமனாகப் பிறக்கிறேன் என்று கூறலானான். எனவே, மற்றுமுள்ள எல்லாத் திசைகளிலும் வாழ்பவர்க்கும் எந்தத் துன்பமும் உண்டோ (இல்லை என்பதாம்).

அருள் தரும் கமலக் கண்ணன் அருள்முறை, அலர் உளோனும்,
இருள் தரும் மிடற்றினோனும், அமரரும், இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில், மண்ணில், வானரர் ஆகி வந்தார்;
பொருள் தரும் இருவர் தம் தம் உறைவிடம் சென்று புக்கார்.

கருணைமிக்க தாமரைக் கண்ணனாகிய திருமால் அருள் செய்த முறைப்படியே தாமரை மலரில் உறையும் பிரமனும் இருண்டமிடற்றை உடைய சிவபிரானும், மற்றத் தேவர்களும் மேலே கூறிய முறைப்படி வடிவெடுத்தவராகி இருண்ட காடுகளிலும் நிலத்திலும் குரங்குகளாக உருமாறி வந்துள்ளார்கள். எல்லோரும் பொருட்டாகக் கருதிப் போற்றும் பிரமன், சிவன் ஆகிய இருவரும் தங்கள் உறைவிடங்களுக்குச் சென்று சேர்ந்தார்கள்.

புதல்வரை அளிக்கும் வேள்வி செய்ய வசிட்டன் கூறுதல்

ஈது
, முன் நிகழ்ந்த வண்ணம் என, முனி, இதயத்து எண்ணி,
'மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்; ஏழ்-ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி,
தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும்' என்றான்.

ஆறாவது பாட்டுத் தொடங்கி. இருபத்து எட்டாம் பாட்டுவரைகூறப்பட்ட நிகழ்ச்சி யாவும். திருமால் முன்பு தேவர்களுக்கு அருள் செய்ததனை வசிட்டன் தனது மனத்தில் சிந்தித்தனவாகும்.

இது முன்பு நிகழ்ந்த செய்தியாகும் என்று, வசிட்டன் மனத்தில் நினைத்து மன்னனைப் பார்த்து திசை எங்கும் சென்று போர் செய்து வென்ற வலிய தோள்களை உடைய மன்னனே! நீ (புத்திரப் பேற்றை எண்ணி) வருந்தாதே. ஈரேழாக எண்ணப்படும் உலகம் யாவையும் காக்கும் புத்திரர்களைத் தரவல்ல வேள்வியை குற்றமின்றி நீ முயன்று செய்தால் ஐய! நின்மனத் துயர் நீங்கும் என வசிட்டன் கூறினான்.

வேள்வி செய்ய வேண்டுவது யாது என தயரதன் வினவுதல்

என்ன மா முனிவன் கூற, எழுந்த பேர் உவகை பொங்க,
மன்னவர்மன்னன், அந்த மா முனி சரணம் சூடி,
'உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ?
அன்னதற்கு, அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி' என்றான்.

மாமுனிவனாகிய வசிட்டன் கூற அது கேட்ட மன்னர் மன்னனாகிய தயரதன் மிகுந்த மகிழ்ச்சி பொங்க எழுந்து மாபெரும் முனிவனாகிய வசிட்டனது பாதங்களை வணங்கி, தலைக்கு அணியாக அணிந்து தங்களையே அடைக்கலம் அடைந்திருக்கும் அடியவனாகிய எனக்கு துன்பம் வந்து சேர்தல் உண்டோ? அந்த வேள்வியைச் செய்வதற்கு அடியவனாகிய நான் செய்ய உரிய பணி விடையை இனிதே எனக்குத் தருக என்று கூறினான்.

கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு வேள்வி செய்யுமாறு வசிட்டன் உரைத்தல்

'மாசு அறு சுரர்களோடு மற்றுளோர் தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன், விபாண்டகன், கங்கை சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன், இருங் கலை பிறவும் எண்ணின்
தேசுடைத் தந்தை ஒப்பான், திருவருள் புனைந்த மைந்தன்,

குற்றமற்ற தேவர்களுடனே மற்று முள்ள அசுரர் முதலானோரையும் பெற்ற தந்தையான காசிபர் பெற்றகுமாரனும், கங்கையாற்றைச் சடையில் தாங்கிய சிவபெருமானும் புகழ்ந்து கூறுவதற்கு ஒத்த பெருமையுடயவனும், மேலான கலையறிவு போன்றவைகளை எண்ணினால் சிறந்த தனது தந்தையான காசிபனை ஒத்தவனும் ஆகிய விபாண்டகன் என்னும் முனிவனது திருவருளைப் பெற்றுத் திகழும் புத்திரன்.

'வரு கலை பிறவும், நீதி மனுநெறி வரம்பும், வாய்மை
தரு கலை மறையும், எண்ணின், சதுமுகற்கு உவமை சான்றோன்,
திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும்.

வளர்ந்த கல்வியாலும், கேள்வி முதலிய பிறவற்றாலும் நீதியைக் கூறும் மனு நூல் வரம்பாலும், உண்மையை உணர்த்தும் வேதங்களை ஓதி யுணர்ந்ததாலும் நினைத்துப் பார்த்தால் நான்முகனுக்கு ஒப்பாகிய பெருமை உடையவனும், பலவித மாறுபட்ட இயற்கையை உடைய உலகத்தவரின் தன்மையை அறியாதவனும், கலைமான் கொம்பு போன்ற கொம்பை முகத்தில் உடையவனுமான சிருங்கன் என்னும் பெயருடைய உயர்ந்த தவத்தை உடைய முனிவன் வரவேண்டும்.

'பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன், மா தவத்தன், எண்ணின்
பூந் தவிசு உகந்து உளோனும், புராரியும், புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின், தணையர்கள் உளர் ஆம்' என்றான்.

பாம்பினது பல தலைகளாலும் தாங்கப் பெற்ற இவ்வுலகில் வாழும் மனிதரை மிருகங்கள் என நினைக்கும் மனத்தை உடையவனும், சிறந்த பெருந்தவம் உடையவனும், எண்ணிப் பார்த்தால் தாமரை ஆசனத்தை விரும்பி அதில் அமர்ந்துள்ள பிரமனும், திரிபுரத்தை அழித்த சிவனும் புகழத் தக்க பொறையாளனுமான அக்கலைக்கோட்டு முனிவனாலே மகப் பேறளிக்கும் வேள்வியை நிறைவேற்றினால் புத்திரர்கள் உண்டாவார்கள் என்றான்.

கலைக்கோட்டு முனிவனை அழைத்து வரும் வழி பற்றி தயரதன் கேட்டல்

ஆங்கு, உரை இனைய கூறும் அருந் தவர்க்கு அரசன், செய்ய
பூங் கழல் தொழுது, வாழ்த்தி, பூதல மன்னர் மன்னன்,
'தீங்கு அறு குணத்தால் மிக்க செழுந் தவன் யாண்டை உள்ளான்?
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி, இறைவ!' என்றான்.

இத்தகைய நல்லுரை கூறியஅரிய தவத்தினர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் வசிட்ட முனிவனது அழகிய பாத மலர்களை வணங்கிப் போற்றி உலகத்து அரசர்க்கெல்லாம் அரசனான தயரதன், குற்றமற்ற நற்குணங்களால் உயர்ந்த செழுமைமிக்க அந்தத் தவமுனிவன் எங்கிருக்கிறான்? இங்கு நான் அம்முனிவனை அழைத்துக் கொண்டு வரும் விதத்தை எனக்குத் தெய்வம் போன்றவனே! அருளிச் செய்வாயாக என்றான்.


பால காண்டத்தில் நான்காவது படலம் அரசியற் படலமாகும்.இதில் பனிரெண்டு பாடல்கள் உள்ளன. கோசல நாட்டு மன்னனாகிய தயரதச் சக்கரவர்த்தியினது ஆட்சி சிறப்பைக் கூறும் பகுதி இது. தயரதனின், பெருமை, குடைச் சிறப்பு,அரசு செய்யும் திறம் ஆகியவைகளை இந்தப் படலத்தில் காணலாம். முதல் ஆறு பாடல்களால் தயரத வேந்தனது தனிப் பெரும் சிறப்பை கூறுகின்றார்.

தயரதன் மாண்பு

அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான்.

அத்தகைய மாண்பு மிகுந்த நகரத்துக்கு அரசனாய் இருப்பவன் மன்னர்களுக் கெல்லாம் மன்னனான சக்கரவர்த்தி, மாட்சிமை மிக்க தனது ஒப்பில்லாத செங்கோலாகிய ஆட்சி முறை ஏழு உலகங்களிலும் செல்லுமாறு ஆட்சி செய்து நிலைத்தவனாவான். மேலும் அவன் இந்தப் பெருமை பொருந்திய இராமாயணம் என்னும் கதைக்குத் தலைவனான இராமன் என்ற பெயரை உடைய வன்மையும், பெருமையும் உள்ள வீரக்கழல் அணிந்த நம்பியைப் பெற்ற நல்லறத்தின் வடிவமுமாவான்.

ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,
ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,
நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற
பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ.

முதன்மையாகிய மெய்யறிவும், அருளும் தனக்குக் கூறிய அறநெறி தவறாமையும், சாந்த குணமும் குற்றமற்ற வலிமை பொருந்திய வீரமும், கொடையும், நீதியின்கண் நிற்றலும் போன்ற நற்பண்புகளாகிய இவை மற்ற அரசர்களுக்குப் பாதியே நின்றன. அக்குணங்கள் முழுவதும் இந்தத் தசரத மன்னனுக்கே ஏவல் கேட்டு நிற்பனவாகும்.

மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்
செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ.

நிறைந்த கடலால் சூழ்ப்பட்டதும் பழமை வாய்ந்ததுமான இந்த உலகத்தில் வாரி முகந்து, தானம் செய்கின்ற கையில் நிறைந்த நீரினால் நனைக்கப் பெறாத கைகளும் இல்லை. நிலைபெற்ற வேத நெறியில் நிற்கும் அரசர்களுக்கு பொருந்தியனவான வேறு எவரும் செய்ய இயலாது நின்ற யாகங்கள் இந்த தசரத மன்னனால் செய்யப்பட்டு மறக்கப் பெற்றவையாகும்.

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான்.

மன்னர் மன்னனான அத்தயரதன் தனது ஆட்சிக் கடங்கிய குடிமக்கள் எவர்க்கும் அன்பு செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான். நன்மை செய்வதில் தவத்தைப் போன்றவனாவான் தாய், தந்தையரின் கடைசிக் காலத்தில் முன்னே நின்று, இறுதிச் சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும் தன்மையினால் அவர்கள் பெற்ற மகனை ஒத்திருப்பான். குடிமக்களுக்கு நோய்வருமாயின் அதைப் போக்கி, குணப்படுத்தும் மருந்து போன்றவனுமாவான். நுணுக்கமான கல்வித் துறைகளை ஆராயப் புகும் போது நுட்பமான பொருளைக் காணும் அறிவினையும் ஒத்திருப்பான்.

ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம்.

அவ்வரசன் தன்னிடம் யாசிப்பவர்கள் என்னும் கடலை ‘ஈதல்’ என்றும் தெப்பம் கொண்டு கடந்தான். அறிவு என்ற கடலை, எண்ணற்ற நுண்ணிய நூலாராய்ச்சி என்ற படகு கொண்டு தாண்டினான். பகைவர்கள் என்ற கடலை வாள் முதலிய படைத்துணை கொண்டு, கோபம் காட்டி நீந்தினான். செல்வ வளத்தாலே தொடர்ந்து வரும் இன்பம் என்னும் கடலை மனம் நிறைவு பெறும்படி துய்த்தே கடந்தான்.

வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்
உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;
தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே.

தோலால் ஆன உறையை உடைய வேலைத் தாங்கிய அரசர்களுக் கெல்லாம் அரசனாகிய நீக்க முடியாத பெரும்புகழ் படைத்த தயரதன் என்னும் பெயருடைய வள்ளல் ஆட்சியில் வெள்ளப் பெருக்கும், பறவைகளும், விலங்குகளும், விலைமாதர் உள்ளமும் ஒரேவழியில் தம் எல்லை கடவாது சென்றன. இவ்வாறு செய்து புகழில் நிலைத்து நின்றான்.

உலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்

நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்
பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி
வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே.

சக்கரவாளம் என்னும் பெயருடைய உலகைச் சூழ்ந்திருக்கும் பெருமலையே மதிலாகவும் நீண்ட, பரப்புடைய பெரும்புறக்கடல் என்னும் பெயருடைய கடலே அகழியாகவும் மலைகள் யாவும், பலவகை மணிகள் நிறைந்த அழாகான மாளிகைகள் ஆகவும் இருந்தது. நிலம் முழுவதுமே அப்பேரரசனது தலைநகரமாகிய அயோத்தி போன்றிருக்கிறது.

பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மேவரும் கை அடை வேலும் தேயுமால்;
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால்.

எதிர்த்து வரும் எவருடைய வலிமைக்கும் ஈடுகொடுத்து நேருக்கு நேர் நின்று வெல்லும் போரை அடிக்கடி செய்வதால் ஓரமும், முனையும் மழுங்கி அவற்றை அடிக்கடி நீட்டுவதாலே விரும்புகின்ற கைவிடாப் படைகளான வேலும், வாளும் தேயும். தன்னை வணங்கும் அரசர்களது நீண்டமணி மகுட வரிசையால் தயரத மன்னனது கால்களில் பொருந்தியுள்ள பொன்னால் ஆகிய வீரக்கழல்களும் தேயும்.

தயரதனின் குடையும் செங்கோலும்

மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,
தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,
விண்ணிடை மதியினை 'மிகை இது' என்பவே.

நாளுக்கு நாள் வளர்ந்து, தேய்தலில்லாமல் உலகிடை வாழும் உயிர்கள் தோறும் குளிர்ந்த நிழலை எங்கும் பரப்பவும் இருளே இல்லாமல் நீக்கவும், பெருமை மிக்க தயரதனது வெண்கொற்றக் குடையாகிய மதியே போதும் (பொருந்தும்) ஆதலாலே வானில் உள்ள வளர்தலும் தேய்தலுமுடைய சந்திரனை இந்த மதி கோசல நாட்டினுக்கு வேண்டாத ஒன்று என்பர்.

தயரதன் அரசு செய்யும் திறம்

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.

வயிரம் இழைத்துச் செய்யப்பட்ட அழகிய அணிகலன்களை அணிந்துள்ள சிங்கம் போன்று வலிமை உள்ள தயரத மன்னன், மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர் போலக் கருதிக் காத்துவருவதால், குற்றமில்லாத இப்பேருலகத்திலே இயங்கியற் பொருள், நிலையிற் பொருள்களாக இருந்து வாழும் உயிரெல்லாம் தங்கி வாழ்வதற்குத் தக்க பெருமைமிக்க உடம்பாகவும் ஆனான்.

குன்றென உயரிய குவவுத் தோளினான்,
வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,
ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை
நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே.

மலைபோலும் வளர்ந்து ஓங்கிய திரண்ட தோள்கள் கொண்ட தயரதனுடைய வெற்றிமிக்க ஆணைச் சக்கரமானது வெம்மையுடைய சூரியனோ என்னும் படிமிக உயரமான வானிலே நின்றும் ஒன்றாகிய பரம்பொருளைப் போல உலகில் வாழும் சர, அசரங்களாகிய உயிர்கள் தோறும் உலாவி நின்று பெரிதும் காத்தல் தொழிலைச் செய்யும்.

'எய்' என பழு பகை எங்கும் இன்மையால்,
மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய்எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான்.

அம் மன்னனுக்கு எவ்விடத்திலும் விரைந்து எழுகின்ற பகைவர்கள் இல்லாமையால் போர்த் தொழிலே பெறாமையால் தினவு கொண்டனவான. மத்தளம் போன்ற திரண்ட தோள்களை உடைய அவ்வரசன் உலகில் வாழும் உயிர்கள் அனைத்தையும் வறியவன் தனக்குள்ள ஒரே வயலைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது போல பாதுகாத்து இனிமையான ஆட்சிசெய்து வருகிறான்.

பால காண்டத்தில் நகரப் படலத்தின் தொடர்ச்சி........

கொடிகள் பறக்கும் அழகு

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின,
முகிலொடு வேற்றுமை தெரிகலா, முழுத்
துகிலொடு நெடுங் கொடிச் சூலம் மின்னுவ்-
பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே.

அகிலின் செழுமையான புகை மாளிகை எங்கும் கலந்தவைகளாய், மேகத்துடன் வேற்றுமை அறிய முடியாத பெரிய கொடிகளுடன் நீண்ட கொடி மரங்களின் நுனியில் நாட்டப்பட்ட சூலங்கள் ஒளிர்பவை, ஒளி வீசும் மின்னல் வரிசையின் பரப்பை ஒத்திருந்தன.

துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
கொடியிடைத் தரள வெண் கோவை சூழ்வன்-
கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே.

உடுக்கை போன்ற இடையினையும், பருத்த தனங்களையும் உடைய மயில் போன்ற சாயலை உடைய மகளிர், தங்கள் இரு கால்களிலும் சிலம்பு அணிந்து அவை ஒலிக்கும்படி நடக்கும் மாளிகைகளிலே கொடிகளுக்கு இடையில் முத்து மாலைகள் தொங்க விடப்பட்டுள்ளவை, மணம் மிக்க கற்பக மரங்களில் பூத்த மாலைகளை ஒத்திருந்தன.

காண் வரு நெடு வரைக் கதலிக் கானம் போல்,
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன்
வாள் நனி மழுங்கிட மடங்கி, வைகலும்
சேண் மதி தேய்வது, அக் கொடிகள் தேய்க்கவே.

பெரிய மலைகளில் காணப்படும் வாழை மரங்களை உடைய தோப்பைப் போல கொடிமரங்கள் நீண்ட கொடிகளின் தொகுதி மிகுந்துள்ளன. வானத்திலுள்ள சந்திரன் தன் ஒளிமிக மழுங்கி வளைந்து நாள்தோறும் தேய்ந்து போவது அந்த கொடிகள் உராய்வதன் காரணமாகத் தான்.

மாளிகைகளின் ஒளிச் சிறப்பும் மணமும்

பொன் திணி மண்டபம் அல்ல, பூத் தொடர்
மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.

பொன்னால் கட்டிய மண்டபம் அல்லாதவை மலர்களால் அமைந்த மண்டபங்களாம். பலர் கூடுமிடமாகக் கட்டிய பொது மன்றங்கள் அல்லாதவை மேன்மாடியோடு அமைந்த மாளிகைகளாம். செய் குன்றுகள் அல்லாதவை இரத்தினங்களைக் கொண்டு அமைத்த முற்றங்களாம். முற்றங்கள் அல்லாதவை முத்துப் பந்தல்களேயாகும்.

மின் என, விளக்கு என, வெயிற் பிழம்பு என,
துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ,
பொன்னுலகு ஆயது, அப் புலவர் வானமே!

