பால காண்டத்தில் நான்காவது படலம் அரசியற் படலமாகும்.இதில் பனிரெண்டு பாடல்கள் உள்ளன. கோசல நாட்டு மன்னனாகிய தயரதச் சக்கரவர்த்தியினது ஆட்சி சிறப்பைக் கூறும் பகுதி இது. தயரதனின், பெருமை, குடைச் சிறப்பு,அரசு செய்யும் திறம் ஆகியவைகளை இந்தப் படலத்தில் காணலாம். முதல் ஆறு பாடல்களால் தயரத வேந்தனது தனிப் பெரும் சிறப்பை கூறுகின்றார்.

தயரதன் மாண்பு

அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான்.

அத்தகைய மாண்பு மிகுந்த நகரத்துக்கு அரசனாய் இருப்பவன் மன்னர்களுக் கெல்லாம் மன்னனான சக்கரவர்த்தி, மாட்சிமை மிக்க தனது ஒப்பில்லாத செங்கோலாகிய ஆட்சி முறை ஏழு உலகங்களிலும் செல்லுமாறு ஆட்சி செய்து நிலைத்தவனாவான். மேலும் அவன் இந்தப் பெருமை பொருந்திய இராமாயணம் என்னும் கதைக்குத் தலைவனான இராமன் என்ற பெயரை உடைய வன்மையும், பெருமையும் உள்ள வீரக்கழல் அணிந்த நம்பியைப் பெற்ற நல்லறத்தின் வடிவமுமாவான்.

ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,
ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,
நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற
பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ.

முதன்மையாகிய மெய்யறிவும், அருளும் தனக்குக் கூறிய அறநெறி தவறாமையும், சாந்த குணமும் குற்றமற்ற வலிமை பொருந்திய வீரமும், கொடையும், நீதியின்கண் நிற்றலும் போன்ற நற்பண்புகளாகிய இவை மற்ற அரசர்களுக்குப் பாதியே நின்றன. அக்குணங்கள் முழுவதும் இந்தத் தசரத மன்னனுக்கே ஏவல் கேட்டு நிற்பனவாகும்.

மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்
செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ.

நிறைந்த கடலால் சூழ்ப்பட்டதும் பழமை வாய்ந்ததுமான இந்த உலகத்தில் வாரி முகந்து, தானம் செய்கின்ற கையில் நிறைந்த நீரினால் நனைக்கப் பெறாத கைகளும் இல்லை. நிலைபெற்ற வேத நெறியில் நிற்கும் அரசர்களுக்கு பொருந்தியனவான வேறு எவரும் செய்ய இயலாது நின்ற யாகங்கள் இந்த தசரத மன்னனால் செய்யப்பட்டு மறக்கப் பெற்றவையாகும்.

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான்.

மன்னர் மன்னனான அத்தயரதன் தனது ஆட்சிக் கடங்கிய குடிமக்கள் எவர்க்கும் அன்பு செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான். நன்மை செய்வதில் தவத்தைப் போன்றவனாவான் தாய், தந்தையரின் கடைசிக் காலத்தில் முன்னே நின்று, இறுதிச் சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும் தன்மையினால் அவர்கள் பெற்ற மகனை ஒத்திருப்பான். குடிமக்களுக்கு நோய்வருமாயின் அதைப் போக்கி, குணப்படுத்தும் மருந்து போன்றவனுமாவான். நுணுக்கமான கல்வித் துறைகளை ஆராயப் புகும் போது நுட்பமான பொருளைக் காணும் அறிவினையும் ஒத்திருப்பான்.

ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம்.

அவ்வரசன் தன்னிடம் யாசிப்பவர்கள் என்னும் கடலை ‘ஈதல்’ என்றும் தெப்பம் கொண்டு கடந்தான். அறிவு என்ற கடலை, எண்ணற்ற நுண்ணிய நூலாராய்ச்சி என்ற படகு கொண்டு தாண்டினான். பகைவர்கள் என்ற கடலை வாள் முதலிய படைத்துணை கொண்டு, கோபம் காட்டி நீந்தினான். செல்வ வளத்தாலே தொடர்ந்து வரும் இன்பம் என்னும் கடலை மனம் நிறைவு பெறும்படி துய்த்தே கடந்தான்.

வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்
உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;
தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே.

தோலால் ஆன உறையை உடைய வேலைத் தாங்கிய அரசர்களுக் கெல்லாம் அரசனாகிய நீக்க முடியாத பெரும்புகழ் படைத்த தயரதன் என்னும் பெயருடைய வள்ளல் ஆட்சியில் வெள்ளப் பெருக்கும், பறவைகளும், விலங்குகளும், விலைமாதர் உள்ளமும் ஒரேவழியில் தம் எல்லை கடவாது சென்றன. இவ்வாறு செய்து புகழில் நிலைத்து நின்றான்.

உலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்

நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்
பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி
வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே.

சக்கரவாளம் என்னும் பெயருடைய உலகைச் சூழ்ந்திருக்கும் பெருமலையே மதிலாகவும் நீண்ட, பரப்புடைய பெரும்புறக்கடல் என்னும் பெயருடைய கடலே அகழியாகவும் மலைகள் யாவும், பலவகை மணிகள் நிறைந்த அழாகான மாளிகைகள் ஆகவும் இருந்தது. நிலம் முழுவதுமே அப்பேரரசனது தலைநகரமாகிய அயோத்தி போன்றிருக்கிறது.

பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மேவரும் கை அடை வேலும் தேயுமால்;
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால்.

எதிர்த்து வரும் எவருடைய வலிமைக்கும் ஈடுகொடுத்து நேருக்கு நேர் நின்று வெல்லும் போரை அடிக்கடி செய்வதால் ஓரமும், முனையும் மழுங்கி அவற்றை அடிக்கடி நீட்டுவதாலே விரும்புகின்ற கைவிடாப் படைகளான வேலும், வாளும் தேயும். தன்னை வணங்கும் அரசர்களது நீண்டமணி மகுட வரிசையால் தயரத மன்னனது கால்களில் பொருந்தியுள்ள பொன்னால் ஆகிய வீரக்கழல்களும் தேயும்.

தயரதனின் குடையும் செங்கோலும்

மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,
தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,
விண்ணிடை மதியினை 'மிகை இது' என்பவே.

நாளுக்கு நாள் வளர்ந்து, தேய்தலில்லாமல் உலகிடை வாழும் உயிர்கள் தோறும் குளிர்ந்த நிழலை எங்கும் பரப்பவும் இருளே இல்லாமல் நீக்கவும், பெருமை மிக்க தயரதனது வெண்கொற்றக் குடையாகிய மதியே போதும் (பொருந்தும்) ஆதலாலே வானில் உள்ள வளர்தலும் தேய்தலுமுடைய சந்திரனை இந்த மதி கோசல நாட்டினுக்கு வேண்டாத ஒன்று என்பர்.

தயரதன் அரசு செய்யும் திறம்

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.

வயிரம் இழைத்துச் செய்யப்பட்ட அழகிய அணிகலன்களை அணிந்துள்ள சிங்கம் போன்று வலிமை உள்ள தயரத மன்னன், மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர் போலக் கருதிக் காத்துவருவதால், குற்றமில்லாத இப்பேருலகத்திலே இயங்கியற் பொருள், நிலையிற் பொருள்களாக இருந்து வாழும் உயிரெல்லாம் தங்கி வாழ்வதற்குத் தக்க பெருமைமிக்க உடம்பாகவும் ஆனான்.

குன்றென உயரிய குவவுத் தோளினான்,
வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,
ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை
நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே.

மலைபோலும் வளர்ந்து ஓங்கிய திரண்ட தோள்கள் கொண்ட தயரதனுடைய வெற்றிமிக்க ஆணைச் சக்கரமானது வெம்மையுடைய சூரியனோ என்னும் படிமிக உயரமான வானிலே நின்றும் ஒன்றாகிய பரம்பொருளைப் போல உலகில் வாழும் சர, அசரங்களாகிய உயிர்கள் தோறும் உலாவி நின்று பெரிதும் காத்தல் தொழிலைச் செய்யும்.

'எய்' என பழு பகை எங்கும் இன்மையால்,
மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய்எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான்.

அம் மன்னனுக்கு எவ்விடத்திலும் விரைந்து எழுகின்ற பகைவர்கள் இல்லாமையால் போர்த் தொழிலே பெறாமையால் தினவு கொண்டனவான. மத்தளம் போன்ற திரண்ட தோள்களை உடைய அவ்வரசன் உலகில் வாழும் உயிர்கள் அனைத்தையும் வறியவன் தனக்குள்ள ஒரே வயலைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது போல பாதுகாத்து இனிமையான ஆட்சிசெய்து வருகிறான்.

பால காண்டத்தில் நகரப் படலத்தின் தொடர்ச்சி........

கொடிகள் பறக்கும் அழகு

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின,
முகிலொடு வேற்றுமை தெரிகலா, முழுத்
துகிலொடு நெடுங் கொடிச் சூலம் மின்னுவ்-
பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே.

அகிலின் செழுமையான புகை மாளிகை எங்கும் கலந்தவைகளாய், மேகத்துடன் வேற்றுமை அறிய முடியாத பெரிய கொடிகளுடன் நீண்ட கொடி மரங்களின் நுனியில் நாட்டப்பட்ட சூலங்கள் ஒளிர்பவை, ஒளி வீசும் மின்னல் வரிசையின் பரப்பை ஒத்திருந்தன.

துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
கொடியிடைத் தரள வெண் கோவை சூழ்வன்-
கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே.

உடுக்கை போன்ற இடையினையும், பருத்த தனங்களையும் உடைய மயில் போன்ற சாயலை உடைய மகளிர், தங்கள் இரு கால்களிலும் சிலம்பு அணிந்து அவை ஒலிக்கும்படி நடக்கும் மாளிகைகளிலே கொடிகளுக்கு இடையில் முத்து மாலைகள் தொங்க விடப்பட்டுள்ளவை, மணம் மிக்க கற்பக மரங்களில் பூத்த மாலைகளை ஒத்திருந்தன.

காண் வரு நெடு வரைக் கதலிக் கானம் போல்,
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன்
வாள் நனி மழுங்கிட மடங்கி, வைகலும்
சேண் மதி தேய்வது, அக் கொடிகள் தேய்க்கவே.

பெரிய மலைகளில் காணப்படும் வாழை மரங்களை உடைய தோப்பைப் போல கொடிமரங்கள் நீண்ட கொடிகளின் தொகுதி மிகுந்துள்ளன. வானத்திலுள்ள சந்திரன் தன் ஒளிமிக மழுங்கி வளைந்து நாள்தோறும் தேய்ந்து போவது அந்த கொடிகள் உராய்வதன் காரணமாகத் தான்.

மாளிகைகளின் ஒளிச் சிறப்பும் மணமும்

பொன் திணி மண்டபம் அல்ல, பூத் தொடர்
மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.

பொன்னால் கட்டிய மண்டபம் அல்லாதவை மலர்களால் அமைந்த மண்டபங்களாம். பலர் கூடுமிடமாகக் கட்டிய பொது மன்றங்கள் அல்லாதவை மேன்மாடியோடு அமைந்த மாளிகைகளாம். செய் குன்றுகள் அல்லாதவை இரத்தினங்களைக் கொண்டு அமைத்த முற்றங்களாம். முற்றங்கள் அல்லாதவை முத்துப் பந்தல்களேயாகும்.

மின் என, விளக்கு என, வெயிற் பிழம்பு என,
துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ,
பொன்னுலகு ஆயது, அப் புலவர் வானமே!

உயர்ந்த பொன்னால் தொழில் திறம் அமைய கட்டப் பட்ட அந்த அழிவில்லாத மா நகரின் மின்னலைப் போலவும், விளக்கின் ஒளியினைப் போலவும் சூரியக் கதிர்களைப் போலவும் உள்ள ஒளி தன் மீது படுவதனால் அந்தத் தேவருலகு பொன் உலகாயிற்று.

எழும் இடத்து அகன்று, இடை ஒன்றி, எல் படு
பொழுதிடைப் போதலின், புரிசைப் பொன் நகர்,
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை
நிழல் எனப் பொலியுமால்-நேமி வான் சுடர்.

வட்ட வடிவமாக வானில் ஒளிரும் சூரியன் உதிக்கின்ற காலத்திலே கிரணங்கள் விரிந்தும் நடுப்பகலில் மிக்கும். மாலையில் மறையும் காலத்திலே மீண்டும் கிரணங்கள் மறைந்து போவது தீயைப் போல ஒளிரும் செந்நிறமான மாணிக்கங்களை ஒழுங்காக அமைத்த வட்டமான பொன்னால் அமைந்த மதில் உடைய அந்த நகரம் அயோத்தியாகிய பெண்ணினது நிழலைப் போலக் கதிரவன் விளங்கும்.

ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்த்
தோய்ந்த மா கடல் நறுந் தூபம் நாறுமேல்,
பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ?

நுட்ப வேலைப்பாடு அமைந்த மேகலை அணிந்த மகளிர் தமது கூந்தலுக்கு மணமூட்ட, மாளிகைகளிலே எழுப்பிய கரிய அகிற் புகையை உண்ட மேகங்கள் சென்று படிந்த அந்தப் பெரிய கடலும் அகிலின் நறுமணம் கமழும், என்றால மேகங்களிலிருந்து கீழே விழும் மழைத் தாரையின் தன்மையை அதுவும் அகில் மணம் கமழ்கிறது எனச் சொல்லவா வேண்டும்?

