பால காண்டத்தில் நான்காவது படலம் அரசியற் படலமாகும்.இதில் பனிரெண்டு பாடல்கள் உள்ளன. கோசல நாட்டு மன்னனாகிய தயரதச் சக்கரவர்த்தியினது ஆட்சி சிறப்பைக் கூறும் பகுதி இது. தயரதனின், பெருமை, குடைச் சிறப்பு,அரசு செய்யும் திறம் ஆகியவைகளை இந்தப் படலத்தில் காணலாம். முதல் ஆறு பாடல்களால் தயரத வேந்தனது தனிப் பெரும் சிறப்பை கூறுகின்றார்.
தயரதன் மாண்பு
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான்.
அத்தகைய மாண்பு மிகுந்த நகரத்துக்கு அரசனாய் இருப்பவன் மன்னர்களுக் கெல்லாம் மன்னனான சக்கரவர்த்தி, மாட்சிமை மிக்க தனது ஒப்பில்லாத செங்கோலாகிய ஆட்சி முறை ஏழு உலகங்களிலும் செல்லுமாறு ஆட்சி செய்து நிலைத்தவனாவான். மேலும் அவன் இந்தப் பெருமை பொருந்திய இராமாயணம் என்னும் கதைக்குத் தலைவனான இராமன் என்ற பெயரை உடைய வன்மையும், பெருமையும் உள்ள வீரக்கழல் அணிந்த நம்பியைப் பெற்ற நல்லறத்தின் வடிவமுமாவான்.
ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,
ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,
நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற
பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ.
முதன்மையாகிய மெய்யறிவும், அருளும் தனக்குக் கூறிய அறநெறி தவறாமையும், சாந்த குணமும் குற்றமற்ற வலிமை பொருந்திய வீரமும், கொடையும், நீதியின்கண் நிற்றலும் போன்ற நற்பண்புகளாகிய இவை மற்ற அரசர்களுக்குப் பாதியே நின்றன. அக்குணங்கள் முழுவதும் இந்தத் தசரத மன்னனுக்கே ஏவல் கேட்டு நிற்பனவாகும்.
மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்
செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ.
நிறைந்த கடலால் சூழ்ப்பட்டதும் பழமை வாய்ந்ததுமான இந்த உலகத்தில் வாரி முகந்து, தானம் செய்கின்ற கையில் நிறைந்த நீரினால் நனைக்கப் பெறாத கைகளும் இல்லை. நிலைபெற்ற வேத நெறியில் நிற்கும் அரசர்களுக்கு பொருந்தியனவான வேறு எவரும் செய்ய இயலாது நின்ற யாகங்கள் இந்த தசரத மன்னனால் செய்யப்பட்டு மறக்கப் பெற்றவையாகும்.
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான்.
மன்னர் மன்னனான அத்தயரதன் தனது ஆட்சிக் கடங்கிய குடிமக்கள் எவர்க்கும் அன்பு செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான். நன்மை செய்வதில் தவத்தைப் போன்றவனாவான் தாய், தந்தையரின் கடைசிக் காலத்தில் முன்னே நின்று, இறுதிச் சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும் தன்மையினால் அவர்கள் பெற்ற மகனை ஒத்திருப்பான். குடிமக்களுக்கு நோய்வருமாயின் அதைப் போக்கி, குணப்படுத்தும் மருந்து போன்றவனுமாவான். நுணுக்கமான கல்வித் துறைகளை ஆராயப் புகும் போது நுட்பமான பொருளைக் காணும் அறிவினையும் ஒத்திருப்பான்.
ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம்.
அவ்வரசன் தன்னிடம் யாசிப்பவர்கள் என்னும் கடலை ‘ஈதல்’ என்றும் தெப்பம் கொண்டு கடந்தான். அறிவு என்ற கடலை, எண்ணற்ற நுண்ணிய நூலாராய்ச்சி என்ற படகு கொண்டு தாண்டினான். பகைவர்கள் என்ற கடலை வாள் முதலிய படைத்துணை கொண்டு, கோபம் காட்டி நீந்தினான். செல்வ வளத்தாலே தொடர்ந்து வரும் இன்பம் என்னும் கடலை மனம் நிறைவு பெறும்படி துய்த்தே கடந்தான்.
வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்
உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;
தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே.