உயர்ந்த பொன்னால் தொழில் திறம் அமைய கட்டப் பட்ட அந்த அழிவில்லாத மா நகரின் மின்னலைப் போலவும், விளக்கின் ஒளியினைப் போலவும் சூரியக் கதிர்களைப் போலவும் உள்ள ஒளி தன் மீது படுவதனால் அந்தத் தேவருலகு பொன் உலகாயிற்று.

எழும் இடத்து அகன்று, இடை ஒன்றி, எல் படு
பொழுதிடைப் போதலின், புரிசைப் பொன் நகர்,
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை
நிழல் எனப் பொலியுமால்-நேமி வான் சுடர்.

வட்ட வடிவமாக வானில் ஒளிரும் சூரியன் உதிக்கின்ற காலத்திலே கிரணங்கள் விரிந்தும் நடுப்பகலில் மிக்கும். மாலையில் மறையும் காலத்திலே மீண்டும் கிரணங்கள் மறைந்து போவது தீயைப் போல ஒளிரும் செந்நிறமான மாணிக்கங்களை ஒழுங்காக அமைத்த வட்டமான பொன்னால் அமைந்த மதில் உடைய அந்த நகரம் அயோத்தியாகிய பெண்ணினது நிழலைப் போலக் கதிரவன் விளங்கும்.

ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்த்
தோய்ந்த மா கடல் நறுந் தூபம் நாறுமேல்,
பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ?

நுட்ப வேலைப்பாடு அமைந்த மேகலை அணிந்த மகளிர் தமது கூந்தலுக்கு மணமூட்ட, மாளிகைகளிலே எழுப்பிய கரிய அகிற் புகையை உண்ட மேகங்கள் சென்று படிந்த அந்தப் பெரிய கடலும் அகிலின் நறுமணம் கமழும், என்றால மேகங்களிலிருந்து கீழே விழும் மழைத் தாரையின் தன்மையை அதுவும் அகில் மணம் கமழ்கிறது எனச் சொல்லவா வேண்டும்?

ஆடலும் பாடலும்

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை,-அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை,
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.

கூந்தல் வாரி முடிக்கமுடியாத நிலையில் உள்ள இளம் பெண்களின் குதலைச் சொற்கள் அழகிய குழலோசையை ஒத்திருக்கும். மங்கைப்பருவ மகளிரின் மழலை மொழிகள் மகர யாழின் இசையை ஒத்திருக்கும். வனப்பு பொருந்திய பெண்களது இனிய சொற்களகிய இன்னிசை, கள் விற்கும் பழையர்களின் சேரியிலே கூத்தர்கள் பாடும் இசையை ஒத்திருக்கும்.

கண்ணிடைக் கனல் சொரி களிறு, கால் கொடு
மண்ணிடை வெட்டுவ் வாட் கை மைந்தர்தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன்
சுண்ணம் அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன.

கோபத்தால் கண்களிலே நெருப்பைச் சொரியும் ஆண் யானைகள் கால்களால் நிலத்தை வெட்டுவனவாம். பார்ப்பவர் விரும்பும் அழகிய இளைஞர்களின் விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள் குழிகளை உடையனவாம். அந்தக் குழிகளை அவ்விளைஞர் அணிந்த வாசனைப் பொடிகள் தூர்ப்பனவாகும்.

பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச்
சிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்
அந்தம் இல் சில தியர்; ஆற்ற குப்பைகள்,
சந்திரன் ஒளி கெட, தழைப்ப, தண் நிலா.

பந்தாடுபவராகிய இளம் பெண்களிடமிருந்து (அவரது அணிகலங்களிலிருந்து) முத்துக்கள் சிந்துகின்றன அம்முத்துக்களைச் சேகரித்துச் சேர்க்கும் அளவில்லாத பணிப் பெண்கள் குவித்த அந்த முத்துக் குவியல்கள் சந்திரனது ஒளியும் குறையுமாறு குளிர்ந்த நிலா ஒளி தழைப்பனவாம்.

அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர்
கருங் கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ் மற்று, அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல்போல் தேய்வன் வளர்வது, ஆசையே.

நடன அரங்குகளிலே பெண்கள் நடனம் ஆடுவார்கள். அவர்களின் கருமையான கடைக்கண்களாகிய வேல்கள் காதல் மிக்க ஆடவர்களின் மனத்தை உருக்குவனவாம். பின்னும் அவ்வாடவரின் உயிர்கள் அப்பெண்களின் இடைகளைப் போல மெலிவனவாகும். அந்த மைந்தர்களுக்கு அம்மகளிரின் மீது ஆசை பெருகுவதாகும்.

பொழிவன சோலைகள் புதிய தேன் சில்
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன் அன்னவை நுழைய, நோவொடு
குழைவன, பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே.

சில சோலைகள் புத்தம் புதிய தேனைச் சொரிவன அத்தேனை விரும்பி தென்றலும் வண்டும் மெல்ல அச் சோலைகளில் நுழைவனவாம்.அவை நுழைய தலைவனைப் பிரிந்த மகளிரின் (காமத்தால்) கொதிக்கும் தனங்கள் வருத்தத்துடன் மெலிவனவாயின.

இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை
நிறங் கிளர் பாடலான் நிமிர்வ் அவ்வழி
கறங்குவ வள் விசிக் கருவி; கண் முகிழ்த்து
உறங்குவ, மகளிரோடு ஓதும் கிள்ளையே.

மகர யாழிலே எடுத்த (விரலாலே நெருடி கவர்ந்தெடுக்கப்பட்ட) இனிய இசையொலிகள் உள்ளக் கிளர்ச்சி தரும் பாடல்கள் காரணமாக வாய்ப்பாட்டோடு யாழ் இசை நலிந்தொலிப்பன, எடுத்தொலிப்பன. அந்த முறையில் வார் கட்டிய கருவியாகிய முழவுகள் ஒலிப்பன. அந்த இசையைக் கேட்டு பெண்களோடு பேசும் கிளிகள் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவனவாம்.

மங்கையரின் அழகு மேனி

குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுகத் தொழில்கொடு, பழிப்பு இலாதன
ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்,
உதைபடச் சிவப்பன, உரவுத் தோள்களே.

நாண் பூட்டிய வரியமைந்த வில் போன்ற நெற்றியையும், கோவைப் பழம் போன்ற வாயையும் உடைய பெண்களின் இரண்டு பாதங்களுக்கும் செம்பஞ்சு ஊட்டுதலாகிய தொழிலைக் கொண்டு பிறரால் பழித்துக் கூற இயலாதனவாகிய நெருங்கிய இதழ்களை உடைய தாமரை போன்ற பாதங்களால் உதை பட்டதனாலே ஆண்களின் வலிமை மிக்க தோள்கள் சிவந்து காணப்படும். (ஊடலால் தலைவி, தலைவனைக் காலால் உதைப்பதுண்டு. அதனால் அத்தலைவனது வலிய தோள்கள் சிவந்தன என்கிறார்.)

பொழுது உணர்வு அரிய அப் பொரு இல் மா நகர்த்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு எனப்
பழுது அறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்,
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே?

பொழுதை அறிவதற்கு அரிய அந்த ஒப்பற்ற பெருநகரில் உள்ள கற்பின் சிறப்பால் எல்லோரும் வணங்கத்தக்க பெருமையுள்ள பெண்களது ஒளி விளக்கு போன்ற, குற்றம் எதுவுமின்றித் திகழும் உடம்பினை பார்க்க விரும்பும் ஆசையால் தானே எழுதிய ஓவியங்களும் கண்களை இமைக்காதனவாய் உள்ளன.

தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு; அல்லன மகளிர் மேனியே.

குளிர்ந்த தாமரைப் பூவில் வாழும் இலக்குமி தேவி தங்கியிருக்கும் அயோத்தி நகர மாளிகைகள் மிக்க ஒளி வீசி நின்று இருளை ஓட்டுபவை செறிந்த ஒளியுடைய நெய் விளக்குகளின் விளக்கமோ மணிகளின் ஒளியோ அல்ல. அந்நகரத்து மகளிரின் மேனி ஒளியே.

மதங்கியரின் ஆடல் பாடல்

பதங்களில், தண்ணுமை, பாணி, பண் உற
விதங்களின், விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள்; அல்லன புரவித் தார்களே.

மத்தள ஒலி, தாள ஓசை, பாட்டு ஒலி இவைகளுக்குப் பொருந்த நாட்டிய நூல் முறைப்படி பல விதங்களாக பாதங்களால் சதிபெற வைத்து நடனம் ஆடுபவர்கள், ஆடல் பாடல் வல்ல பெண்கள் ஆவர். அந்தத் தாளச் சதியை விவரித்துக் காட்டுபவை அப்பெண்கள் கால்களில் அணிந்துள்ள சதங்கைகளும், அவ்வாறு ஆடுகின்ற குதிரைகளின் கால்களுமே.

மாந்தரின் மகிழ்ச்சி

முளைப்பன முறுவல்; அம் முறுவல் வெந் துயர்
விளைப்பன் அன்றியும், மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண் இடை; இளைப்ப, மென் முலை
திளைப்பன, முத்தொடு செம் பொன் ஆரமே.

அந்நகரத்துப் பெண்களின் முகத்திலே எப்போதும் புன்சிரிப்பு தொன்றுவன. அந்த புன்சிரிப்பு, அப்பெண்கள்பால் காதல் கொண்டஆடவர்க்குக் கொடிய துன்பத்தை உண்டாக்கும். அல்லாது, அம்மகளிரின் சிறிய இடைகள் நாள்தோறும் மெலிந்து இளைப்பனவாம் அவர்களது மெல்லிடை இவ்வாறு இளைக்க அம்மகளிரது மென்மையான தனங்கள் முத்து வடங்களும் பொன்னரி மாலைகளும் பூண்டு திளைப்பனவாகும்.

தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை, கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும்; விழும்தொறும், மண்ணும் கீழ் உறக்
குழை விழும்; அதில் விழும், கொடித் திண் தேர்களே.

நெருப்பென விழிக்கும் கண்களை உடைய ஆண் சிங்கங்களும் துணையான பெண்சிங்கங்களும் தங்குவதற்கு ஏற்றனவாகிய மலைக் குகைகளை விரும்பும். மலை போன்ற யானைகளின் மதநீர் மழை பொழியும். அவ்வாறு மழை சொரியும் தோறும் நிலமும் ஆழமாகுமாறு சேறாகும். அந்தச் சேற்றில் கொடிகளை உடைய வலிய தேர்கள் புதையுண்ணும்.

ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன,
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
ஓடுவார் இழுக்குவது, ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே.

மாலை சூடிய மகளிர் வாடிவிட்டன என்று இகழ்ந்து எறிந்து விட்ட மாலைகள் ஆடுகின்ற நெடிய குதிரைகளின் குளம்புகளைப் பிணிப்பனவாகும். ஊடல் இடையிலே நிகழ, பின் ஆடவருடன் கூடி மகிழும் மகளிரின் அழகிய தனங்களிலிருந்து வழித்து வீதியில் எறிந்த சந்தனத் தேய்வை அத்தெருவில் ஓடுபவர்களை வழுக்கி விழச் செய்வனவாம்.

இளைப்ப அருங் குரங்களால், இவுளி, பாரினைக்
கிளைப்பன் அவ் வழி, கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி; அவை ஒளிர, மீது தேன்
துளிப்பன, குமரர்தம் தோளின் மாலையே.

குதிரைகள் வீதியிலே ஓடும்பொழுது தமது குளம்புகளால் நிலைத்தைக் கிளறுகின்றன. அங்குக் கிளர்ந்து மேலெழுந்த புழுதியினாலே அக்குதிரைகளின் மீது ஏறிவரும் வீரர்கள் அணிந்த மணிகள் மறைவன ஆயின. அம் மணிகள் மறுபடியும் ஒளிவீசுமாறு வீரர்கள் தோள்களில் அணிந்த மாலைகள் தேன் துளிகளைச் சொரிந்தன.

விலக்க அருங் கரி மதம் வேங்கை நாறுவ்
குலக் கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ்
கலக் கடை கணிப்ப அருங் கதிர்கள் நாறுவ்
மலர்க் கடி நாறுவ, மகளிர் கூந்தலே.

விலக்குவதற்கு அரிய யானைகளின் மதநீர் வேங்கை மலர்களைப் போல மணக்கிறது.உயர்குடியில் பிறந்த கொடியை ஒத்த மகளிரின் வாய்கள் குமுத மலர் போல் விளங்குகின்றன. அம்மகளிரின் அணிகலன்களில் அளவிடற்கு அரிய ஒளிக் கதிர்கள் எங்கும் ஒளிர்கின்றன. அந்த மகளிரின் கூந்தல் மலர் மணம் கமழ்கிறது.

கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
யாவையும் வழங்கு இடத்து இகலி, இந் நகர்
ஆவணம் கண்டபின், அளகை தோற்றதே!

சிறந்த நகரங்களின் வரிசையிலே அயோத்தி நகருடன் சேர்ந்து எண்ணப்படாத அந்தத் தேவர் நகரமான அமராவதியை இந்த நகருக்கு இணையோ, அல்லவோ என்று எடுத்துச் சொல்வது எதற்கு?எல்லா வளங்களையும் தரும் விதத்திலே வேறுபட்டு விளங்குவதோடு இந்த நகரத்துக் கடைத் தெருவைப் பார்த்த பிறகு செல்வம் மிக்க தென்னும் அளகாபுரியே தோல்வியுற்றது.

அதிர் கழல் ஒலிப்பன் அயில் இமைப்பன்
கதிர் மணி அணி வெயில் கால்வ் மான்மதம்
முதிர்வு உறக் கமழ்வன் முத்தம் மின்னுவ்
மதுகரம் இசைப்பன்-மைந்தர் ஈட்டமே.

அந்நகரத்தில் அதிர்கின்ற வீரக் கழல்களின் ஒலி ஆர்ப்பரித்து ஒலிப்பனவாக. வேல் முதலிய படைக்கலங்கள் ஒளிர்வனவாக. ஒளிமிக்க மணிகளாலான அணிகலன்கள் எங்கும் ஒளிவீசுபவையாக. கத்தூரி மிகுதியும் கமழ்வதாக. அணிகலன்களில் அமைந்த முத்துக்கள் மின்னல் போல ஒளிர்வன. வண்டுகள் பண் பாடுவனவாக. இவ்வாறாக ஆடவர் கூட்டம் விளங்கியது.

வளை ஒலி, வயிர் ஒலி, மகர வீணையின்
கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,
துளை ஒலி, பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி, -கடல் ஒலி மெலிய, விம்முமே.

அந்த நகரமெங்கும சங்குகளின் ஓசை, கொம்புகளின் ஓசை, மகர யாழ் இனங்களின் ஓசை, மத்தள ஓசை, கின்னர ஓசை, துளைக் கருவிகளான புல்லாங்குழல் முதலியவைகளின் ஓசை மற்றும் பலவகை வாத்தியங்கள் முழக்கும் ஆரவாரத்தின் விளைவாக உண்டாகும் ஓசை ஆகிய இவ்வோசைகள் எல்லாம் கடல் முழக்கமும் மெலியும்படி ஒலிக்கும்.

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்,
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்,
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்,
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.

மன்னர் மன்னனாகிய அயோத்தி வேந்தனுக்கு அடங்கிய சிற்றரசர்கள் செலுத்தும் கப்பத்தை எண்ணி அளவிடும் மண்டபங்களும், அன்னம் போன்ற நடையையுடைய நடன மாதர்கள் நடனம் ஆடும் மண்டபங்களும், நினைப்பதற்கும் அரியனவான சிறந்த வேதங்களை வல்லோர் ஓதும் மண்டபங்களும் சிறப்பித்துப் பேசுவதற்கும் அரியனவான பல கலைகளையும் அறிஞர்கள் ஆராயும் பட்டி மண்டபங்களும் அயோத்தி நகரெங்கும் இருந்தன.

இரவியின் சுடர் மணி இமைக்கும், தோரணத்
தெரிவினின் சிறியன, திசைகள்; சேண் விளங்கு
அருவியின் பெரியன, ஆனைத் தானங்கள்;
பரவையின் பெரியன, புரவிப் பந்தியே.

அந்த நகரத்துத் தோரணங்கள் சூரியன் போன்ற சுடர்மிகு மணிகளால் ஒளிரும். நெடிய வீதிகளைவிடத் திசைகள் சிறியனவாம். மலையின் மிக உயர்ந்தே இருக்கும் அருவியை விட யானையின் மதநீர் பெரியதாகும். கடல்களை விடவும் பெரியது அந்நகரத்தில் குதிரைகள் கட்டும் இடம்.

சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன, மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ் மற்று அவை,
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே.

அந் நகரத்து மாளிகைகளின் உச்சி மிக உயர்ந்திருப்பதால் மேகத்தைப் பிணிக்கும். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விளங்கும் மாளிகைகளிலெல்லாம் மகளிரின் ஒளிமிகு முகங்கள் மலர்ந்து பொலிவனவாகும். அம்முகங்களில் அம்புகள் விளங்குகின்றன (கண்கள்). மற்று. அவ்வம்புகள் சிங்கத்தை ஒத்த ஆடவர்களின் மார்பில் ஆழ்வனவாம்.

மன்னவர் கழலொடு மாறு கொள்வன,
பொன் அணித் தேர் ஒலி, புரவித் தார் ஒலி;
இன் நகையவர் சிலம்பு ஏங்க, ஏங்குவ,
கன்னியர் குடை துறைக் கமல அன்னமே.

அரசர்களின் வீரக் கழல்களின் ஒலியுடன் மாறு கொண்டு ஒலிப்பவை பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தேர்களின் ஒலியும், குதிரைப் படைகளின் ஒலியுமே ஆகும். இனிய சிரிப்பு உடைய மகளிரின் சிலம்புகள் ஒலிக்கும்படியாக நீராடும் நீர்த்துறையில் வாழும் தாமரையில் உள்ள அன்னங்களே ஏங்கு வனவாம்.

நகர மாந்தரின் பொழுது போக்குகள்

ஊடவும், கூடவும், உயிரின் இன் இசை
பாடவும், விறலியர் பாடல் கேட்கவும்,
ஆடவும், அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும், பொழுது போம்-சிலர்க்கு, அத் தொல் நகர்.

அந்தப் பழமை வாய்ந்த நகரத்திலே வாழும் சிலர்க்கு காதலர்களோடு ஊடல் கொள்ளும் ஊடல் தீர்ந்து கூடி இன்புற்று மகிழவும், உயிரினும் சிறந்ததான இனிய இசை பாடி மகிழவும், இசையில் வல்ல விறலியர்களைப் பாடச்செய்து, அதனைக் கேட்கவும் இசைக்கேற்ப நடனம் ஆடவும், இடமகன்ற நீர்நிலைகளிலே நீராடவும், அழகிய மலர்களை அணிந்து மகிழவும் ஆகிய செயல்களால் பொழுது போகும்.

முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்,
எழும் குரத்து இவுளியடு இரதம் ஏறவும்,
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும், பொழுது போம்-சிலர்க்கு, அம் மா நகர்.