ஆடலும் பாடலும்

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை,-அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை,
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.

கூந்தல் வாரி முடிக்கமுடியாத நிலையில் உள்ள இளம் பெண்களின் குதலைச் சொற்கள் அழகிய குழலோசையை ஒத்திருக்கும். மங்கைப்பருவ மகளிரின் மழலை மொழிகள் மகர யாழின் இசையை ஒத்திருக்கும். வனப்பு பொருந்திய பெண்களது இனிய சொற்களகிய இன்னிசை, கள் விற்கும் பழையர்களின் சேரியிலே கூத்தர்கள் பாடும் இசையை ஒத்திருக்கும்.

கண்ணிடைக் கனல் சொரி களிறு, கால் கொடு
மண்ணிடை வெட்டுவ் வாட் கை மைந்தர்தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன்
சுண்ணம் அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன.

கோபத்தால் கண்களிலே நெருப்பைச் சொரியும் ஆண் யானைகள் கால்களால் நிலத்தை வெட்டுவனவாம். பார்ப்பவர் விரும்பும் அழகிய இளைஞர்களின் விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள் குழிகளை உடையனவாம். அந்தக் குழிகளை அவ்விளைஞர் அணிந்த வாசனைப் பொடிகள் தூர்ப்பனவாகும்.

பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச்
சிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்
அந்தம் இல் சில தியர்; ஆற்ற குப்பைகள்,
சந்திரன் ஒளி கெட, தழைப்ப, தண் நிலா.

பந்தாடுபவராகிய இளம் பெண்களிடமிருந்து (அவரது அணிகலங்களிலிருந்து) முத்துக்கள் சிந்துகின்றன அம்முத்துக்களைச் சேகரித்துச் சேர்க்கும் அளவில்லாத பணிப் பெண்கள் குவித்த அந்த முத்துக் குவியல்கள் சந்திரனது ஒளியும் குறையுமாறு குளிர்ந்த நிலா ஒளி தழைப்பனவாம்.

அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர்
கருங் கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ் மற்று, அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல்போல் தேய்வன் வளர்வது, ஆசையே.

நடன அரங்குகளிலே பெண்கள் நடனம் ஆடுவார்கள். அவர்களின் கருமையான கடைக்கண்களாகிய வேல்கள் காதல் மிக்க ஆடவர்களின் மனத்தை உருக்குவனவாம். பின்னும் அவ்வாடவரின் உயிர்கள் அப்பெண்களின் இடைகளைப் போல மெலிவனவாகும். அந்த மைந்தர்களுக்கு அம்மகளிரின் மீது ஆசை பெருகுவதாகும்.

பொழிவன சோலைகள் புதிய தேன் சில்
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன் அன்னவை நுழைய, நோவொடு
குழைவன, பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே.

சில சோலைகள் புத்தம் புதிய தேனைச் சொரிவன அத்தேனை விரும்பி தென்றலும் வண்டும் மெல்ல அச் சோலைகளில் நுழைவனவாம்.அவை நுழைய தலைவனைப் பிரிந்த மகளிரின் (காமத்தால்) கொதிக்கும் தனங்கள் வருத்தத்துடன் மெலிவனவாயின.

இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை
நிறங் கிளர் பாடலான் நிமிர்வ் அவ்வழி
கறங்குவ வள் விசிக் கருவி; கண் முகிழ்த்து
உறங்குவ, மகளிரோடு ஓதும் கிள்ளையே.

மகர யாழிலே எடுத்த (விரலாலே நெருடி கவர்ந்தெடுக்கப்பட்ட) இனிய இசையொலிகள் உள்ளக் கிளர்ச்சி தரும் பாடல்கள் காரணமாக வாய்ப்பாட்டோடு யாழ் இசை நலிந்தொலிப்பன, எடுத்தொலிப்பன. அந்த முறையில் வார் கட்டிய கருவியாகிய முழவுகள் ஒலிப்பன. அந்த இசையைக் கேட்டு பெண்களோடு பேசும் கிளிகள் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவனவாம்.

மங்கையரின் அழகு மேனி

குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுகத் தொழில்கொடு, பழிப்பு இலாதன
ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்,
உதைபடச் சிவப்பன, உரவுத் தோள்களே.

நாண் பூட்டிய வரியமைந்த வில் போன்ற நெற்றியையும், கோவைப் பழம் போன்ற வாயையும் உடைய பெண்களின் இரண்டு பாதங்களுக்கும் செம்பஞ்சு ஊட்டுதலாகிய தொழிலைக் கொண்டு பிறரால் பழித்துக் கூற இயலாதனவாகிய நெருங்கிய இதழ்களை உடைய தாமரை போன்ற பாதங்களால் உதை பட்டதனாலே ஆண்களின் வலிமை மிக்க தோள்கள் சிவந்து காணப்படும். (ஊடலால் தலைவி, தலைவனைக் காலால் உதைப்பதுண்டு. அதனால் அத்தலைவனது வலிய தோள்கள் சிவந்தன என்கிறார்.)

பொழுது உணர்வு அரிய அப் பொரு இல் மா நகர்த்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு எனப்
பழுது அறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்,
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே?

பொழுதை அறிவதற்கு அரிய அந்த ஒப்பற்ற பெருநகரில் உள்ள கற்பின் சிறப்பால் எல்லோரும் வணங்கத்தக்க பெருமையுள்ள பெண்களது ஒளி விளக்கு போன்ற, குற்றம் எதுவுமின்றித் திகழும் உடம்பினை பார்க்க விரும்பும் ஆசையால் தானே எழுதிய ஓவியங்களும் கண்களை இமைக்காதனவாய் உள்ளன.

தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு; அல்லன மகளிர் மேனியே.

குளிர்ந்த தாமரைப் பூவில் வாழும் இலக்குமி தேவி தங்கியிருக்கும் அயோத்தி நகர மாளிகைகள் மிக்க ஒளி வீசி நின்று இருளை ஓட்டுபவை செறிந்த ஒளியுடைய நெய் விளக்குகளின் விளக்கமோ மணிகளின் ஒளியோ அல்ல. அந்நகரத்து மகளிரின் மேனி ஒளியே.

மதங்கியரின் ஆடல் பாடல்

பதங்களில், தண்ணுமை, பாணி, பண் உற
விதங்களின், விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள்; அல்லன புரவித் தார்களே.

மத்தள ஒலி, தாள ஓசை, பாட்டு ஒலி இவைகளுக்குப் பொருந்த நாட்டிய நூல் முறைப்படி பல விதங்களாக பாதங்களால் சதிபெற வைத்து நடனம் ஆடுபவர்கள், ஆடல் பாடல் வல்ல பெண்கள் ஆவர். அந்தத் தாளச் சதியை விவரித்துக் காட்டுபவை அப்பெண்கள் கால்களில் அணிந்துள்ள சதங்கைகளும், அவ்வாறு ஆடுகின்ற குதிரைகளின் கால்களுமே.

மாந்தரின் மகிழ்ச்சி

முளைப்பன முறுவல்; அம் முறுவல் வெந் துயர்
விளைப்பன் அன்றியும், மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண் இடை; இளைப்ப, மென் முலை
திளைப்பன, முத்தொடு செம் பொன் ஆரமே.

அந்நகரத்துப் பெண்களின் முகத்திலே எப்போதும் புன்சிரிப்பு தொன்றுவன. அந்த புன்சிரிப்பு, அப்பெண்கள்பால் காதல் கொண்டஆடவர்க்குக் கொடிய துன்பத்தை உண்டாக்கும். அல்லாது, அம்மகளிரின் சிறிய இடைகள் நாள்தோறும் மெலிந்து இளைப்பனவாம் அவர்களது மெல்லிடை இவ்வாறு இளைக்க அம்மகளிரது மென்மையான தனங்கள் முத்து வடங்களும் பொன்னரி மாலைகளும் பூண்டு திளைப்பனவாகும்.

தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை, கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும்; விழும்தொறும், மண்ணும் கீழ் உறக்
குழை விழும்; அதில் விழும், கொடித் திண் தேர்களே.

நெருப்பென விழிக்கும் கண்களை உடைய ஆண் சிங்கங்களும் துணையான பெண்சிங்கங்களும் தங்குவதற்கு ஏற்றனவாகிய மலைக் குகைகளை விரும்பும். மலை போன்ற யானைகளின் மதநீர் மழை பொழியும். அவ்வாறு மழை சொரியும் தோறும் நிலமும் ஆழமாகுமாறு சேறாகும். அந்தச் சேற்றில் கொடிகளை உடைய வலிய தேர்கள் புதையுண்ணும்.

ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன,
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
ஓடுவார் இழுக்குவது, ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே.

மாலை சூடிய மகளிர் வாடிவிட்டன என்று இகழ்ந்து எறிந்து விட்ட மாலைகள் ஆடுகின்ற நெடிய குதிரைகளின் குளம்புகளைப் பிணிப்பனவாகும். ஊடல் இடையிலே நிகழ, பின் ஆடவருடன் கூடி மகிழும் மகளிரின் அழகிய தனங்களிலிருந்து வழித்து வீதியில் எறிந்த சந்தனத் தேய்வை அத்தெருவில் ஓடுபவர்களை வழுக்கி விழச் செய்வனவாம்.

இளைப்ப அருங் குரங்களால், இவுளி, பாரினைக்
கிளைப்பன் அவ் வழி, கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி; அவை ஒளிர, மீது தேன்
துளிப்பன, குமரர்தம் தோளின் மாலையே.

குதிரைகள் வீதியிலே ஓடும்பொழுது தமது குளம்புகளால் நிலைத்தைக் கிளறுகின்றன. அங்குக் கிளர்ந்து மேலெழுந்த புழுதியினாலே அக்குதிரைகளின் மீது ஏறிவரும் வீரர்கள் அணிந்த மணிகள் மறைவன ஆயின. அம் மணிகள் மறுபடியும் ஒளிவீசுமாறு வீரர்கள் தோள்களில் அணிந்த மாலைகள் தேன் துளிகளைச் சொரிந்தன.

விலக்க அருங் கரி மதம் வேங்கை நாறுவ்
குலக் கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ்
கலக் கடை கணிப்ப அருங் கதிர்கள் நாறுவ்
மலர்க் கடி நாறுவ, மகளிர் கூந்தலே.

விலக்குவதற்கு அரிய யானைகளின் மதநீர் வேங்கை மலர்களைப் போல மணக்கிறது.உயர்குடியில் பிறந்த கொடியை ஒத்த மகளிரின் வாய்கள் குமுத மலர் போல் விளங்குகின்றன. அம்மகளிரின் அணிகலன்களில் அளவிடற்கு அரிய ஒளிக் கதிர்கள் எங்கும் ஒளிர்கின்றன. அந்த மகளிரின் கூந்தல் மலர் மணம் கமழ்கிறது.

கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
யாவையும் வழங்கு இடத்து இகலி, இந் நகர்
ஆவணம் கண்டபின், அளகை தோற்றதே!

சிறந்த நகரங்களின் வரிசையிலே அயோத்தி நகருடன் சேர்ந்து எண்ணப்படாத அந்தத் தேவர் நகரமான அமராவதியை இந்த நகருக்கு இணையோ, அல்லவோ என்று எடுத்துச் சொல்வது எதற்கு?எல்லா வளங்களையும் தரும் விதத்திலே வேறுபட்டு விளங்குவதோடு இந்த நகரத்துக் கடைத் தெருவைப் பார்த்த பிறகு செல்வம் மிக்க தென்னும் அளகாபுரியே தோல்வியுற்றது.

அதிர் கழல் ஒலிப்பன் அயில் இமைப்பன்
கதிர் மணி அணி வெயில் கால்வ் மான்மதம்
முதிர்வு உறக் கமழ்வன் முத்தம் மின்னுவ்
மதுகரம் இசைப்பன்-மைந்தர் ஈட்டமே.

அந்நகரத்தில் அதிர்கின்ற வீரக் கழல்களின் ஒலி ஆர்ப்பரித்து ஒலிப்பனவாக. வேல் முதலிய படைக்கலங்கள் ஒளிர்வனவாக. ஒளிமிக்க மணிகளாலான அணிகலன்கள் எங்கும் ஒளிவீசுபவையாக. கத்தூரி மிகுதியும் கமழ்வதாக. அணிகலன்களில் அமைந்த முத்துக்கள் மின்னல் போல ஒளிர்வன. வண்டுகள் பண் பாடுவனவாக. இவ்வாறாக ஆடவர் கூட்டம் விளங்கியது.

வளை ஒலி, வயிர் ஒலி, மகர வீணையின்
கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,
துளை ஒலி, பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி, -கடல் ஒலி மெலிய, விம்முமே.

அந்த நகரமெங்கும சங்குகளின் ஓசை, கொம்புகளின் ஓசை, மகர யாழ் இனங்களின் ஓசை, மத்தள ஓசை, கின்னர ஓசை, துளைக் கருவிகளான புல்லாங்குழல் முதலியவைகளின் ஓசை மற்றும் பலவகை வாத்தியங்கள் முழக்கும் ஆரவாரத்தின் விளைவாக உண்டாகும் ஓசை ஆகிய இவ்வோசைகள் எல்லாம் கடல் முழக்கமும் மெலியும்படி ஒலிக்கும்.