தோலால் ஆன உறையை உடைய வேலைத் தாங்கிய அரசர்களுக் கெல்லாம் அரசனாகிய நீக்க முடியாத பெரும்புகழ் படைத்த தயரதன் என்னும் பெயருடைய வள்ளல் ஆட்சியில் வெள்ளப் பெருக்கும், பறவைகளும், விலங்குகளும், விலைமாதர் உள்ளமும் ஒரேவழியில் தம் எல்லை கடவாது சென்றன. இவ்வாறு செய்து புகழில் நிலைத்து நின்றான்.
உலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்
நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்
பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி
வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே.
சக்கரவாளம் என்னும் பெயருடைய உலகைச் சூழ்ந்திருக்கும் பெருமலையே மதிலாகவும் நீண்ட, பரப்புடைய பெரும்புறக்கடல் என்னும் பெயருடைய கடலே அகழியாகவும் மலைகள் யாவும், பலவகை மணிகள் நிறைந்த அழாகான மாளிகைகள் ஆகவும் இருந்தது. நிலம் முழுவதுமே அப்பேரரசனது தலைநகரமாகிய அயோத்தி போன்றிருக்கிறது.
பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மேவரும் கை அடை வேலும் தேயுமால்;
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால்.
எதிர்த்து வரும் எவருடைய வலிமைக்கும் ஈடுகொடுத்து நேருக்கு நேர் நின்று வெல்லும் போரை அடிக்கடி செய்வதால் ஓரமும், முனையும் மழுங்கி அவற்றை அடிக்கடி நீட்டுவதாலே விரும்புகின்ற கைவிடாப் படைகளான வேலும், வாளும் தேயும். தன்னை வணங்கும் அரசர்களது நீண்டமணி மகுட வரிசையால் தயரத மன்னனது கால்களில் பொருந்தியுள்ள பொன்னால் ஆகிய வீரக்கழல்களும் தேயும்.
தயரதனின் குடையும் செங்கோலும்
மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,
தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,
விண்ணிடை மதியினை 'மிகை இது' என்பவே.
நாளுக்கு நாள் வளர்ந்து, தேய்தலில்லாமல் உலகிடை வாழும் உயிர்கள் தோறும் குளிர்ந்த நிழலை எங்கும் பரப்பவும் இருளே இல்லாமல் நீக்கவும், பெருமை மிக்க தயரதனது வெண்கொற்றக் குடையாகிய மதியே போதும் (பொருந்தும்) ஆதலாலே வானில் உள்ள வளர்தலும் தேய்தலுமுடைய சந்திரனை இந்த மதி கோசல நாட்டினுக்கு வேண்டாத ஒன்று என்பர்.
தயரதன் அரசு செய்யும் திறம்
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.
வயிரம் இழைத்துச் செய்யப்பட்ட அழகிய அணிகலன்களை அணிந்துள்ள சிங்கம் போன்று வலிமை உள்ள தயரத மன்னன், மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர் போலக் கருதிக் காத்துவருவதால், குற்றமில்லாத இப்பேருலகத்திலே இயங்கியற் பொருள், நிலையிற் பொருள்களாக இருந்து வாழும் உயிரெல்லாம் தங்கி வாழ்வதற்குத் தக்க பெருமைமிக்க உடம்பாகவும் ஆனான்.
குன்றென உயரிய குவவுத் தோளினான்,
வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,
ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை
நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே.
மலைபோலும் வளர்ந்து ஓங்கிய திரண்ட தோள்கள் கொண்ட தயரதனுடைய வெற்றிமிக்க ஆணைச் சக்கரமானது வெம்மையுடைய சூரியனோ என்னும் படிமிக உயரமான வானிலே நின்றும் ஒன்றாகிய பரம்பொருளைப் போல உலகில் வாழும் சர, அசரங்களாகிய உயிர்கள் தோறும் உலாவி நின்று பெரிதும் காத்தல் தொழிலைச் செய்யும்.
'எய்' என பழு பகை எங்கும் இன்மையால்,
மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய்எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான்.
அம் மன்னனுக்கு எவ்விடத்திலும் விரைந்து எழுகின்ற பகைவர்கள் இல்லாமையால் போர்த் தொழிலே பெறாமையால் தினவு கொண்டனவான. மத்தளம் போன்ற திரண்ட தோள்களை உடைய அவ்வரசன் உலகில் வாழும் உயிர்கள் அனைத்தையும் வறியவன் தனக்குள்ள ஒரே வயலைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது போல பாதுகாத்து இனிமையான ஆட்சிசெய்து வருகிறான்.