பிளறி முழக்கமிடும் வலிமைமிக்க மத யானைகளின் மீதுதமது மிகுந்த வலிமையால் ஏறி ஊர்ந்து சென்றும், எழுகின்ற ஆரவாரமுடைய குதிரைகளோடு தேர்களில் ஏறி ஊர்ந்து சென்றும், வறுமைத் துன்பத்தோடு வந்து இரந்தவரது துன்பம் நீங்கிட வேண்டிய பொன்னும் வாரி வழங்கியும் அந்தப் பெரு நகரில் வாழும் சிலர்க்குப் பொழுது போகும்.

கரியடு கரி எதிர் பொருத்தி, கைப் படை
வரி சிலை முதலிய வழங்கி, வால் உளைப்
புரவியில் பொரு இல் செண்டு ஆடி, போர்க் கலை
தெரிதலின், பொழுது போம்-சிலர்க்கு, அச் சேண் நகர்.

யானையோடு யானையை எதிர்த்துப் போர் புரியவிட்டு கையில் உள்ள படைகளான கட்டமைந்த வில் முதலியவைகளைப் பயின்றும், நீண்ட பிடரி மயிரை உடைய குதிரைகளின் மீது ஏறிக்கொண்டு, ஒப்பற்ற ‘செண்டு’ என்ற பந்தாடியும், போருக்குரிய கலைகளைத் தெரிந்து பயின்றும், அந்தச் சிறந்த நகரத்தில் மற்றும் சில பேருக்குப் பொழுது போகும்.

நந்தன வனத்து அலர் கொய்து, நவ்விபோல்
வந்து, இளையவரொடு வாவி ஆடி, வாய்ச்
செந் துவர் அழிதரத் தேறல் மாந்தி, சூது
உந்தலின் பொழுது போம்-சிலர்க்கு, அவ் ஒள் நகர்.

நந்தனவனம் சென்று மலர்ந்த மலர்களைப் பறித்தும், பெண்மானைப் போல வந்து தம்மை ஒத்த இள மகளிருடன் பொய்கையில் நீராடியும், தமது வாயின் பவள நிறம் அழியுமாறுதேனைப் பருகியும், தாயமாடும் முதலிய விளையாட்டுகள் ஆடியும் அந்த ஒளிமிக்க நகரிலே வாழும் மற்றும் சிலருக்குப் பொழுதுபோகும்.

கொடிகளும், தோரண வாயில் முதலியவும்

நானா விதமா நளி மாதிர வீதி ஓடி,
மீன் நாறு வேலைப் புனல் வெண் முகில் உண்ணு மாபோல்,
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீப் போய்,
வான் ஆறு நண்ணி, புனல் வற்றிட நக்கும் மன்னோ.

அந்நகரின் குறைவில்லாத மாடங்களின் மீது ஆடுகின்ற கொடிகள் நாலாவிதமாகவும் பறந்து பெரிய வான வீதியிலே ஓடி, மீன் நாறும் கடல் நீரினை வெண்மை நிறமுடைய மேகங்கள் பருகுவது போல மேலே சென்று வானாறாகிய ஆகாய கங்கையை அடைந்து அதன் தண்ணீர் வற்றும்படி நக்கும்.

வன் தோரணங்கள் புணர் வாயிலும், வானின் உம்பர்
சென்று ஓங்கி, 'மேல் ஓர் இடம் இல்' எனச் செம் பொன் இஞ்சி-
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசைக் குப்பை என்ன-
ஒன்றோடு இரண்டும், உயர்ந்து ஓங்கின, ஓங்கல் நாண.

வன்மையான தோரணங்கள் பொருந்திய வாயில்களும், செம்பொன்னால் அமைந்த மதில்கள் ஒன்றோடிரண்டாகிய மூன்றும் வானத்தின் மேலே சென்று உயர்ந்து, அதற்கு மேலே செல்ல ஒரு இடமும் இல்லை என்பதால் மலை போன்ற தோள்களை உடைய அந்நகரத்து ஆண்களின் சிறந்த குணங்களுடன் கூடிய நட்புள்ளம் புகழ்த் தொகுதி ஆகிய நல்ல பண்புகள் உயர்ந்திருப்பது போல, வாயில் மதில் ஆகியவைகளின் உயரத்தைக் கண்டு மலையும் நாணுமாறு உயர்ந்து விளங்கின.

காடும், புனமும், கடல் அன்ன கிடங்கும், மாதர்
ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும், உம்பர்
வீடும், விரவும் மணப் பந்தரும், வீணை வண்டும்
பாடும் பொழிலும், மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ!

அந்நகரைச் சூழ்ந்த காடுகளிலும் கொல்லைகளிலும் கடல் போன்ற அகழியின் ஓரங்களிலும் பெண்கள் நீர் விளையாடும் தடாகங்களிலும் அருவிகளையும், சுனைகளையும் உடைய மலைகளிலும் மேல், வீடுகளிலும் பற்பல இடங்களிலும் விரவியுள்ள முத்துப் பந்தர்களிலும்,வீணை போல வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலைகளிலும், மலர்களாலும் தளிர்களாலும் அமைந்துள்ள படுக்கைகள் நிலைத்திருக்கும்.

செல்வமும் கல்வியும் சிறந்த அயோத்தி

தௌ; வார் மழையும், திரை ஆழியும் உட்க, நாளும்,
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.

தெளிந்த நீரைத் தரும் மேகங்களும், அலைகளை உடைய கடலும், அஞ்சும்படி நாள்தோறும் தோல் வாரினால் கட்டிய பேரிகைகள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்நகரில் வாழ்கின்ற ஐயறிவே உடைய மாக்களிடையே கூட களவு செய்பவர் இல்லாமையால் பொருள்களைக் காவல் காப்பவரும் இல்லை. எதையும் யாசிப்பவர் இல்லையாதலால் கொடையாளிகளும் அந்த நகரத்தில் இல்லை.

கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே,
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.

நல்ல கலை நூல்களைப் படிக்காது நிற்பவர்களாகிய வீணர்கள் இல்லாமையாலே கல்வியில் முற்றும் வல்லவர் என்று அங்கு எவரும் இல்லை. அக்கல்வித் துறைகளில் வல்லவரும். அஃது இல்லாதவரும் இல்லை. அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி, பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை, உடையவர்களும் இல்லை.

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

கல்வி என்னும் ஒரு வித்து ஒப்பற்றதாக முளைத்து மேலெழுந்து, எண்ணற்ற பல்நூல் கேள்வியாகிய முதன்மையும், வலிமையும் வாய்ந்த கிளைகளை எங்கும் பரவச் செய்து, அரிய தவமாகிய இலைகள் தழைத்து, எல்லா உயிர்களிடமும் செலுத்தும் அன்பாகிய அரும்பு அரும்பி அறச் செயல்களாகிய மலர்கள் மலர்ந்து, இன்ப அநுபவம் என்னும் பழத்தை பழுத்த பழ மரத்தைப் போன்று அந்த அயோத்தி மாநகர் பொலிந்து விளங்கியது.


நாட்டுப் படலம் அயோத்தி நகரின் சிறப்பினை கூறும் படலமாகும். இதில் நகரின் அமைப்பு, மதிலின் மாட்சி, அகழியின் பாங்கு சோலையின் தன்மை, எழு நிலை மாடங்கள், மாளிகைகள் ஆகியவற்றின் தோற்றமும், பொலிவும் ஆகியவற்றை இப்படலம் விளக்குகின்றது. நாடு, நகரம், காடு, மேடு, எதுவானாலும் அங்கு வாழும் மக்களின் செயலையும் சீர்மையையும் பொறுத்தே சிறப்பாக அமையும். அதனால் அயோத்தி நகரத்தின் மக்களை பற்றி கம்பர் வர்ணிக்கின்றார். நகரத்தாரின் ஆடல், பாடல், மகளிர் மேனியழகு, மாந்தரின் மகிழ்ச்சி ஆகியவற்றை அறிவதோடு அங்கு வழ்வோரின் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் அறிகின்றோம். நகரப் படலத்தில் எழுபத்து நான்கு பாடல்கள் உள்ளன. அதனை இரண்டு பகுதியாக பதிவு செய்கின்றேன்.

அயோத்தி மாநகரின் அழகும் சிறப்பும்

செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வல்லிய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி புரிகின்றது-அயோத்தி மா நகரம்.

செம்மையானவை, இனிமை பொருந்தியவையும் கூறும் நல்ல பொருளால் சிறந்தவையும், நுட்பமானவையும் ஆகிய இனிய சொற்களை கவர்ந்து கொண்ட கவிஞர்களாலும், வடமொழியில் வல்ல வான்மீகி முதலான முனிவர்கள் புகழப்பட்டது அயோத்தி நகரம். மேலும் அளவற்ற உலகங்கள் எல்லா வற்றிலும் வாழ்கின்றவர்கள் எல்லோரும் தவங்களைச் செய்து அடைவதற்கு விரும்புகின்ற அந்தப் பரமபதமாகிய வீட்டு உலகத்தவர்களும் பிறப்பதற்கு தகுந்த நகரம் இது. என்னும் விருப்பத்திற்கு உரியது அயோத்தியாகிய பெருமைக்குரிய நகரமேயாகும்.

நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள் வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்?