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்,
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்,
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்,
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.

மன்னர் மன்னனாகிய அயோத்தி வேந்தனுக்கு அடங்கிய சிற்றரசர்கள் செலுத்தும் கப்பத்தை எண்ணி அளவிடும் மண்டபங்களும், அன்னம் போன்ற நடையையுடைய நடன மாதர்கள் நடனம் ஆடும் மண்டபங்களும், நினைப்பதற்கும் அரியனவான சிறந்த வேதங்களை வல்லோர் ஓதும் மண்டபங்களும் சிறப்பித்துப் பேசுவதற்கும் அரியனவான பல கலைகளையும் அறிஞர்கள் ஆராயும் பட்டி மண்டபங்களும் அயோத்தி நகரெங்கும் இருந்தன.

இரவியின் சுடர் மணி இமைக்கும், தோரணத்
தெரிவினின் சிறியன, திசைகள்; சேண் விளங்கு
அருவியின் பெரியன, ஆனைத் தானங்கள்;
பரவையின் பெரியன, புரவிப் பந்தியே.

அந்த நகரத்துத் தோரணங்கள் சூரியன் போன்ற சுடர்மிகு மணிகளால் ஒளிரும். நெடிய வீதிகளைவிடத் திசைகள் சிறியனவாம். மலையின் மிக உயர்ந்தே இருக்கும் அருவியை விட யானையின் மதநீர் பெரியதாகும். கடல்களை விடவும் பெரியது அந்நகரத்தில் குதிரைகள் கட்டும் இடம்.

சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன, மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ் மற்று அவை,
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே.

அந் நகரத்து மாளிகைகளின் உச்சி மிக உயர்ந்திருப்பதால் மேகத்தைப் பிணிக்கும். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விளங்கும் மாளிகைகளிலெல்லாம் மகளிரின் ஒளிமிகு முகங்கள் மலர்ந்து பொலிவனவாகும். அம்முகங்களில் அம்புகள் விளங்குகின்றன (கண்கள்). மற்று. அவ்வம்புகள் சிங்கத்தை ஒத்த ஆடவர்களின் மார்பில் ஆழ்வனவாம்.

மன்னவர் கழலொடு மாறு கொள்வன,
பொன் அணித் தேர் ஒலி, புரவித் தார் ஒலி;
இன் நகையவர் சிலம்பு ஏங்க, ஏங்குவ,
கன்னியர் குடை துறைக் கமல அன்னமே.

அரசர்களின் வீரக் கழல்களின் ஒலியுடன் மாறு கொண்டு ஒலிப்பவை பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தேர்களின் ஒலியும், குதிரைப் படைகளின் ஒலியுமே ஆகும். இனிய சிரிப்பு உடைய மகளிரின் சிலம்புகள் ஒலிக்கும்படியாக நீராடும் நீர்த்துறையில் வாழும் தாமரையில் உள்ள அன்னங்களே ஏங்கு வனவாம்.

நகர மாந்தரின் பொழுது போக்குகள்

ஊடவும், கூடவும், உயிரின் இன் இசை
பாடவும், விறலியர் பாடல் கேட்கவும்,
ஆடவும், அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும், பொழுது போம்-சிலர்க்கு, அத் தொல் நகர்.

அந்தப் பழமை வாய்ந்த நகரத்திலே வாழும் சிலர்க்கு காதலர்களோடு ஊடல் கொள்ளும் ஊடல் தீர்ந்து கூடி இன்புற்று மகிழவும், உயிரினும் சிறந்ததான இனிய இசை பாடி மகிழவும், இசையில் வல்ல விறலியர்களைப் பாடச்செய்து, அதனைக் கேட்கவும் இசைக்கேற்ப நடனம் ஆடவும், இடமகன்ற நீர்நிலைகளிலே நீராடவும், அழகிய மலர்களை அணிந்து மகிழவும் ஆகிய செயல்களால் பொழுது போகும்.

முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்,
எழும் குரத்து இவுளியடு இரதம் ஏறவும்,
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும், பொழுது போம்-சிலர்க்கு, அம் மா நகர்.

பிளறி முழக்கமிடும் வலிமைமிக்க மத யானைகளின் மீதுதமது மிகுந்த வலிமையால் ஏறி ஊர்ந்து சென்றும், எழுகின்ற ஆரவாரமுடைய குதிரைகளோடு தேர்களில் ஏறி ஊர்ந்து சென்றும், வறுமைத் துன்பத்தோடு வந்து இரந்தவரது துன்பம் நீங்கிட வேண்டிய பொன்னும் வாரி வழங்கியும் அந்தப் பெரு நகரில் வாழும் சிலர்க்குப் பொழுது போகும்.

கரியடு கரி எதிர் பொருத்தி, கைப் படை
வரி சிலை முதலிய வழங்கி, வால் உளைப்
புரவியில் பொரு இல் செண்டு ஆடி, போர்க் கலை
தெரிதலின், பொழுது போம்-சிலர்க்கு, அச் சேண் நகர்.

யானையோடு யானையை எதிர்த்துப் போர் புரியவிட்டு கையில் உள்ள படைகளான கட்டமைந்த வில் முதலியவைகளைப் பயின்றும், நீண்ட பிடரி மயிரை உடைய குதிரைகளின் மீது ஏறிக்கொண்டு, ஒப்பற்ற ‘செண்டு’ என்ற பந்தாடியும், போருக்குரிய கலைகளைத் தெரிந்து பயின்றும், அந்தச் சிறந்த நகரத்தில் மற்றும் சில பேருக்குப் பொழுது போகும்.

நந்தன வனத்து அலர் கொய்து, நவ்விபோல்
வந்து, இளையவரொடு வாவி ஆடி, வாய்ச்
செந் துவர் அழிதரத் தேறல் மாந்தி, சூது
உந்தலின் பொழுது போம்-சிலர்க்கு, அவ் ஒள் நகர்.

நந்தனவனம் சென்று மலர்ந்த மலர்களைப் பறித்தும், பெண்மானைப் போல வந்து தம்மை ஒத்த இள மகளிருடன் பொய்கையில் நீராடியும், தமது வாயின் பவள நிறம் அழியுமாறுதேனைப் பருகியும், தாயமாடும் முதலிய விளையாட்டுகள் ஆடியும் அந்த ஒளிமிக்க நகரிலே வாழும் மற்றும் சிலருக்குப் பொழுதுபோகும்.

கொடிகளும், தோரண வாயில் முதலியவும்

நானா விதமா நளி மாதிர வீதி ஓடி,
மீன் நாறு வேலைப் புனல் வெண் முகில் உண்ணு மாபோல்,
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீப் போய்,
வான் ஆறு நண்ணி, புனல் வற்றிட நக்கும் மன்னோ.

அந்நகரின் குறைவில்லாத மாடங்களின் மீது ஆடுகின்ற கொடிகள் நாலாவிதமாகவும் பறந்து பெரிய வான வீதியிலே ஓடி, மீன் நாறும் கடல் நீரினை வெண்மை நிறமுடைய மேகங்கள் பருகுவது போல மேலே சென்று வானாறாகிய ஆகாய கங்கையை அடைந்து அதன் தண்ணீர் வற்றும்படி நக்கும்.

வன் தோரணங்கள் புணர் வாயிலும், வானின் உம்பர்
சென்று ஓங்கி, 'மேல் ஓர் இடம் இல்' எனச் செம் பொன் இஞ்சி-
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசைக் குப்பை என்ன-
ஒன்றோடு இரண்டும், உயர்ந்து ஓங்கின, ஓங்கல் நாண.

வன்மையான தோரணங்கள் பொருந்திய வாயில்களும், செம்பொன்னால் அமைந்த மதில்கள் ஒன்றோடிரண்டாகிய மூன்றும் வானத்தின் மேலே சென்று உயர்ந்து, அதற்கு மேலே செல்ல ஒரு இடமும் இல்லை என்பதால் மலை போன்ற தோள்களை உடைய அந்நகரத்து ஆண்களின் சிறந்த குணங்களுடன் கூடிய நட்புள்ளம் புகழ்த் தொகுதி ஆகிய நல்ல பண்புகள் உயர்ந்திருப்பது போல, வாயில் மதில் ஆகியவைகளின் உயரத்தைக் கண்டு மலையும் நாணுமாறு உயர்ந்து விளங்கின.

காடும், புனமும், கடல் அன்ன கிடங்கும், மாதர்
ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும், உம்பர்
வீடும், விரவும் மணப் பந்தரும், வீணை வண்டும்
பாடும் பொழிலும், மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ!

அந்நகரைச் சூழ்ந்த காடுகளிலும் கொல்லைகளிலும் கடல் போன்ற அகழியின் ஓரங்களிலும் பெண்கள் நீர் விளையாடும் தடாகங்களிலும் அருவிகளையும், சுனைகளையும் உடைய மலைகளிலும் மேல், வீடுகளிலும் பற்பல இடங்களிலும் விரவியுள்ள முத்துப் பந்தர்களிலும்,வீணை போல வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலைகளிலும், மலர்களாலும் தளிர்களாலும் அமைந்துள்ள படுக்கைகள் நிலைத்திருக்கும்.

செல்வமும் கல்வியும் சிறந்த அயோத்தி

தௌ; வார் மழையும், திரை ஆழியும் உட்க, நாளும்,
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.

தெளிந்த நீரைத் தரும் மேகங்களும், அலைகளை உடைய கடலும், அஞ்சும்படி நாள்தோறும் தோல் வாரினால் கட்டிய பேரிகைகள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்நகரில் வாழ்கின்ற ஐயறிவே உடைய மாக்களிடையே கூட களவு செய்பவர் இல்லாமையால் பொருள்களைக் காவல் காப்பவரும் இல்லை. எதையும் யாசிப்பவர் இல்லையாதலால் கொடையாளிகளும் அந்த நகரத்தில் இல்லை.

கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே,
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.

நல்ல கலை நூல்களைப் படிக்காது நிற்பவர்களாகிய வீணர்கள் இல்லாமையாலே கல்வியில் முற்றும் வல்லவர் என்று அங்கு எவரும் இல்லை. அக்கல்வித் துறைகளில் வல்லவரும். அஃது இல்லாதவரும் இல்லை. அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி, பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை, உடையவர்களும் இல்லை.

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

கல்வி என்னும் ஒரு வித்து ஒப்பற்றதாக முளைத்து மேலெழுந்து, எண்ணற்ற பல்நூல் கேள்வியாகிய முதன்மையும், வலிமையும் வாய்ந்த கிளைகளை எங்கும் பரவச் செய்து, அரிய தவமாகிய இலைகள் தழைத்து, எல்லா உயிர்களிடமும் செலுத்தும் அன்பாகிய அரும்பு அரும்பி அறச் செயல்களாகிய மலர்கள் மலர்ந்து, இன்ப அநுபவம் என்னும் பழத்தை பழுத்த பழ மரத்தைப் போன்று அந்த அயோத்தி மாநகர் பொலிந்து விளங்கியது.


நாட்டுப் படலம் அயோத்தி நகரின் சிறப்பினை கூறும் படலமாகும். இதில் நகரின் அமைப்பு, மதிலின் மாட்சி, அகழியின் பாங்கு சோலையின் தன்மை, எழு நிலை மாடங்கள், மாளிகைகள் ஆகியவற்றின் தோற்றமும், பொலிவும் ஆகியவற்றை இப்படலம் விளக்குகின்றது. நாடு, நகரம், காடு, மேடு, எதுவானாலும் அங்கு வாழும் மக்களின் செயலையும் சீர்மையையும் பொறுத்தே சிறப்பாக அமையும். அதனால் அயோத்தி நகரத்தின் மக்களை பற்றி கம்பர் வர்ணிக்கின்றார். நகரத்தாரின் ஆடல், பாடல், மகளிர் மேனியழகு, மாந்தரின் மகிழ்ச்சி ஆகியவற்றை அறிவதோடு அங்கு வழ்வோரின் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் அறிகின்றோம். நகரப் படலத்தில் எழுபத்து நான்கு பாடல்கள் உள்ளன. அதனை இரண்டு பகுதியாக பதிவு செய்கின்றேன்.

அயோத்தி மாநகரின் அழகும் சிறப்பும்

செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வல்லிய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி புரிகின்றது-அயோத்தி மா நகரம்.

செம்மையானவை, இனிமை பொருந்தியவையும் கூறும் நல்ல பொருளால் சிறந்தவையும், நுட்பமானவையும் ஆகிய இனிய சொற்களை கவர்ந்து கொண்ட கவிஞர்களாலும், வடமொழியில் வல்ல வான்மீகி முதலான முனிவர்கள் புகழப்பட்டது அயோத்தி நகரம். மேலும் அளவற்ற உலகங்கள் எல்லா வற்றிலும் வாழ்கின்றவர்கள் எல்லோரும் தவங்களைச் செய்து அடைவதற்கு விரும்புகின்ற அந்தப் பரமபதமாகிய வீட்டு உலகத்தவர்களும் பிறப்பதற்கு தகுந்த நகரம் இது. என்னும் விருப்பத்திற்கு உரியது அயோத்தியாகிய பெருமைக்குரிய நகரமேயாகும்.

நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள் வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்?

அயோத்தி நகரமானது நிலமகளது முகமோ! முகத்திலணிந்த திலகமோ! அவளுடைய கண்களோ! நிறைவான நெடிய திருமாங்கலியக் கயிறோ? மார்பகங்களின் மேலணிந்து திகழும் மணிமாலையோ!அந்நில மகளின் உயிர் இருக்கும் இருப்பிடமோ? திருமகளுக்கு வாழ்வதற்கினியதாமரை மலரோ! திருமாலின் மார்பிலணியும் நல்ல மணிகள் வைக்கப் பட்ட பொன் பெட்டி தானோ! விண்ணுலகினும் மேலான வைகுந்தமோ? யுகமுடிவில் உயிர்களெல்லாம் தங்கும் திருமாலின் திருவயிறோ?வேறு எதுவென கூறுவோம்?

உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்பு அருங் காதல் அது பிடித்து உந்த, அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ!

உமாதேவியை இடப்பாகத்திலே கொண்டிருக்கும் சிவபெருமானும், பூமகள், நிலமகள் ஆகிய இருவருக்கும் ஒப்பற்ற கணவனாகிய திருமாலும், தாமரை மலரில் பொறுமையே பெருஞ் செல்வமாகக் கொண்டு வாழும் பிரமதேவனும், இவர்களே உவமை கூற முடியாத வேறு இந்நகரைக் காண்பதற்கு நகர் இல்லை என்பதால் தடுக்கொணாத விருப்பம் பிடித்துத் தள்ள வானத்திலே சந்திர. சூரியர்கள் இமைக்காதவர்களாகத் திரிகின்றனர் இதுவல்லாது அவர்கள் திரிவதற்குச் சொல்லக் கூடிய காரணம் வேறு எது?

அயில் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும், அளகையும் என்று இவை, அயனார்
பயிலுறவு உற்றபடி, பெரும்பான்மை இப் பெருந் திரு நகர் படைப்பான்;
மயன் முதல் தெய்வத் தச்சரும் தம்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்;-
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இந் நகர் புகலுமாறு எவனோ?

கூர்மையான முகத்தை உடைய வச்சிரப்படை கொண்ட தேவேந்திரனது அமராவதி நகரும், குபேரனது நகரமான அளகாபுரியும், ஆகிய இரு நகரங்களையும் பிரமன் படைத்தது பயிற்சி பெறும்படியாகும். மிகச் சிறப்புடைய இந்தப் பெருநகரைப் படைப்பதற்கு மயன் முதலான தேவஉலகச் சிற்பிகளும் தமது நினைப்பு மாத்திரத்தில் படைக்கும் தொழிலை மறந்து விட்டவர்களாக, அயோத்தியை ஒத்த நகரைப் படைக்க இயலாமைக்கு வெட்கமுற்று நிற்பர். மேகங்களை தொடுமளவு நீண்ட மேல் நிலைகளை கொண்ட மாடங்களை உடைய இந்த அயோத்தி மாளிகைகளின் சிறப்பைச் சொல்வது எவ்வாறு?

'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்' என்னும் ஈது அரு மறைப் பொருளே;
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?
எண் அருங் குணத்தின் அவன், இனிது இருந்து, இவ் ஏழ் உலகு ஆள் இடம் என்றால்,
ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் உண்டு என உரைத்தல்?

இம்மையில் புண்ணியம் செய்தவர்கள் மறுமையில் சுவர்க்கம் அடைவார்கள். இது வேதங்கள் கூறும் கருத்தாகும். இராம பிரானை அல்லாது வேறு யார் இந்த உலகத்திலே சிறந்த தவத்தை அறத்துடனே வளர்த்தவர்கள் இருக்கிறார்களா? நினைப்பதற்கரிய நற்குணங்களை உடைய அந்த இராமபிரான் இருந்து இந்த ஏழுலகத்தினையும் ஆளும் இடம் அயோத்தி என்றால் இதைவிடவும் மேலான இன்பம் உள்ள இடம் உண்டு எனக் கூற இயலுமோ?

தங்கு பேர் அருளும் தருமமும், துணையாத் தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செங் கண் மால் பிறந்து, ஆண்டு, அளப்ப அருங் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்,
அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?

தம்மிடம் தங்கிய மிகுந்த கருணையும் அறமுமே துணையாகக் கொண்டு தமக்குப் பகையாகிய புலன்களைக் கட்டுப்படுத்துபவராகி மேன்மேலும் வளர்கின்ற தவத்தையும் மெய்யறிவையும் பெற்றிருக்கும் மேலோர்கள் யாவருக்கும் அடைக்கலமாக அடையத்தக்க, அழகிய கண்களை உடைய திருமால் அவதரித்து அங்கு (அயோத்தி நகரில்) அளவிட இயலாத பலகாலம் இலக்குமி தேவியின் அவதாரமான சீதா பிராட்டியுடன் சிறப்போடு தங்கி இருந்தான் என்றால் அழகிய விசாலமான இவ்வுலகிலே இந்த அயோத்திக்கு நிகரான அழகிய நகரம் தேவ உலகில்தான் எது இருக்கிறது?

நகர மதிலின் மாட்சி

நால் வகைச் சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன, மதி தோய்
மால் வரைக் குலத்து இனி யாவையும் இல்லை; ஆதலால், உவமை மற்று இல்லை;
நூல் வரைத் தொடர்ந்து, பயத்தொடு பழகி, நுணங்கிய நுவல அரும் உணர்வே
போல் வகைத்து; அல்லால், 'உயர்வினோடு உயர்ந்தது' என்னலாம்-பொன் மதில் நிலையே.

நான்கு சதுரமாகச் சிற்பநூல் விதிப்படியே நாட்டப் பட்டு மிகவும்உயர்ந்துள்ள மதில்கள் போன்ற குளிர்ந்த பெரிய மலைக் கூட்டத்தின் எந்த மலையும் இங்கில்லை. ஆதலால் மதிலுக்கு உவமை கூற வேறு எதுவும் இல்லை. அழகிய அந்நகரத்து மதில்களின் நிலைமை பற்றிச் சொல்லுவோமானால் ஞான நூல்களின் எல்லை வரைசென்று கற்றறிதலோடு நில்லாமல் பயனாகப் பெற்று உணர்ந்து அவற்றின் நுணுக்கமாகியதும், கூறுதற்கரியதும் ஆகிய மெய்யுணர்வையே போன்ற தன்மை உடையதல்லாமல் அந்த மெய்யுணர்வைப் போலவேஉயர்ந்தது என்றும் கூறலாம்.


மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால், வேதமும் ஒக்கும்; விண் புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும், திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால்; எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும்.

அடைதற்கறிய அறிவால் எல்லை காண முடியாத படியிருப்பதால் வேதத்துக்கு ஒப்பாகும். விண்ணுலகம் வரை சென்றிருப்பதால் தேவர்களையும் ஒத்திருக்கும். வலிய பொறிகளை உள்ளடக்கிய செயலால் முனிவர்களை ஒத்திருக்கும். காக்கும் தொழிலால் மானை ஊர்தியாகக் கொண்ட துர்க்கையை ஒக்கும். சூலம் ஏந்தி இருப்பதால் காளிதேவியை ஒத்துக் காணப்படும். பெருமை மிக்க எல்லாவற்றையுமே ஒத்திருக்கும் அருமையால் ஈசனை ஒக்கும். எவரும் எளிதில் அடைய இயலாதிருப்பதால் இறைவனை ஒத்திருக்கும்.


பஞ்சி, வான் மதியை ஊட்டியது அனைய படர் உகிர், பங்கயச் செங் கால்,
வஞ்சிபோல் மருங்குல், குரும்பைபோல் கொங்கை, வாங்குவேய் வைத்தமென் பணைத் தோள்,
அம் சொலார் பயிலும் அயோத்தி மா நகரின் அழகுடைத்து அன்று என அறிவான்,
இஞ்சி வான் ஓங்கி, இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்துளதே!

செம்பஞ்சுக் குழம்பைப் பூசி, வெண்மையான சந்திரனை ஒழுங்கு பெற வைத்ததை ஒத்த ஒளி வீசும் நகங்களை உடைய தாமரை போன்ற சிவந்த பாதங்களையும், வஞ்சிக கொடி போன்ற இடையையும், தென்னங்குரும்பை போன்ற தனங்களையும், வளைந்த மூங்கில் போன்ற மென்மையான பருத்த தோள்களையும், உடைய அழகிய சொற்கள உடைய மகளிர் நிறைந்திருக்கின்ற அயோத்தியாகிய சிறந்த நகரை விட அழகுடையதோ அல்லவோ என்று அறிவதற்காகவே அந்நகரத்து மதில்கள் ஆகாய மளவு உயர்ந்து தேவர்கள் வாழும் உலகைக் காண எழுந்ததை ஒத்து உயர்ந்துள்ளது.

கோலிடை உலகம் அளத்தலின், பகைஞர் முடித் தலை கோடலின், மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும் நோக்க அருங் காவலின், வலியின்,
வேலொடு வாள், வில் பயிற்றலின், வெய்ய சூழ்ச்சியின், வெலற்கு அரு வலத்தின்,
சால்புடை உயர்வின், சக்கரம் நடத்தும் தன்மையின்,-தலைவர் ஒத்துளதே!

செங்கோலால் உலகத்தைக் காப்பதாலும், அளவுகோலால் அளக்கப் படுதலாலும், பகை மன்னரின் மகுடமணிந்த தலைகளை அழிப்பதாலும் தன்னிடமுள்ள இயந்திரங்களால் பகைவர்தலைகளைத் துண்டிப்பதாலும், மனுநூல் நெறிப்படி நடக்கின்ற நேர்மையாலும், சிற்ப நூலின்படி அமைந்து நேராயிருப்பதலும், எளிதில் எவரும் காண இயலாத காவல் உடையதாலும், வலிமை மிக்க வேல்முதலிய படைக்கலப் பயிற்சி உடைமையாலும் (வீரர்கள் வேல் முதலியபடைக் கலங்களைப் பயில்வதாலும்) கொடியதந்திரம் கொண்டிருப்பதாலும், மற்றவர்களால் வெல்ல இயலாத வல்லமை உடையதாலும், சிறப்பு மிக்க உயர்வுடைமையாலும் ஆணை செலுத்தும் தன்மையாலும் அந்த மதில் சூரிய குலத் தலைவர்களை ஒத்து இருக்கிறது.

சினத்து அயில், கொலை வாள், சிலை, மழு, தண்டு, சக்கரம், தோமரம், உலக்கை,
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல், என்று இவை கணிப்பு இல் கொதுகின்
இனத்தையும், உவணத்து இறையையும், இயங்கும் காலையும், இதம் அல நினைவார்
மனத்தையும், எறியும் பொறி உள என்றால், மற்று இனி உணர்த்துவது எவனோ?

சினம் மிக்க வேலும், பகைவரைக் கொல்லும் வாளும், வில்லும், மழுவும், கதையும், சக்கரம், தோமரம், உலக்கை ஆகியவையும் மேகத்திலுள்ள இடியும், அஞ்சும்படியான கவண்கல்லும், என்று கூறப்படும் படைக்கலங்கள் அளவிட முடியாதவை. கொசுக்களின் கூட்டத்தையும், பறவைகளின் வேந்தனான கருடனையும், விரைந்து செல்லும் காற்றையும், நன்மை யல்லாதவைகளை நினைப்பவர் மனத்தினையும், கொல்லவல்ல இயந்திரங்களும், அந்த மதிலில் உள்ளன என்றால் மதிலின் காவலைப் பற்றி விரித்துரைக்க என்ன இருக்கிறது.

'பூணினும் புகழே அமையும்' என்று, இனைய பொற்பில் நின்று, உயிர் நனி புரக்கும்,
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவிதன் குலமுதல் நிருபர்-
சேணையும் கடந்து, திசையையும் கடந்து,- திகிரியும், செந் தனிக் கோலும்,
ஆணையும் காக்கும்; ஆயினும், நகருக்கு அணி என இயற்றியது அன்றே.

அணிகலன்களை விடப் புகழே சிறந்த அணிகலமாக அமையும் என நினைத்து இத்தகைய நல்லொழுக்கத்தில் நின்று நாட்டு மக்களைக் காப்பவரான, அழகிய எட்டுத் திசைகளிலும் உள்ள இருள் நீங்கும்படி ஒளிர்கின்ற சூரிய குலத்தில் தோன்றிய அரசர்களின் ஆணையாகிய சக்கரமும், செங்கோலும் கட்டளையும் மேலுலகத்தையும் திசைகளையும் கடந்து சென்று காக்கவல்லது. ஆனாலும் அந்தமாநகருக்கு அழகு செய்ய அமைந்தது அம்மதில் மட்டுமே.

ஆழ்ந்த அகழியின் மாண்பு

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய், புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும் படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;-நவிலலுற்றது நாம்.