அயோத்தி நகரமானது நிலமகளது முகமோ! முகத்திலணிந்த திலகமோ! அவளுடைய கண்களோ! நிறைவான நெடிய திருமாங்கலியக் கயிறோ? மார்பகங்களின் மேலணிந்து திகழும் மணிமாலையோ!அந்நில மகளின் உயிர் இருக்கும் இருப்பிடமோ? திருமகளுக்கு வாழ்வதற்கினியதாமரை மலரோ! திருமாலின் மார்பிலணியும் நல்ல மணிகள் வைக்கப் பட்ட பொன் பெட்டி தானோ! விண்ணுலகினும் மேலான வைகுந்தமோ? யுகமுடிவில் உயிர்களெல்லாம் தங்கும் திருமாலின் திருவயிறோ?வேறு எதுவென கூறுவோம்?

உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்பு அருங் காதல் அது பிடித்து உந்த, அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ!

உமாதேவியை இடப்பாகத்திலே கொண்டிருக்கும் சிவபெருமானும், பூமகள், நிலமகள் ஆகிய இருவருக்கும் ஒப்பற்ற கணவனாகிய திருமாலும், தாமரை மலரில் பொறுமையே பெருஞ் செல்வமாகக் கொண்டு வாழும் பிரமதேவனும், இவர்களே உவமை கூற முடியாத வேறு இந்நகரைக் காண்பதற்கு நகர் இல்லை என்பதால் தடுக்கொணாத விருப்பம் பிடித்துத் தள்ள வானத்திலே சந்திர. சூரியர்கள் இமைக்காதவர்களாகத் திரிகின்றனர் இதுவல்லாது அவர்கள் திரிவதற்குச் சொல்லக் கூடிய காரணம் வேறு எது?

அயில் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும், அளகையும் என்று இவை, அயனார்
பயிலுறவு உற்றபடி, பெரும்பான்மை இப் பெருந் திரு நகர் படைப்பான்;
மயன் முதல் தெய்வத் தச்சரும் தம்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்;-
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இந் நகர் புகலுமாறு எவனோ?

கூர்மையான முகத்தை உடைய வச்சிரப்படை கொண்ட தேவேந்திரனது அமராவதி நகரும், குபேரனது நகரமான அளகாபுரியும், ஆகிய இரு நகரங்களையும் பிரமன் படைத்தது பயிற்சி பெறும்படியாகும். மிகச் சிறப்புடைய இந்தப் பெருநகரைப் படைப்பதற்கு மயன் முதலான தேவஉலகச் சிற்பிகளும் தமது நினைப்பு மாத்திரத்தில் படைக்கும் தொழிலை மறந்து விட்டவர்களாக, அயோத்தியை ஒத்த நகரைப் படைக்க இயலாமைக்கு வெட்கமுற்று நிற்பர். மேகங்களை தொடுமளவு நீண்ட மேல் நிலைகளை கொண்ட மாடங்களை உடைய இந்த அயோத்தி மாளிகைகளின் சிறப்பைச் சொல்வது எவ்வாறு?

'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்' என்னும் ஈது அரு மறைப் பொருளே;
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?
எண் அருங் குணத்தின் அவன், இனிது இருந்து, இவ் ஏழ் உலகு ஆள் இடம் என்றால்,
ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் உண்டு என உரைத்தல்?

இம்மையில் புண்ணியம் செய்தவர்கள் மறுமையில் சுவர்க்கம் அடைவார்கள். இது வேதங்கள் கூறும் கருத்தாகும். இராம பிரானை அல்லாது வேறு யார் இந்த உலகத்திலே சிறந்த தவத்தை அறத்துடனே வளர்த்தவர்கள் இருக்கிறார்களா? நினைப்பதற்கரிய நற்குணங்களை உடைய அந்த இராமபிரான் இருந்து இந்த ஏழுலகத்தினையும் ஆளும் இடம் அயோத்தி என்றால் இதைவிடவும் மேலான இன்பம் உள்ள இடம் உண்டு எனக் கூற இயலுமோ?

தங்கு பேர் அருளும் தருமமும், துணையாத் தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செங் கண் மால் பிறந்து, ஆண்டு, அளப்ப அருங் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்,
அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?

தம்மிடம் தங்கிய மிகுந்த கருணையும் அறமுமே துணையாகக் கொண்டு தமக்குப் பகையாகிய புலன்களைக் கட்டுப்படுத்துபவராகி மேன்மேலும் வளர்கின்ற தவத்தையும் மெய்யறிவையும் பெற்றிருக்கும் மேலோர்கள் யாவருக்கும் அடைக்கலமாக அடையத்தக்க, அழகிய கண்களை உடைய திருமால் அவதரித்து அங்கு (அயோத்தி நகரில்) அளவிட இயலாத பலகாலம் இலக்குமி தேவியின் அவதாரமான சீதா பிராட்டியுடன் சிறப்போடு தங்கி இருந்தான் என்றால் அழகிய விசாலமான இவ்வுலகிலே இந்த அயோத்திக்கு நிகரான அழகிய நகரம் தேவ உலகில்தான் எது இருக்கிறது?

நகர மதிலின் மாட்சி

நால் வகைச் சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன, மதி தோய்
மால் வரைக் குலத்து இனி யாவையும் இல்லை; ஆதலால், உவமை மற்று இல்லை;
நூல் வரைத் தொடர்ந்து, பயத்தொடு பழகி, நுணங்கிய நுவல அரும் உணர்வே
போல் வகைத்து; அல்லால், 'உயர்வினோடு உயர்ந்தது' என்னலாம்-பொன் மதில் நிலையே.

நான்கு சதுரமாகச் சிற்பநூல் விதிப்படியே நாட்டப் பட்டு மிகவும்உயர்ந்துள்ள மதில்கள் போன்ற குளிர்ந்த பெரிய மலைக் கூட்டத்தின் எந்த மலையும் இங்கில்லை. ஆதலால் மதிலுக்கு உவமை கூற வேறு எதுவும் இல்லை. அழகிய அந்நகரத்து மதில்களின் நிலைமை பற்றிச் சொல்லுவோமானால் ஞான நூல்களின் எல்லை வரைசென்று கற்றறிதலோடு நில்லாமல் பயனாகப் பெற்று உணர்ந்து அவற்றின் நுணுக்கமாகியதும், கூறுதற்கரியதும் ஆகிய மெய்யுணர்வையே போன்ற தன்மை உடையதல்லாமல் அந்த மெய்யுணர்வைப் போலவேஉயர்ந்தது என்றும் கூறலாம்.


மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால், வேதமும் ஒக்கும்; விண் புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும், திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால்; எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும்.

அடைதற்கறிய அறிவால் எல்லை காண முடியாத படியிருப்பதால் வேதத்துக்கு ஒப்பாகும். விண்ணுலகம் வரை சென்றிருப்பதால் தேவர்களையும் ஒத்திருக்கும். வலிய பொறிகளை உள்ளடக்கிய செயலால் முனிவர்களை ஒத்திருக்கும். காக்கும் தொழிலால் மானை ஊர்தியாகக் கொண்ட துர்க்கையை ஒக்கும். சூலம் ஏந்தி இருப்பதால் காளிதேவியை ஒத்துக் காணப்படும். பெருமை மிக்க எல்லாவற்றையுமே ஒத்திருக்கும் அருமையால் ஈசனை ஒக்கும். எவரும் எளிதில் அடைய இயலாதிருப்பதால் இறைவனை ஒத்திருக்கும்.


பஞ்சி, வான் மதியை ஊட்டியது அனைய படர் உகிர், பங்கயச் செங் கால்,
வஞ்சிபோல் மருங்குல், குரும்பைபோல் கொங்கை, வாங்குவேய் வைத்தமென் பணைத் தோள்,
அம் சொலார் பயிலும் அயோத்தி மா நகரின் அழகுடைத்து அன்று என அறிவான்,
இஞ்சி வான் ஓங்கி, இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்துளதே!

செம்பஞ்சுக் குழம்பைப் பூசி, வெண்மையான சந்திரனை ஒழுங்கு பெற வைத்ததை ஒத்த ஒளி வீசும் நகங்களை உடைய தாமரை போன்ற சிவந்த பாதங்களையும், வஞ்சிக கொடி போன்ற இடையையும், தென்னங்குரும்பை போன்ற தனங்களையும், வளைந்த மூங்கில் போன்ற மென்மையான பருத்த தோள்களையும், உடைய அழகிய சொற்கள உடைய மகளிர் நிறைந்திருக்கின்ற அயோத்தியாகிய சிறந்த நகரை விட அழகுடையதோ அல்லவோ என்று அறிவதற்காகவே அந்நகரத்து மதில்கள் ஆகாய மளவு உயர்ந்து தேவர்கள் வாழும் உலகைக் காண எழுந்ததை ஒத்து உயர்ந்துள்ளது.

கோலிடை உலகம் அளத்தலின், பகைஞர் முடித் தலை கோடலின், மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும் நோக்க அருங் காவலின், வலியின்,
வேலொடு வாள், வில் பயிற்றலின், வெய்ய சூழ்ச்சியின், வெலற்கு அரு வலத்தின்,
சால்புடை உயர்வின், சக்கரம் நடத்தும் தன்மையின்,-தலைவர் ஒத்துளதே!

செங்கோலால் உலகத்தைக் காப்பதாலும், அளவுகோலால் அளக்கப் படுதலாலும், பகை மன்னரின் மகுடமணிந்த தலைகளை அழிப்பதாலும் தன்னிடமுள்ள இயந்திரங்களால் பகைவர்தலைகளைத் துண்டிப்பதாலும், மனுநூல் நெறிப்படி நடக்கின்ற நேர்மையாலும், சிற்ப நூலின்படி அமைந்து நேராயிருப்பதலும், எளிதில் எவரும் காண இயலாத காவல் உடையதாலும், வலிமை மிக்க வேல்முதலிய படைக்கலப் பயிற்சி உடைமையாலும் (வீரர்கள் வேல் முதலியபடைக் கலங்களைப் பயில்வதாலும்) கொடியதந்திரம் கொண்டிருப்பதாலும், மற்றவர்களால் வெல்ல இயலாத வல்லமை உடையதாலும், சிறப்பு மிக்க உயர்வுடைமையாலும் ஆணை செலுத்தும் தன்மையாலும் அந்த மதில் சூரிய குலத் தலைவர்களை ஒத்து இருக்கிறது.