நாம் இப்போது சிறப்பித்துச் சொல்ல வந்தது அம்மதிலின் புறத்தே அமைந்த அகழியானது, மேலே கூறப்பட்ட அத்தகையபெரிய மதிலை அலைகள் பொங்கும் பெரும் புறக்கடல் சூழ்ந்திருப்பது போலச் சூழ்ந்து விலை மாதர்களது மனத்தைப் போல மிகக் கீழே போய், இழிந்த பாடல்களைப் போல தெளிவு இல்லாமல், கன்னியரின் அல்குலினிடம் போல, எவருக்கும் நெருங்க இயலாத காவலை உடைய தாய்நல்ல நெறியில் செல்ல விடாமல் தடுக்கும் ஐம்பொறிகளைப் போன்றதாகிய எதிரிகளைத் தாக்கும் முதலைகளை உடையது.

ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா,
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா,
மேகம், மொண்டு கொண்டு எழுந்து, விண் தொடர்ந்த குன்றம் என்று,
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதிற்கண் வீசுமே.

தம் கூட்டத்துடனே செல்லும் மேகங்கள் எல்லை காண இயலாத, நாக லோகம்வரை ஆழ்ந்துள்ள பரந்த அகழியை அச்சத்தைத் தரும் கடலாகும் எனக் கருதி, நீரை முகந்துகொண்டு எழுந்து அம்மதிலை வானளவும் உயர்ந்த மலை என்று கருதி, உடல் வருந்தி அம்மதிலின் மீது நின்று மழைத் தாரையை அம் மதிலின்மீது பொழியும்.

அந்த மா மதில் புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
கந்தம் நாறு பங்கயத்த கானம், மான மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம்
வந்து போர் மலைக்க, மா மதில் வளைந்தது ஒக்குமே.

அந்தப் பெரிய மதிலின் வெளிப்புறமுள்ளஅகழியிலே தோன்றி மலர்ந்துள்ள நீள்மிகுந்த மணம் வீசும் தாமரைக்காடு பெருமையுடைய அந்தப்புரத்துப் பெண்களின் ஒளியுடைய முகங்களுக்கு முன்பு தோற்றுப் போனமையால் மீண்டும் மிக்க வலிமை கொண்டு வந்து போர் புரிவதற்கு அந்த மதிலை வளைத்துக் கொண்டிருப்பதை ஒக்கும்.

சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து பொங்கு இடங்கர் மா,-
தாழ்ந்த வங்க வாரியில், தடுப்ப ஒணா மதத்தினால்,
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே.

ஆய்ந்து கட்டப்பட்ட நாஞ்சில் முதலிய உறுப்புகளை உடைய நகரைச் சுற்றிலும் உள்ள அந்த மதிலின் சுற்றிலும் நிறைந்திருக்கும் பாறைகளை எல்லாம் பிளந்துஅமைக்கப்பட்ட அந்தப் பெரிய அகழியிலே தங்கி மேலே எழும் முதலைகள் ஆழமானதும், கப்பல்களை உடையதும் ஆகிய கடலிலே தடுக்க இயலாத மதத்தினாலே உள்ளே அழுந்திய யானை மீள முடியாமல் அமிழ்ந்து எழுவன போலக் காணப்பெறும்

ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
பேர மின்னி வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா,-
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே.

அறுக்கும் ரம்பம் போன்ற வாலைஅசைத்து பற்களாகிய பிறைக்கூட்டம் ஒளி வீசுமாறு வாயைத் திறந்து கொண்டு பிரகாசிக்கும் கண்கள் தீப்பொறி சிதற ஒன்றை மற்றொன்று முந்திச் சென்று சீறுகின்ற முதலைகள் போர்க்களத்தே வந்து ஒருவருடன் ஒருவர் சினந்து போர் புரியும் அரக்கர்களை ஒத்திருக்கும்.

ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, -மன்னர் சேனை மானுமே.

அங்குத் திரியும் அன்னங்கள் வெண்குடைக் கூட்டங்களாகவும், உலாவித் திரியும் மலை போன்ற யானைகளாகவும், தாளுடன் அசையும் தாமரையை உடைய அலைகளே குதிரைகளாகவும், மீன்களே வாளும் வேலுமாகவும் அரசரின் படைகளை ஒத்திருக்கும்.

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி, உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்,
'தளிந்த கல்-தலத்தொடு, அச் சலத்தினை, தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்' என்றல் தேவராலும் ஆவதே?

அந்த அகழியின் ஓரம் முழுவதும் வெள்ளியினாலே கட்டி முடித்து உள்ளிடமெல்லாம் பளிங்குக் கற்களைத் தள வரிசையாகப் பதித்திருப்பதாலே, பளிங்குக் கல்லால் தளவரிசை இடப்பட்ட நிலத்தோடு அந்த அகழியின் தெளிந்த தண்ணீரை தனியாக வேறு பிரிந்து இது நீர், இது பளிங்கு என்று தெளிவாகப் பிறர்க்கு உணர்த்துவோம். என்றுசொல்வதுதேவர்களாலும் இயலாததொன்றாகும்.

அகழியைச் சூழ்ந்த சோலை

அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு, வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த சோலை; எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே.

அத்தகைய நீண்ட, பரந்த அகழியை சுற்றிக் கிடந்த சக்கரவாள மலையை நெருங்கி வேறாகச் சூழ்ந்து கொண்டிருக்கும் அசையாது, மிகுந்திருக்கும் இருள் கூட்டமோ என்று சொல்லத்தக்க காடு போன்று சூழ்ந்திருக்கும் சோலையை நினைத்தால் அந்த அழகிய மதிலுக்குஉடுத்திய நீல ஆடையைப் போலத் தோன்றும்

நால் வாயில் தோற்றமும், ஓவியப் பொலிவும்

எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற் முன்னம், மால்,
ஒல்லை, உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த் வான்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன-வாயிலே.

அயோத்தி நகரத்துக் கோபுர வாயில்கள் நான்கும் நான்கு திசைகளிலும் நிற்கும் திக்கு யானைகள் என்னும்படி நின்றன. அன்றியும் திருமால் வாமனனாக வந்து விரைவாக திருவிக்கிரமனாகி விண்ணுலகத்தை அளந்த திருவடியை விட மேலும் வாயில்கள் உயர்ந்து நின்றன. வளம் நிறைந்தஉலகத்தவர் எல்லாம் நீதி தவறாது நடக்கச் செய்வதால் நல்ல நெறிகளைக் கூறும் நான்மறைகளையும் ஒத்திருந்தன.

தா இல் பொன்-தலத்தின், நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுக்குமால் -
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ, வந்து அணைந்திடாது,
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே.

தனது உயிருக் கொப்பான ஆண் புறாவானது கூவி அழைக்கவும் அன்புடன் வந்து தழுவிக் கொள்ளாமல் அந்த வாயிலின் புறத்தே சித்திரத்தில் அமைந்துள்ள பெண் புறாவின் பக்கம் இருக்க, ஆண் புறா உடன் ஊடல் கொண்ட பெண்புறா குற்றமற்ற தேவ உலகிலே நல்ல தவம் செய்தவர்கள் தங்கியுள்ள தாளை உடையதும், மலர்கள் பூத்திருப்பதுமான கற்பகச் சோலையிலே சென்று மறைந்திருக்கும்.

எழு நிலை மாடம்

கல் அடித்து அடுக்கி, வாய் பளிங்கு அரிந்து கட்டி, மீது
எல்லுடைப் பசும் பொன் வைத்து, இலங்கு பல் மணிக் குலம்
வில்லிடைக் குயிற்றி, வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிடக் கிடத்தி, வச்சிரத்த கால் பொருத்தியே,

மணிக்கற்களைச் செதுக்கி அடுக்கிச் சுவரெழுப்பி முன்புறம் பளிங்குக் கற்களை அறுத்துக் கட்டி அதன் மேலே ஒளிவீசும் பொன்தகடு வேய்ந்து, விளங்குகின்ற பலவகை மணிகளை ஒளிவீசும்படி பொன்தகட்டில் பதித்து, ஒளியை பரப்புகின்ற வெள்ளியால் ஆன விட்டத்தை அதன் மீது பொருந்துமாறு வைத்து வைரத் தூண்களை அதன்மேலே நாட்டி.

மரகதத்து இலங்கு போதிகைத் தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி, மீது பொன் குயிற்றி, மின் குலாம்
நிரை மணிக் குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளிமேல்
விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீதுஅரோ,

மரகதத்தால் செய்த விளங்கு போதிகைக் கட்டைகளின் வைரக் கற்களைக் குற்றமகற்றி அடுக்கி வைத்து மேலே பொன் தகட்டை வைத்து, மின்னல் போல விளங்கும் வரிசையான இரத்தினத் தொகுதியால் ஆகிய நீண்ட சிங்க உருவின் வரிசை மீது ஒழுங்கு பொருந்திய கைமரமாக வைக்கப்பட்ட கோமேதத்தின் மேலே

ஏழ் பொழிற்கும் ஏழ் நிலத்தலம் சமைத்ததென்ன, நூல்
ஊழுறக் குறித்து அமைத்த உம்பர் செம் பொன் வேய்ந்து, மீச்
சூழ் சுடர்ச் சிரத்து நல் மணித் தசும்பு தோன்றலால்,
வாழ் நிலக் குலக் கொழுந்தை மௌலி சூட்டியன்னவே.

ஏழு மேலுலகத்தவருக்கும் ஏழு இடங்களை ஏற்படுத்தி வைத்தது போல சிற்ப நூல் விதிப்படி ஆராய்ந்து அமைத்தனவான கோபுரங்கள் மேலே செம்பொன் தகடு வேயப்பட்டு, மேலுலகிலே சென்று ஒளிரும் சிகரத்திலே சிறந்த மாணிக்கக் கலசம் தோன்றுதலால் வாழுகின்ற பூமியாகிய இளம் பெண்ணை முடி சூட்டியது போலத் திகழும்.

மாளிகைகளின் அமைப்பும் எழிலும்
'திங்களும் கரிது' என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
வெங் கடுங் கால் பொர, மேக்கு நோக்கிய,
பொங்கு இரும் பாற்கடல்-தரங்கம் போலுமே.

சந்திரனும் கருமை நிறத்து என்று கூறுமளவுக்கு, வெண்மை நிறம் பொருந்தப் பூசிய சங்கிலிருந்து செய்த வெண்ணிறச் சுண்ணாம்புச் சாந்தால் அமைந்த வெள்ளை மாளிகைகள் கடுமையான பெருங்காற்று வீசுவதால், மேல் நோக்கி எழுந்து பொங்கும் பெரிய பாற்கடலின்அலைகளைப் போலக் காணப்படும்.

புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை,
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன,
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி அம் கிரிமிசை விரிந்த போலுமே.

நீக்குவதற்கரிய பொன் தகடுகள் மேலே வேயப்பட்டனவாகிய உடலில் புள்ளிகளை உடைய அழகிய மாடப் புறாக்கள் தங்கியிருக்கின்ற மாளிகைகள், அழகிய வெள்ளி மலையின் மீது இகழ்தற்கு அரிய சூரிய தேவனது இளையக்கதிர்கள் பரவியிருப்பது போலக் காணப்படும்.

வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
உயிர் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே.

வையிரத்தாலாகிய நல்ல தூண்களின் மேலே மரகதத்தாலாகிய உத்தரத்தை குறையின்றிப் பொருந்துமாறு போதிகையின் மீது பொருத்தி ஓவியங்கள் உயிருள்ளன போலத் தோன்றுமாறு செய்தனவும். தேவ நாட்டவரும் தமது விமானமோ என ஐயத்துடன் நோக்குவனவும் ஆகிய மாளிகைகள் அளவற்ற கோடிக் கணக்கானவையாகும்.

சந்திர காந்தத்தின் தலத்த, சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை,
செந் தனி மணித் துலாம் செறிந்த, திண் சுவர்
இந்திர நீலத்த, எண் இல் கோடியே.

சந்திர காந்த்க் கற்கள் பரப்பிய தரையை உடையனவும், சந்தன மரங்களான வரிசையாக உள்ள தூண்களின் மீது பவளத்தால் செய்த போதிகையில் சிவந்த மாணிக்கத்தாலான உத்தரம் பொருந்தி உள்ளனவும், வண்மை மிக்க சுவர்கள் இந்திர நீலமணிகளால் அமைந்தனவுமான மாளிகைகள் எண்ண முடியாத கோடியாகும்.

பாடகக் கால் அடி பதுமத்து ஒப்பன,
சேடரைத் தழீஇயின, செய்ய வாயின,
நாடகத் தொழிலின, நடுவு துய்யன,
ஆடகத் தோற்றத்த, அளவு இலாதன.

வேலைப் பாடமைந்த தூண்களின் அடிப்பக்கம் தாமரை மலர் வடிவத்தில் அமைந்தனவும், கடைக்கால் ஆழத்தால் நாக உலகை தழுவியுள்ளனவும், வேலைப் பாட்டினால் செம்மை உடையனவும், யாவரும் விரும்பிக் காணும் தொழில் திறம் உடையனவும், நடுவிடம் எல்லாம் தூய்மை உடையனவும், பொன்னைப் போன்ற தோற்றமுடையனவும் ஆகிய மாளிகைகள் அளவற்றனவாம்.

புக்கவர் கண் இமை பொருந்துறாது, ஒளி
தொக்குடன் தயங்கி, விண்ணவரின் தோன்றலால்,
திக்குற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன, உம்பர் நாட்டினும்.

பார்க்கப் வந்தவரகண் இமைகள் வியப்பின் மிகுதியால் மலர்ந்து விளங்குமே அல்லாது ஒன்றுடன் ஒன்று சேரா கண் கொட்டாமல் பார்த்தனர் என்பது கருத்து. மாளிகைகளில் பதித்த இரத்தினங்களின் பூசிய வெண்சாந்தின் ஒளி பார்ப்பவர் உடலின் மீது பாய்வதால் அவர்கள் விளகம் பெற்று தேவர்களைப் போல காட்சியளிப்பதாலும், எல்லாத் திசைகளிலும் செல்ல வல்ல தெய்வீக விமானம்போல நிலத்தில் பதிந்து கிடக்கும் அம்மாளிகைகளின் ஒளி வெள்ளம் தேவர் உலகத்தும் சென்று ஒளி வீசுவன.

அணி இழை மகளிரும், அலங்கல் வீரரும்,
தணிவன அறநெறி; தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில் பகலை வென்றன.

அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களும் மாலையணிந்த மார்பினரான வீரர்களும், அற நெறியினையே துணிவுடன் பற்றுவர். மணிகளாலும், பொன்னாலும் புனையப்பட்டுள்ள மாளிகைகள் என்றும் அறநெறிகளில் குறையாது நிறைந்திருப்பவை. வேறுகல், மண் முதலியவைகளால் அவை கட்டப்பட்டவை. ஒளியால் சூரியனையும் வென்று விளங்குபவை.

வானுற நிவந்தன் வரம்பு இல் செல்வத்த்
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய்
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன.

அந்நகரத்து மாளிகைகள் வானமளவும் உயரந்து இருப்பவை, அளவற்ற செல்வத்தை உடையன, எங்கும் பரவியுயர்ந்த புகழ் என்னும் படி விளங்கும் ஒளி உடையன, குற்ற மற்ற அரநெறியைக் கடைப்பிடித்து வாழும் அரசைனைப் போன்று வாழும் எண்ணிக்கை இல்லாத குடிமக்களது தன்மைக்குச் சான்றாக உள்ளனவாம்.

அருவியின் தாழ்ந்து, முத்து அலங்கு தாமத்த்
விரி முகிற்குலம் எனக் கொடி விராயின்
பரு மணிக் குவையன் பசும் பொன் கோடிய்
பொரு மயில் கணத்தன்-மலையும் போன்றன.

அம்மாளிகைகள் நீர் அருவி போலத் தாழ்ந்து அசையும் முத்து மாலைகளை உடையவை, பரந்த மேகக் கூட்டத்தை ஒத்த கொடிகள் பரவியுள்ளவை பெரிய மணிகளின் குவியல்களை உடையன. பசும்பொன் குவைகளை உடையன, வடிவொத்த மயில்களை உடையன.


நாட்டுப் படலம் -3தொடர்ச்சி..........

இடை இற, மகளிர்கள், எறி புனல் மறுகக்
குடைபவர், துவர் இதழ் மலர்வன, குமுதம்;
மடை பெயர் அனம் என மட நடை, அளகக்
கடைசியர் முகம் என மலர்வன, கமலம்.

தங்கள் இடை ஒடிவது போன்று பெண்கள், அலையடிக்கும் நீர் கலங்க நீராடுபவர்களின் பவளம் போன்ற சிவந்த உதடுகளை போல குமுத மலர்கள் மலர்கின்றனவாகும். நீர்மடைகளில் வாழும் அன்னங்களை போல மெல்லிய நடையையும், அழகிய கூந்தலையும் உடைய அந்நாட்டு தாமரை மலர்கள் மலர்வனவாகும்.

ஒப்பிலா மகளிர் விழி

விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.

அந்நாட்டுப் பெண்களின் வேல் போன்ற கண்கள் நான்முகனைப் பழிப்பன. அவர்களது நடை பெண் யானைகளின் நடையைப் பழிப்பன.அப்பெண்களின் இணைந்துள்ள மார்புகள் தாமரை அரும்புகளைப் பழிப்பன. அவர்களது முகங்கள் கலைகளை உடைய சந்திரனைப் பழிப்பனவாகும்.

பகலினொடு இகலுவ, படர் மணி; மடவார்
நகிலினொடு இகலுவ, நளி வளர் இளநீர்;
துகிலினொடு இகலுவ, சுதை புரை நுiர் கார்
முகிலினொடு இகலுவ, கடி மண முரசம்.

பரவிக் கிடக்கின்ற மணிகள் சூரிய ஒளியுடன் மாறு கொண்டொளிர்வன. குளிர்ந்த இளநீர்கள் பெண்களின் தனங்களோடு மாறுபட்டு விளங்குவனவாம்.

பெருகித் திகழும் பல் வளம்

காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
நீரொடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
ஊரொடு நிகர்வன, இமையவர் உலகம்.

மேகங்களுடன் அந்தநாட்டுச் சோலைகள் ஒப்பனவாகும். வயல்களிலே குவித்து வைத்துள்ள நெற்போருடன் நெருங்கியமலைகள் ஒப்பனவாகும். அணைகளில் தேங்கிய நீர்த் தேக்கத்துடன் நீர் நிறைந்த கடல் ஒப்பதாகும். செல்வம் மிக்க அந்த நாட்டு ஊர்களோடு தேவர் உலகு ஒப்பதாகும்.

நெல் மலை அல்லன-நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன-தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன-நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன-மணி படு புளினம்.

அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத இடங்களில் வரிசை வரிசையாக முத்துக் குவியல்கள் காணப்படும். அந்த முத்துக் குவியல்கள் இல்லாத இடங்களில் தோண்டப்பட்ட கடலில் எடுத்த உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும். அந்த உப்புக் குவியல்கள் இல்லாத இடங்களில் நதிகளால் கொண்டுவந்து குவிக்கப்பட்ட பொன் முதலிய பொற் குவியல்களில் பல இடங்களில் மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.

இளையவர் பந்து பயில் இடமும், ஆடவர் கலை தெரி கழகமும்

பந்தினை இளையவர் பயில் இடம்,-மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்,-
சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;
நந்தன வனம் அல, நறை விரி புறவம்;

அந்நாட்டு இளம் பெண்கள் பந்து விளையாடும் இடங்கள் சந்தனச் சோலைகளே ஆயினும் அவர்களது மேனி மணத்தால் சண்பகச் சோலைகளாகும். முருகனை ஒத்த ஆடவர்கள் வில் முதலிய கலைகளைப் பயிலுமிடங்கள் பல மலர்களை உடைய நந்தனவனங்களே ஆயினும் ‘அவர்தம்’ மேனி மணத்தால் முல்லைக் காடுகளாக விளங்கும்.

மடவாரின் பேச்சழகும், காட்சிப் பொருள்களும்

கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன் கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.

குயில்கள் கற்றுப் பேசுவன அந்நாட்டுப் பெண்களின் பாகு போன்ற இனியனவாகிய மழலைச் சொற்களையாம். மயில்கள் நடந்து பழகுவன அப்பெண்களின் நடையையாம். விளங்கும் இளம்பெண் சங்குகள் உமிழ்வது அப்பெண்களின் பற்களை ஒத்த முத்துக்களையேயாம்.

பழையர்தம் மனையன, பழ நறை; நுகரும்
உழவர்தம் மனையன, உழு தொழில்; புரியும்
மழவர்தம் மனையன, மணஒலி; இசையின்
கிழவர்தம் மனையன, கிளை பயில் வளை யாழ்.

பழமையன கள். கள் விற்பவர்களின் வீடுகளில் உள்ளது. அந்தக் கள்ளைப் பருகும் உழவர்கள் வீடுகளில உழவுத் தொழிலுக்கான கருவிகள் உள்ளன. மணம் புரியும் இளைஞர் இல்லங்களில் மணவாத்தியங்கள் ஒலிக்கின்றன. இசைவல்ல பாணர் வீடுகளில் கிணை என்ற நரம்பினையுடைய வளைந்த யாழ்கள் உள்ளன.

கோதைகள் சொரிவன, குளிர் இள நறவம்;
பாதைகள் சொரிவன, பரு மணி கனகம்;
ஊதைகள் சொரிவன, உறை உறும் அமுதம்;
காதைகள் சொரிவன, செவி நுகர் கனிகள்;

மலர் மாலைகள் இனியதேனைப் பொழிவனவாம் வணிகத்துக்குரிய கப்பல்கள் பெரிய மணிகளையும், பொன்னையும் கொண்டு வந்து குவிப்பனவாம். காற்று உயிர்காக்கும் அமுதத் துளிகளைச் சொரிவனவாம். கவிஞர்களின் காப்பியங்கள் செவிக்கினிய பாடல்களைத் தருவனவாம்.

இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே.

தோகையை உடைய ஆண் மயில்கள் விசாலமான சோலையினிடத்தே தமது பெண் மயில்களின் பெருமைக்குரிய சாயலைப் பார்த்து இளம் வயதினரான ஆண்களின் மனத்தைப் போல மலரணிந்த நீண்ட கூந்தலையும், முத்து மாலைகளைஅணிந்த தனங்களையும் உடைய அந்தப் பெண்களுடனே பின்தொடர்ந்து செல்வனவாம்.

நாட்டில் வறுமை முதலியன இல்லாமை

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

அந்த நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால் கொடைக்கு அங்கே இடமில்லை. நேருக்கு நேர் போர்புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை. பொய்ம் மொழி இல்லாமையால் மெய்ம்மை தனித்து விளங்கவில்லை. பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அறியாமை இல்லை.

எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,
தள்ளும் நீர்மையின், தலைமயங்குமே.

எள்ளும், தினையும், சோளமும், சாமையும், கொள்ளும் மிகுதியாகக் கொண்டு வரும் வண்டிகளும் சேறு நிறைந்த உப்பளத்திலிருந்து உப்பைக் கொண்டு வரும் வண்டிகளும் பார மிகுதியால் இயல்பாக ஓட்டிச் செல்ல இயலாது ஆட்கள் தள்ளும் தன்மையால் ஒன்றுடன் ஒன்று கலப்பனவாம்

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
பெயரும் பல் கதிப் பிறக்குமாறுபோல்,
அயிரும், தேனும், இன் பாகும், ஆயர் ஊர்த்
தயிரும், வேரியும், தலைமயங்குமே.

உயர் கதியான வீடு பேறடைவதற்கு உரிய ஞானமில்லாத உயிர்கள் தாம் செய்த வினைப் பயனைத் துய்க்க மாறி மாறிப் பல பிறவிகளிலும் பிறக்கும். அது போல் சர்க்கரையும், தேனும், இனிய பாகும் இடையர் ஊர்களில் கிடைக்கும் தயிரும், கள்ளும் இடம் மாறுபடும்.

விழாவும் வேள்வியும்

கூறு பாடலும், குழலின் பாடலும்,
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
'ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்' என,
சாறும் வேள்வியும் தலைமயங்குமே.

இசை வல்லுநர் பாடுகின்ற வாய்ப்பாட்டும் புல்லாங் குழலால் இசைக்கும் பாட்டும் தனித்தனியாக நின்று ஒலிக்கும். வீதிகளிலே ஒரு ஆறு, மற்றொரு ஆற்றுடன் வந்து எதிர்ப் பட்டதெனக் கூறுமாறு விழாவுக்காகவும் திருமணத்துக்காகவும் வரும் மக்கள் கூட்டம் கலக்கும்.

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும், -மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.

மூக்கில் வாய்வைத்து ஊதப்படும் வலிய சங்கு வாத்தியத்தின் ஒலியும், நேரான குறுந்தடியால் தாக்கப்படும் பறையினது ஓசையும், வாரால் பிணிக்கப்பட்ட மத்தள முழக்கமும், உழவர்கள் உழவு மாடுகளை அதட்டும் ஒலிக்குள்ளே அடங்கிவிடும்.

குழந்தைக்கு பால் ஊட்டும் தாய்

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை, பங்கயம்
வால் நிலா உறக் குவிவ மானுமே.

ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் மார்பிலே சீராக, வாயிலிருந்து ‘சொள்ளு’ ஒழுகும் குழந்தைகளுக்கு பாலமுதைப் புகட்டும் பெண்களின் அழகிய கைகள்தாமரை மலர்கள். நிலவு எழுதலால் குவிவதை ஒத்திருக்கும்.

மக்களின் ஒழுக்கத்தால் அறம் நிலைபெறுதல்

பொற்பின் நின்றன, பொலிவு; பொய் இலா
நிற்பின், நின்றன, நீதி; மாதரார்
அற்பின் நின்றன, அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன, கால மாரியே.

அந்த நாட்டு மக்களின் அகத்தழகால் நிலைத்திருந்தது புறத்தழகு. அவர்களது பொய்ம்மை இல்லாத மெய்ந்நிலையால் நீதி நிலைத்து நின்றது. அந்தநாட்டுப் பெண்களின் அன்பால் அறங்கள் நிலைபெற்றிருந்தன. அப்பெண்களது கற்பினால் பருவமழை நிலைத்திருந்தது.

சோலை மா நிலம் துருவி, யாவரே
வேலை கண்டு தாம் மீள வல்லவர்?-
சாலும் வார் புனல் சரயுவும், பல
காலின் ஓடியும் கண்டது இல்லையே!