சினத்து அயில், கொலை வாள், சிலை, மழு, தண்டு, சக்கரம், தோமரம், உலக்கை,
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல், என்று இவை கணிப்பு இல் கொதுகின்
இனத்தையும், உவணத்து இறையையும், இயங்கும் காலையும், இதம் அல நினைவார்
மனத்தையும், எறியும் பொறி உள என்றால், மற்று இனி உணர்த்துவது எவனோ?

சினம் மிக்க வேலும், பகைவரைக் கொல்லும் வாளும், வில்லும், மழுவும், கதையும், சக்கரம், தோமரம், உலக்கை ஆகியவையும் மேகத்திலுள்ள இடியும், அஞ்சும்படியான கவண்கல்லும், என்று கூறப்படும் படைக்கலங்கள் அளவிட முடியாதவை. கொசுக்களின் கூட்டத்தையும், பறவைகளின் வேந்தனான கருடனையும், விரைந்து செல்லும் காற்றையும், நன்மை யல்லாதவைகளை நினைப்பவர் மனத்தினையும், கொல்லவல்ல இயந்திரங்களும், அந்த மதிலில் உள்ளன என்றால் மதிலின் காவலைப் பற்றி விரித்துரைக்க என்ன இருக்கிறது.

'பூணினும் புகழே அமையும்' என்று, இனைய பொற்பில் நின்று, உயிர் நனி புரக்கும்,
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவிதன் குலமுதல் நிருபர்-
சேணையும் கடந்து, திசையையும் கடந்து,- திகிரியும், செந் தனிக் கோலும்,
ஆணையும் காக்கும்; ஆயினும், நகருக்கு அணி என இயற்றியது அன்றே.

அணிகலன்களை விடப் புகழே சிறந்த அணிகலமாக அமையும் என நினைத்து இத்தகைய நல்லொழுக்கத்தில் நின்று நாட்டு மக்களைக் காப்பவரான, அழகிய எட்டுத் திசைகளிலும் உள்ள இருள் நீங்கும்படி ஒளிர்கின்ற சூரிய குலத்தில் தோன்றிய அரசர்களின் ஆணையாகிய சக்கரமும், செங்கோலும் கட்டளையும் மேலுலகத்தையும் திசைகளையும் கடந்து சென்று காக்கவல்லது. ஆனாலும் அந்தமாநகருக்கு அழகு செய்ய அமைந்தது அம்மதில் மட்டுமே.

ஆழ்ந்த அகழியின் மாண்பு

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய், புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும் படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;-நவிலலுற்றது நாம்.

நாம் இப்போது சிறப்பித்துச் சொல்ல வந்தது அம்மதிலின் புறத்தே அமைந்த அகழியானது, மேலே கூறப்பட்ட அத்தகையபெரிய மதிலை அலைகள் பொங்கும் பெரும் புறக்கடல் சூழ்ந்திருப்பது போலச் சூழ்ந்து விலை மாதர்களது மனத்தைப் போல மிகக் கீழே போய், இழிந்த பாடல்களைப் போல தெளிவு இல்லாமல், கன்னியரின் அல்குலினிடம் போல, எவருக்கும் நெருங்க இயலாத காவலை உடைய தாய்நல்ல நெறியில் செல்ல விடாமல் தடுக்கும் ஐம்பொறிகளைப் போன்றதாகிய எதிரிகளைத் தாக்கும் முதலைகளை உடையது.

ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா,
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா,
மேகம், மொண்டு கொண்டு எழுந்து, விண் தொடர்ந்த குன்றம் என்று,
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதிற்கண் வீசுமே.

தம் கூட்டத்துடனே செல்லும் மேகங்கள் எல்லை காண இயலாத, நாக லோகம்வரை ஆழ்ந்துள்ள பரந்த அகழியை அச்சத்தைத் தரும் கடலாகும் எனக் கருதி, நீரை முகந்துகொண்டு எழுந்து அம்மதிலை வானளவும் உயர்ந்த மலை என்று கருதி, உடல் வருந்தி அம்மதிலின் மீது நின்று மழைத் தாரையை அம் மதிலின்மீது பொழியும்.

அந்த மா மதில் புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
கந்தம் நாறு பங்கயத்த கானம், மான மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம்
வந்து போர் மலைக்க, மா மதில் வளைந்தது ஒக்குமே.

அந்தப் பெரிய மதிலின் வெளிப்புறமுள்ளஅகழியிலே தோன்றி மலர்ந்துள்ள நீள்மிகுந்த மணம் வீசும் தாமரைக்காடு பெருமையுடைய அந்தப்புரத்துப் பெண்களின் ஒளியுடைய முகங்களுக்கு முன்பு தோற்றுப் போனமையால் மீண்டும் மிக்க வலிமை கொண்டு வந்து போர் புரிவதற்கு அந்த மதிலை வளைத்துக் கொண்டிருப்பதை ஒக்கும்.

சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து பொங்கு இடங்கர் மா,-
தாழ்ந்த வங்க வாரியில், தடுப்ப ஒணா மதத்தினால்,
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே.

ஆய்ந்து கட்டப்பட்ட நாஞ்சில் முதலிய உறுப்புகளை உடைய நகரைச் சுற்றிலும் உள்ள அந்த மதிலின் சுற்றிலும் நிறைந்திருக்கும் பாறைகளை எல்லாம் பிளந்துஅமைக்கப்பட்ட அந்தப் பெரிய அகழியிலே தங்கி மேலே எழும் முதலைகள் ஆழமானதும், கப்பல்களை உடையதும் ஆகிய கடலிலே தடுக்க இயலாத மதத்தினாலே உள்ளே அழுந்திய யானை மீள முடியாமல் அமிழ்ந்து எழுவன போலக் காணப்பெறும்

ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
பேர மின்னி வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா,-
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே.

அறுக்கும் ரம்பம் போன்ற வாலைஅசைத்து பற்களாகிய பிறைக்கூட்டம் ஒளி வீசுமாறு வாயைத் திறந்து கொண்டு பிரகாசிக்கும் கண்கள் தீப்பொறி சிதற ஒன்றை மற்றொன்று முந்திச் சென்று சீறுகின்ற முதலைகள் போர்க்களத்தே வந்து ஒருவருடன் ஒருவர் சினந்து போர் புரியும் அரக்கர்களை ஒத்திருக்கும்.

ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, -மன்னர் சேனை மானுமே.

அங்குத் திரியும் அன்னங்கள் வெண்குடைக் கூட்டங்களாகவும், உலாவித் திரியும் மலை போன்ற யானைகளாகவும், தாளுடன் அசையும் தாமரையை உடைய அலைகளே குதிரைகளாகவும், மீன்களே வாளும் வேலுமாகவும் அரசரின் படைகளை ஒத்திருக்கும்.

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி, உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்,
'தளிந்த கல்-தலத்தொடு, அச் சலத்தினை, தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்' என்றல் தேவராலும் ஆவதே?

அந்த அகழியின் ஓரம் முழுவதும் வெள்ளியினாலே கட்டி முடித்து உள்ளிடமெல்லாம் பளிங்குக் கற்களைத் தள வரிசையாகப் பதித்திருப்பதாலே, பளிங்குக் கல்லால் தளவரிசை இடப்பட்ட நிலத்தோடு அந்த அகழியின் தெளிந்த தண்ணீரை தனியாக வேறு பிரிந்து இது நீர், இது பளிங்கு என்று தெளிவாகப் பிறர்க்கு உணர்த்துவோம். என்றுசொல்வதுதேவர்களாலும் இயலாததொன்றாகும்.

அகழியைச் சூழ்ந்த சோலை

அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு, வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த சோலை; எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே.

அத்தகைய நீண்ட, பரந்த அகழியை சுற்றிக் கிடந்த சக்கரவாள மலையை நெருங்கி வேறாகச் சூழ்ந்து கொண்டிருக்கும் அசையாது, மிகுந்திருக்கும் இருள் கூட்டமோ என்று சொல்லத்தக்க காடு போன்று சூழ்ந்திருக்கும் சோலையை நினைத்தால் அந்த அழகிய மதிலுக்குஉடுத்திய நீல ஆடையைப் போலத் தோன்றும்

நால் வாயில் தோற்றமும், ஓவியப் பொலிவும்

எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற் முன்னம், மால்,
ஒல்லை, உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த் வான்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன-வாயிலே.

அயோத்தி நகரத்துக் கோபுர வாயில்கள் நான்கும் நான்கு திசைகளிலும் நிற்கும் திக்கு யானைகள் என்னும்படி நின்றன. அன்றியும் திருமால் வாமனனாக வந்து விரைவாக திருவிக்கிரமனாகி விண்ணுலகத்தை அளந்த திருவடியை விட மேலும் வாயில்கள் உயர்ந்து நின்றன. வளம் நிறைந்தஉலகத்தவர் எல்லாம் நீதி தவறாது நடக்கச் செய்வதால் நல்ல நெறிகளைக் கூறும் நான்மறைகளையும் ஒத்திருந்தன.

தா இல் பொன்-தலத்தின், நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுக்குமால் -
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ, வந்து அணைந்திடாது,
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே.

தனது உயிருக் கொப்பான ஆண் புறாவானது கூவி அழைக்கவும் அன்புடன் வந்து தழுவிக் கொள்ளாமல் அந்த வாயிலின் புறத்தே சித்திரத்தில் அமைந்துள்ள பெண் புறாவின் பக்கம் இருக்க, ஆண் புறா உடன் ஊடல் கொண்ட பெண்புறா குற்றமற்ற தேவ உலகிலே நல்ல தவம் செய்தவர்கள் தங்கியுள்ள தாளை உடையதும், மலர்கள் பூத்திருப்பதுமான கற்பகச் சோலையிலே சென்று மறைந்திருக்கும்.

எழு நிலை மாடம்

கல் அடித்து அடுக்கி, வாய் பளிங்கு அரிந்து கட்டி, மீது
எல்லுடைப் பசும் பொன் வைத்து, இலங்கு பல் மணிக் குலம்
வில்லிடைக் குயிற்றி, வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிடக் கிடத்தி, வச்சிரத்த கால் பொருத்தியே,

மணிக்கற்களைச் செதுக்கி அடுக்கிச் சுவரெழுப்பி முன்புறம் பளிங்குக் கற்களை அறுத்துக் கட்டி அதன் மேலே ஒளிவீசும் பொன்தகடு வேய்ந்து, விளங்குகின்ற பலவகை மணிகளை ஒளிவீசும்படி பொன்தகட்டில் பதித்து, ஒளியை பரப்புகின்ற வெள்ளியால் ஆன விட்டத்தை அதன் மீது பொருந்துமாறு வைத்து வைரத் தூண்களை அதன்மேலே நாட்டி.

மரகதத்து இலங்கு போதிகைத் தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி, மீது பொன் குயிற்றி, மின் குலாம்
நிரை மணிக் குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளிமேல்
விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீதுஅரோ,

மரகதத்தால் செய்த விளங்கு போதிகைக் கட்டைகளின் வைரக் கற்களைக் குற்றமகற்றி அடுக்கி வைத்து மேலே பொன் தகட்டை வைத்து, மின்னல் போல விளங்கும் வரிசையான இரத்தினத் தொகுதியால் ஆகிய நீண்ட சிங்க உருவின் வரிசை மீது ஒழுங்கு பொருந்திய கைமரமாக வைக்கப்பட்ட கோமேதத்தின் மேலே

ஏழ் பொழிற்கும் ஏழ் நிலத்தலம் சமைத்ததென்ன, நூல்
ஊழுறக் குறித்து அமைத்த உம்பர் செம் பொன் வேய்ந்து, மீச்
சூழ் சுடர்ச் சிரத்து நல் மணித் தசும்பு தோன்றலால்,
வாழ் நிலக் குலக் கொழுந்தை மௌலி சூட்டியன்னவே.

ஏழு மேலுலகத்தவருக்கும் ஏழு இடங்களை ஏற்படுத்தி வைத்தது போல சிற்ப நூல் விதிப்படி ஆராய்ந்து அமைத்தனவான கோபுரங்கள் மேலே செம்பொன் தகடு வேயப்பட்டு, மேலுலகிலே சென்று ஒளிரும் சிகரத்திலே சிறந்த மாணிக்கக் கலசம் தோன்றுதலால் வாழுகின்ற பூமியாகிய இளம் பெண்ணை முடி சூட்டியது போலத் திகழும்.

மாளிகைகளின் அமைப்பும் எழிலும்
'திங்களும் கரிது' என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
வெங் கடுங் கால் பொர, மேக்கு நோக்கிய,
பொங்கு இரும் பாற்கடல்-தரங்கம் போலுமே.

சந்திரனும் கருமை நிறத்து என்று கூறுமளவுக்கு, வெண்மை நிறம் பொருந்தப் பூசிய சங்கிலிருந்து செய்த வெண்ணிறச் சுண்ணாம்புச் சாந்தால் அமைந்த வெள்ளை மாளிகைகள் கடுமையான பெருங்காற்று வீசுவதால், மேல் நோக்கி எழுந்து பொங்கும் பெரிய பாற்கடலின்அலைகளைப் போலக் காணப்படும்.

புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை,
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன,
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி அம் கிரிமிசை விரிந்த போலுமே.

நீக்குவதற்கரிய பொன் தகடுகள் மேலே வேயப்பட்டனவாகிய உடலில் புள்ளிகளை உடைய அழகிய மாடப் புறாக்கள் தங்கியிருக்கின்ற மாளிகைகள், அழகிய வெள்ளி மலையின் மீது இகழ்தற்கு அரிய சூரிய தேவனது இளையக்கதிர்கள் பரவியிருப்பது போலக் காணப்படும்.

வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
உயிர் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே.

வையிரத்தாலாகிய நல்ல தூண்களின் மேலே மரகதத்தாலாகிய உத்தரத்தை குறையின்றிப் பொருந்துமாறு போதிகையின் மீது பொருத்தி ஓவியங்கள் உயிருள்ளன போலத் தோன்றுமாறு செய்தனவும். தேவ நாட்டவரும் தமது விமானமோ என ஐயத்துடன் நோக்குவனவும் ஆகிய மாளிகைகள் அளவற்ற கோடிக் கணக்கானவையாகும்.

சந்திர காந்தத்தின் தலத்த, சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை,
செந் தனி மணித் துலாம் செறிந்த, திண் சுவர்
இந்திர நீலத்த, எண் இல் கோடியே.

சந்திர காந்த்க் கற்கள் பரப்பிய தரையை உடையனவும், சந்தன மரங்களான வரிசையாக உள்ள தூண்களின் மீது பவளத்தால் செய்த போதிகையில் சிவந்த மாணிக்கத்தாலான உத்தரம் பொருந்தி உள்ளனவும், வண்மை மிக்க சுவர்கள் இந்திர நீலமணிகளால் அமைந்தனவுமான மாளிகைகள் எண்ண முடியாத கோடியாகும்.

பாடகக் கால் அடி பதுமத்து ஒப்பன,
சேடரைத் தழீஇயின, செய்ய வாயின,
நாடகத் தொழிலின, நடுவு துய்யன,
ஆடகத் தோற்றத்த, அளவு இலாதன.

வேலைப் பாடமைந்த தூண்களின் அடிப்பக்கம் தாமரை மலர் வடிவத்தில் அமைந்தனவும், கடைக்கால் ஆழத்தால் நாக உலகை தழுவியுள்ளனவும், வேலைப் பாட்டினால் செம்மை உடையனவும், யாவரும் விரும்பிக் காணும் தொழில் திறம் உடையனவும், நடுவிடம் எல்லாம் தூய்மை உடையனவும், பொன்னைப் போன்ற தோற்றமுடையனவும் ஆகிய மாளிகைகள் அளவற்றனவாம்.

புக்கவர் கண் இமை பொருந்துறாது, ஒளி
தொக்குடன் தயங்கி, விண்ணவரின் தோன்றலால்,
திக்குற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன, உம்பர் நாட்டினும்.

பார்க்கப் வந்தவரகண் இமைகள் வியப்பின் மிகுதியால் மலர்ந்து விளங்குமே அல்லாது ஒன்றுடன் ஒன்று சேரா கண் கொட்டாமல் பார்த்தனர் என்பது கருத்து. மாளிகைகளில் பதித்த இரத்தினங்களின் பூசிய வெண்சாந்தின் ஒளி பார்ப்பவர் உடலின் மீது பாய்வதால் அவர்கள் விளகம் பெற்று தேவர்களைப் போல காட்சியளிப்பதாலும், எல்லாத் திசைகளிலும் செல்ல வல்ல தெய்வீக விமானம்போல நிலத்தில் பதிந்து கிடக்கும் அம்மாளிகைகளின் ஒளி வெள்ளம் தேவர் உலகத்தும் சென்று ஒளி வீசுவன.

அணி இழை மகளிரும், அலங்கல் வீரரும்,
தணிவன அறநெறி; தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில் பகலை வென்றன.

அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களும் மாலையணிந்த மார்பினரான வீரர்களும், அற நெறியினையே துணிவுடன் பற்றுவர். மணிகளாலும், பொன்னாலும் புனையப்பட்டுள்ள மாளிகைகள் என்றும் அறநெறிகளில் குறையாது நிறைந்திருப்பவை. வேறுகல், மண் முதலியவைகளால் அவை கட்டப்பட்டவை. ஒளியால் சூரியனையும் வென்று விளங்குபவை.

வானுற நிவந்தன் வரம்பு இல் செல்வத்த்
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய்
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன.

அந்நகரத்து மாளிகைகள் வானமளவும் உயரந்து இருப்பவை, அளவற்ற செல்வத்தை உடையன, எங்கும் பரவியுயர்ந்த புகழ் என்னும் படி விளங்கும் ஒளி உடையன, குற்ற மற்ற அரநெறியைக் கடைப்பிடித்து வாழும் அரசைனைப் போன்று வாழும் எண்ணிக்கை இல்லாத குடிமக்களது தன்மைக்குச் சான்றாக உள்ளனவாம்.

அருவியின் தாழ்ந்து, முத்து அலங்கு தாமத்த்
விரி முகிற்குலம் எனக் கொடி விராயின்
பரு மணிக் குவையன் பசும் பொன் கோடிய்
பொரு மயில் கணத்தன்-மலையும் போன்றன.

அம்மாளிகைகள் நீர் அருவி போலத் தாழ்ந்து அசையும் முத்து மாலைகளை உடையவை, பரந்த மேகக் கூட்டத்தை ஒத்த கொடிகள் பரவியுள்ளவை பெரிய மணிகளின் குவியல்களை உடையன. பசும்பொன் குவைகளை உடையன, வடிவொத்த மயில்களை உடையன.