சோலைகள் சூழ்ந்த அக் கோசலநாட்டைத் துருவிச் சென்று அதன் எல்லையைக் கண்டு மீண்டு வர வல்லவர் யாருளர்? மிகுந்த நீரை உடைய அந்நாட்டு நதியாகிய சரயு நதியும், பல கால்வாய்களால் ஓடிச் சென்றும் அந்த நாட்டின் எல்லையைக் கண்டதில்லை.

வீடு சேர, நீர் வேலை, கால் மடுத்து
வீடு சேர, நீர் வேலை, கால் மடுத்து
ஊடு பேரினும், உலைவு இலா நலம்
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம்; நகரம் கூறுவாம்.

நிலம் முழுவதும் அழியுமாறு கடல் பெருங்காற்றால் மோதுண்டு வந்தாலும் அழியாத நன்மைகள் சேர்ந்த கோசலம் என்று குற்றமற்ற நாட்டின் சிறப்பைச் சொன்னோம். இனி அந்தநாட்டின் தலைநகரான அயோத்தி மாநகரின் சிறப்பைச்சொல்லுவோம்.

நாட்டுப் படலம்-2தொடர்ச்சி................

செல்வச் செழிப்பு

பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
உருவ உண் கணை, 'ஒண் பெடை ஆம்' எனக்
கருதி, அன்பொடு காமுற்று, வைகலும்,
மருத வேலியின் வைகின, வண்டுஅரோ.

ஆண் வண்டுகள் இளம் பெண்களின் தாமரை போன்ற ஒளி கொண்ட முகத்தில் உள்ள அழகுடையனவும் மை இடப்பட்டனவுமாகிய கண்களை ஒளி கொண்ட பெண் வண்டுகள் என்று நினைத்து அன்போடு விரும்பி நாளெல்லாம் மருத நிலத்திலே தங்கின.

வேளை வென்ற முகத்தியர் வெம் முலை,
ஆளை, நின்று முனிந்திடும், அங்கு ஒர் பால்;
பாளை தந்த மதுப் பருகி, பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம்.


அந்த மருத நிலத்தின் ஒரு பக்கத்தில் மன்மதனையும் வெற்றி கொண்ட முகத்தை உடைய (உழவர் குலப்) பெண்களின் விருப்பத்தைக் கிளரச் செய்யும் மார்பகங்கள்ஆண்களை எதிர்த்து நின்று பணியச் செய்யும். பக்கங்களிலெல்லாம் பாளைகளிலிருந்து வடியும் மதுவைக் குடித்து பெரிய வாளை மீன்கள் விறைப்புடன் செருக்கும்.

ஈர நீர் படிந்து, இந் நிலத்தே சில
கார்கள் என்ன, வரும், கரு மேதிகள்;
ஊரில் நின்ற கன்று உள்ளிட் மென் முலை
தாரை கொள்ள, தழைப்பன சாலியே.


குளிர்ந்த நீரிலே மூழ்கி எழுந்து வானத்தில் அல்லாது இந்த நிலத்திலே சில மேகங்களைப் போல கருமை நிறமுள்ள எருமைகள் நடமாடும் ஊரிலே தங்கிவிட்ட கன்றை நினைப்பதாலே மென்மையான மடியிலிருந்து பால் தாரை சொரிவதால் அந்தப் பாலால் செந்நெற் பயிர்கள் தழைக்கின்றன.

முட்டு இல் அட்டில், முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம் தான்,
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
நட்ட செந் நெலின் நாறு வளர்க்குமே.


வேண்டும் பொருள்களில் குறைவு இல்லாத சமையல் அறையில் ஒலித்தல் பெருகும்படி கீழேவடிக்கப் பட்ட பெரிய உலையில் வைப்பதற்கு முன் (அரிசி) கழுவிய நீரின் மிக்க வள்ளமானது நீரோடைக் கரையில் உள்ள பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சோலை வழியே சென்று வயலில் நடப்பட்டுள்ள செந்நெல் நாற்றுகளை வளர்க்கும்.

சூட்டுடைத் துணைத் தூ நிற வாரணம்
தாள்-துணைக் குடைய, தகை சால் மணி
மேட்டு இமைப்பன் 'மின்மினி ஆம்' எனக்
கூட்டின் உய்க்கும், குரீஇயின் குழாம் அரோ.

உச்சிக் கொண்டை உடையதும் தூய நிறத்தையுடைய சேவல்கள் தம் கால்களால் குப்பைகளைக் குடைவதால் தகுதி மிக்க மாணிக்கங்கள் அந்த குப்பை மேடுகளில் ஒளிரும். குருவிக்கூட்டம் அந்த மணிகளை மின்மினி பூச்சி என்று நினைத்துதம் கூடுகளில் கொண்டு போய் வைக்கும்.

தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,

தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,

ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.


தோய்ந்துள்ள வெண்மையான தயிரைக் கடைகின்ற மத்தின் ஓசை விட்டுவிட்டு ஒலிக்கவும் தம் கைகளில் அணிந்துள்ள நுட்பமான வேலைப்பாடுடைய வெண்ணிறச் சங்கு வளையல்கள் வாய் திறந்து கத்துவது போல ஒலிக்கவும் மெலிந்த சிறிய இடை முன்புறமாக வளையவும் இடைக்குல மகளிர் அழகிய கைகள் வருந்தும் படி கடைவார்கள்.

தினைச் சிலம்புவ, தீம் சொல் இளங் கிளி;
நனைச் சிலம்புவ, நாகு இள வண்டு; பூம்
புனைச் சிலம்புவ, புள் இனம்; வள்ளியோர்
மனைச் சிலம்புவ, மங்கல வள்ளையே.


இனிய சொற்களைப் பேசும் இளங்கிளிகள் தினைப் புனங்களிலே ஒலிப்பன. இளமையான வண்டுகள் மலர் அரும்புகளில் ஒலிப்பன. பறவைகளின் கூட்டம் நீர் நிலைகளில் ஒலிப்பன. கொடையாளர் இல்லங்களில் மங்கலமான உலக்கைப் பாடல்கள் ஒலிப்பன.


பெருகிக் கிடக்கும் நால் நில வளம்

குற்ற பாகு கொழிப்பன -கோள் நெறி
கற்றிலாத கருங் கண் நுளைச்சியர்

முற்றில் ஆர முகந்து, தம் முன்றிலில்,

சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே.


ஆடவரின் இதயம் கவர்ந்து கொள்ளும் வழியைக் கற்றறியாத கருமை நிறமான கண்களை உடைய நெய்தல் நிலத்துப் பெண்கள் தறிக்கப் பட்ட பாக்கிலிருந்து கொழித்து நீக்கப்படுபவைகளை சிறிய முறங்களில் வாரி வந்து தம் வீட்டின் முற்றத்தில் சிறு வீடு கட்டி சிந்துகின்ற முத்தங்களே யாகும்.

துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்தெனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி, மால் வரைச் சூல் மழை மின்னுமே.

செம்மறி இனத்தின் மென்மையான பெண் ஆடு பெற்ற அச்சம் காரணமாக அசைதல் இல்லாதனவும் வரிகள் அமைந்த இரு கொம்புகளை உடையனவும் வலிய தலைகளையும் உடைய கடாக்கள் மேகத்தில் உள்ள இடிஇடித்ததைப் போல ஒன்றை ஒன்று முட்டுதலால் எழும் ஒல்லென்ற ஒலி கேட்டு அஞ்சிபெரிய மலையில் படிந்துள்ளதும் சூல் கொண்டதுமான மேகம்மின்னலிடும்.

கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
வன் தொடர்ப் படுக்கும், வன வாரி சூழ்
குன்றுடைக் குல மள்ளர் குழூஉக் குரல்,
இன் துணைக் களி அன்னம் இரிக்குமே.


கன்றுடைய பெண் யானைகளை நீக்கிவிட்டு ஆண் யானைகளை வலிய சங்கிலிகளால் கட்டுகின்ற காட்டிலே யானைகளை அகப்படுத்தும் இடங்களைச் சூழ்ந்த மலையை வாழும் இடமாகக் கொண்ட நல்ல வீரர்களின் கூட்டம் எழுப்பும் ஆரவாரம் இனிய துணையாகிய பெண் அன்னங்களுடன் மகிழ்ந்திருக்கும் ஆண் அன்னங்களை(அச்சத்தால் நிலைகெட்டு) ஓடச் செய்யும்.

வள்ளி கொள்பவர் கொள்வன, மா மணி;
துள்ளி கொள்வன, தூங்கிய மாங்கனி;
புள்ளி கொள்வன, பொன் விரி புன்னைகள்;
பள்ளி கொள்வன, பங்கயத்து அன்னமே.

வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுப்பவர்கள் பெறுவது உயர்ந்த மணிகளாகும் கிளைகளில் தொங்கும் மாம்பழங்கள் தேன் துளிகளைக் கொண்டிருக்கும். பொன்நிற மகரந்தங்களைப் பரப்பும் புன்னை மலர்கள் புள்ளிகளைப் பெற்றிருக்கும். அன்னப் பறவைகள் தாமரை மலர்களிலே தூங்கியிருக்கும்.

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும்-குரவை, கடைசியர்,
புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
சென்று இசைக்கும் - நுளைச்சியர் செவ்வழி.

மருத நில மாதர்களின் குரவைக் கூத்துப் பாடல் கொன்றையாலும் மூங்கிலாலும் ஆகிய குழல்களை உடைய இடையர்களின் வீட்டு முற்றங்களில் கன்றுகளை உறங்கச் செய்யும். நெய்தல் நில மகளிர் பாடும் செவ்வழிப் பண் கொண்ட பாடல் சிற்றிடம் கொண்ட புனங்களிலும் காவல் உடைய சோலைகளிலும் பரந்து சென்று ஒலிக்கும்.

சேம்பு கால் பொரச் செங்கழுநீர்க் குளத்
தூம்பு கால, சுரி வளை மேய்வன-
காம்பு கால் பொர, கண் அகல் மால் வரை,
பாம்பு நான்றெனப் பாய் பசுந் தேறலே.


மூங்கில் புதரில் காற்று மோதுதலால் தேன்கூடு சிதைய விசாலமான பெரிய மலைகளிலிருந்து பாம்புகள் தொங்குவது பொன்ற தோற்றத்துடன் பாய்கின்ற புதிய தேன் ஒழுக்கினையே சேப்பங் கொடியின் மடல்கள் ஒடியும்படி செங்கழு நீர்ப் பூக்கள் கொண்ட குளத்தின் மதகுகளிலிருந்து பரவும் வாய்க்கால்களில் வளைந்த சங்குகள் மேய்கின்றன.

ஈகையும் விருந்தும்


பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,

விருந்தும், அன்றி, விளைவன யாவையே?

பெரிய அகலமான கண்களை உடைய பிறை வடிவமான நெற்றியை உடைய பெண்களுக்கெல்லாம் நிலையாகப் பொருந்தியபொருட் செல்வமும் நூலறிவும் நிறைந்திருப்பதால் வறுமையால் வருந்தி, உதவி நாடி வந்தோர்க்கு வழங்குதலும் நாள்தோறும் விருந்து ஓம்புதலும் அல்லாது பெற்ற செல்வத்தாலும் சேர்த்த கல்வி அறிவாலும் விளைவன வேறு யாவை? (அவையே பயனாக விளைகின்றன என்பதுவினாவின் விடை)

ஊட்டிடத்தும் குடிகளிடத்தும் உள்ள பொருள்கள்


பிறை முகத் தலை, பெட்பின், இரும்பு போழ்,
குறை நறைக் கறிக் குப்பை, பருப்பொடு,
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை,
உறைவ-கொட்பின ஊட்டிடம் தோறெலாம்.


ஆரவாரம் மிக்கனவும் வந்தவருக்குஉணவு வழங்குவனவுமாகிய அறச்சாலைகளிலெல்லாம் விருப்பத்துடன் பிறை வடிவான தலையை உடைய அரிவாளால் பிளக்கப்பட்டு திருத்தப்பட்ட நறுமணமுடைய காய்கறிகளின் குவியலும், பருப்பு வகைகளும் நிறைந்த வெண்முத்துப் போன்ற அரிசிக் குவியல்களும் கிடக்கின்றன.

கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.

கோசல நாட்டு மக்களுக் கெல்லாம் செல்வத்தைக் கப்பல்கள் கொடுக்கும். நன்செயும் புன்செயும் ஆகிய நிலங்கள் அளவற்ற நிறை வளத்தைக் கொடுக்கும். சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும். பெறுவதற்கு அரியதாகிய குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்.

நல்லவற்றின் நலனும், தீயன செய்யாமையும்


கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்;
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்,
ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே.


கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும் இல்லாமையால் கூற்றுவனது கொடுமை அந்நாட்டில் இல்லை அந்நாட்டு மக்களின் மனச் செம்மையால் சினம் அந்நாட்டில் இல்லை நல்ல அறச்செயல் செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால் மேன்மையைத் தவிர எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.

நெறி கடந்து பரந்தன, நீத்தமே;
குறி அழிந்தன, குங்குமத் தோள்களே;
சிறிய, மங்கையர் தேயும் மருங்குலே;
வெறியவும், அவர் மென் மலர்க் கூந்தலே.

செல்லும் வழி கடந்து பரந்து செல்வது அந்த நாட்டில் வெள்ளமேயாம். அடையாளம் அழிந்தவை அந்த நாட்டு மகளின்குங்குமம் அணிந்த தோள்களேயாம். அங்குச் சிறியவை பெண்களின் மெல்லிய இடைகளேயாம் மணம்உடையவை அந்த நாட்டுப் பெண்களின் மலர்சூடிய கூந்தலேயாம்.

பல் வகைப் புகைகள்

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை, நகல் இன் ஆலை நறும் புகை, நான் மறை புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய், முகிலின் விம்மி, முயங்கின எங்கணும்.

அகில் கட்டைகளை இடுவதாலுண்டாகும் புகையும், சமையல் அறைகளில் உண்டாகும் புகையும், கரும்பாலைகளில் தோன்றும் புகையும், நான்கு மறைகளைப் புகன்று அந்தணர்கள் புரியும் வேள்வித் தீயில் தோன்றும் அழகிய புகையோடு கலந்து மேகங்களைப் போல மிகுந்து எங்கும் பரந்திருந்தன.

மகளிரின் அங்கம் போன்ற இயற்கை எழில்

இயல் புடைபெயர்வன, மயில்; மணி இழையின்
வெயில் புடைபெயர்வன் மிளிர் முலை; குழலின்
புயல் புடைபெயர்வன, பொழில்; அவர் விழியின்
கயல் புடைபெயர்வன, கடி கமழ் கழனி.

மயில்கள் அந்நாட்டுப் பெண்களின் சாயலைப் பெற்று நடமாடுகின்றன. அப்பெண்களின் தனங்களில் அணிமணிகள் பதித்துச் செய்யப்பட்ட அணிகலங்களைப் போல வெயில் எங்கும் ஒளி வீசின. அப்பெண்களது கூந்தலைப் போல மேகங்கள் சோலைகளில் சஞ்சரித்தன. அவர்களது கண்களைப் போல கயல் மீன்கள் மலர் மணம் கமழும் வயல்களிலே புரள்வனவாமே.

இடை இற, மகளிர்கள், எறி புனல் மறுகக்
குடைபவர், துவர் இதழ் மலர்வன, குமுதம்;
மடை பெயர் அனம் என மட நடை, அளகக்
கடைசியர் முகம் என மலர்வன, கமலம்.

இடை ஒடிவது போலத் தோன்றும் பெண்கள் அலையடிக்கும் நீர் கலங்க நீராடுபவர்களின் பவளம் போன்ற சிவந்த உதடுகளைப் போல குமுத மலர்கள் மலர்வனவாகும். நீர்மடைகளில் வாழும் அன்னங்களைப் போல மெல்லிய நடையையும், அழகிய கூந்தலையும்உடைய அந்நாட்டு உழத்தியரின் முகம் போல தாமரை மலர்கள் மலர்வனவாகும்.






























நாட்டுப் படலம் -1தொடர்ச்சி.............

புதுப் புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும், கருங் கடல் தரங்கம்; என்றால்,
மதுப்பொதி மழலைச் செவ்வாய், வாள் கடைக் கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும், மின்னார் மிகுதியை விளம்பலாமே?

கரிய நிறத்தை உடைய கடலின் அலைகள் ஆற்றில் புது வெள்ளத்தில் நீராடும் மகளிரின் மலர்களும், கஸ்தூரிக் கலவையும் கமழ்கின்ற கூந்தலின் மிகுந்த மணமே கமழும் (என்றால்) ஆண்கள் விருப்பம் கொள்ளவாள் போன்ற கடைக் கண்களால் (காதல் எழப்) பார்க்கின்ற தேன் போன்ற குதலை மொழி பேசும் சிவந்த வாயைக் கொண்ட அந்தப் பெண்களின் எண்ணிக்கை மிகுதியைக் கூற இயலுமோ?(பெண்கள் எண்ணிக்கை மிகுதியாதலின் கூற இயலாது)

வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்,
குண்டலக் கோல மைந்தர் குடைந்த, நீர்க் கொள்ளை, சாற்றின்,
தண்டலைப் பரப்பும், சாலி வேலியும், தழீஇய வைப்பும்,
வண்டல் இட்டு ஓட, மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ.

பச்சைக் கற்பூரம் கலந்த சாந்தும், குங்குமப் பூ முதலியன கலந்த சந்தனமும் ,பூசிய குண்டலம் அணிந்த அழகிய ஆண்கள் முழுகி நீராடிய அந்த வெள்ளப் பெருக்கை சொல்லுவதாயின் சோலைப் பரப்புகளிலும் நெற்பயிர் விளையும் வயல்களிலும் அவற்றைச் சார்ந்துள்ள நிலப் பகுதிகளிலும் வண்டல் படியும்படி (நீர்) ஓடும் ஏனைய மண் பகுதிகளிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும்.

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு, துயில, பச்சைத் தேரை தாலாட்டும்-பண்ணை.


வயல்களில் மீன் போன்ற கண்களை உடைய பெண்களைப் போல திரிகின்ற சிவந்த கால்களை உடைய அன்னங்கள், பெருமையுடைய தாமரை மலர்களாகிய படுக்கையில் கிடத்திய இளங்குஞ்சுகள், காலில் ஒட்டிய சேறுடைய எருமைகள் (ஊரகத்து உள்ள) தம் கன்றுகளை நினைத்துக் கனைத்திருப்பதால் தானே சொரியும் பாலை அருந்தி உறங்க பச்சை நிறத் தேரைகள் தம் ஒலியால் தாலாட்டுப் பாடும்.

குயில்இனம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகுசெய்ய,
பயில் சிறை அரச அன்னம் பல் மலர்ப் பள்ளிநின்றும்
துயில் எழ, தும்பி காலைச் செவ்வழி முரல்வ-சோலை.


சோலைகளில் உள்ள சேவலும், பெடையுமான குயில்கள் மணம் புணர மரக் கிளைகளுக்கிடையே ஆடுகின்ற மயில்கள் வேல் போன்ற கண்களையுடைய பெண்கள் ஆடுகின்ற நடன ஆடரங்கத்தை விட அழகை உண்டாக்க, நெருக்கமான சிறகுகளை உடைய அன்னப் பறவைகள பல தாமரை மலர்களாகிய படுக்கையி லிருந்தும் தூக்கம் கலைந்து எழுவதற்காக வண்டு காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணைப் பாடும்.


மக்கள் பொழுது போக்கும் வகை



பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்;


எல்லா வகைப் பொருத்தங்களும் உள்ள பெண்களுடன் மணவினையில் பொருந்தியிருப்பவர்களும், பருந்தோடு அதன் நிழலும் தொடர்ந்து செல்வது போல இயல் இசைத்த இசைப் பாடலை அனுபவிப்பவர்களும், அமுதத்தை விட இனிமை மிக்க கேட்டறியும் நூலறிவினைச் செவியிற் பொருந்த உண்டு அனுபவிப்பவர்களும், விருந்தினரின் முகத்தைப் பார்த்து, உண்ணும் சோறு வழங்கும் விழாவின் சிறப்பைவிரும்புவாரும்.

கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,
உறுப்புறு படையின் தாக்கி, உறு பகை இன்றிச் சீறி,
வெறுப்பு இல, களிப்பின் வெம் போர் மதுகைய, வீர ஆக்கை
மறுப்பட, ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்;

சினம் மிகுந்த மனமும், கண்களைவிடச் சிவந்த கொண்டையையும் புலப்படுத்தி காலில் கட்டிய கத்தியினால் எதிர்க்கும் சேவலைத் தாக்கி தமக்குள் முன்பகை இல்லாமலே சினம் காட்டிபோர் செய்வதில் வெறுப்பு இல்லாதவனாய் வீர வாழ்க்கைக்கு மாசு உண்டாகுமாயின் உயிரையும் பெரிதாகப் போற்றாத சேவல்களை போரிடும்படிச் செய்பவர்களும்.....

எருமை நாகு ஈன்ற செங் கண் ஏற்றையோடு ஏற்றை, 'சீற்றத்து
உரும் இவை' என்னத் தாக்கி, ஊழுற நெருக்கி, ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன் அதனை நோக்கி,
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப, மஞ்சுற ஆர்க்கின்றாரும்;


பெண் எருமைகள் பெற்ற சிவந்த கண்களை உடைய கடாவோடு மற்றொரு கடா‘கோபம் கொண்ட இடிகள் இவை’ என்று சொல்லும் படியாக மோதி முறையாக நெருங்கி எங்கணும் ஒரே பொருளாய் விரிந்திருக்கின்ற இருட்பிழம்பு இரண்டுப குதிகளாகப் பிரிந்து நின்று ஒன்றோடு ஒன்று கோபம் கொண்டு தாக்கின. அந்தப் போரைக் கண்டு தலை முடியில் அணிந்த மலர்களில் இருந்த வண்டுகளின் கூட்டம் (கலைந்து) ஆரவாரம் செய்யும்படியாக தமது குரல் மேக மண்டலம் வரை செல்லும்படி ஆரவாரம் செய்பவர்களும்....

முள் அரை முளரி வெள்ளை முளை இற, முத்தும் பொன்னும்
தள்ளுற, மணிகள் சிந்த, சலஞ்சலம் புலம்ப, சாலில்
துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை கரிப்ப, தூம்பின் -
உள் வரால் ஒளிப்ப, -மள்ளர் உழு பகடு உரப்புவாரும்;


முள் கொண்ட தண்டினை யுடைய தாமரையின் வெண்மையான முனை ஒடியவும் நிலத்திலிருந்து முத்தும், பொன்னும் ஒதுக்கித் தள்ளப்படவும், பல வகை மணிகள் சிந்தவும் சலஞ்சலம் என்ற சங்கு புலம்பவும் கொழு முனையில் புரளும் மண் திரளில் மீன்கள் துள்ளித் துடிக்கவும், ஆமைகள் தலையையும் கால்களையும் ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்ளவும், மதகுகளினுள் வரால்மீன்கள் ஒளிந்து கொள்ளவும், உழுகின்ற எருதுகளை ஓட்டி அதட்டுகின்ற உழவர்களும் (அந்நாட்டில் உள்ளனர்).

கடல் வாணிகம்

முறை அறிந்து, அவாவை நீக்கி, முனிவுழி முனிந்து, வெ·கும்
இறை அறிந்து, உயிர்க்கு நல்கும், இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில், பொன்னின்
நிறை பரம் சொரிந்து, வங்கம், நெடு முதுகு ஆற்றும், நெய்தல்.


ஆளும் முறையை அறிந்துஆசையை அகற்றி கோபிக்க வேண்டிய போதில் கோபித்து தான் விரும்பும் வரியின் அளவைஅறிந்து தன் குடிகளுக்கு இரங்கும் புகழ் அமைந்த மன்னன் பாதுகாப்பதால் (பாவமாகிய) சுமை நீங்கப் பெற்று (அமைதியாகிய) இளைப்பாறுகின்ற தெய்வத் தன்மை வாய்ந்த நிலம் போலே பொன்னாகிய நிறைந்த பாரத்தை நெய்தல் நிலத்திலே இறக்கிவிட்டு கப்பல்கள் நீண்ட முதுகுகளை ஆற்றிக் கொள்ளும்.

வளம் பல பெருக்கி, மள்ளர் விருந்தோடு மகிழ்ந்திருத்தல்

எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகொளும் போத்தின் கொல்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
வறியவர்க்கு உதவி, மிக்க, விருந்து உண மனையின் உய்ப்பார்,
நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார்.


வாளால் அரியப்பட்ட நெல்லரிகளாகிய சுமைகளை சுமந்து சென்று வானம் அளாவிடக் குவித்த போர்களில் அடையாளம் இட்டுப் பாதுகாத்துக் கொள்வார்கள் கதிரடித்து உதிர்த்த நெல்லை குவித்து வைப்பார்கள் (களத்துமேட்டுக்கு வரும்)ஏழைகளுக்கு நெல்லை உதவி மீதியான போகும்வழிகள் புதையும்படியாக
வணடிகளில் நிறைத்து நிலமே நெளியும் படியாகச் சுமை ஏற்றி வண்டிகளைச் செலுத்துவார்கள்.

கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,-
மதுவளம் மலரில் கொள்ளும் வண்டு என-மள்ளர், கொள்வார்.

கதிர்களில் விளையும் வயல்களில் உள்ள நெல் முதலியவைகளையும், மணம் வீசுநீரில் உள்ள தாமரை மலர் முதலியவைகளையும், முதிர்ந்த பயன் தரத்தக்க மரங்களில் உள்ள காய், கனி முதலியவைகளையும், முல்லைநிலத்து விளையும் பருப்பு முதலியவைகளையும், (நிலத்தில்) பதிக்கப்பட்டுள்ள கொடிகளில் விளையும் மலர், கனி முதலியவைகளையும், நிலத்தில் உண்டான குழிகளில் விளையும் கிழங்கு முதலியவைகளையும், தேனாகிய வளத்தைப் பலவகைப்பட்ட மலர்களிலிருந்து சேகரிக்கும் வண்டுகள் போல உழவர்கள் பலவகை விளைச்சல் வளத்தைக் கொள்வார்கள்.

முந்து முக் கனியின், நானா முதிரையின், முழுத்த நெய்யின்,
செந் தயிர்க் கண்டம், கண்டம், இடை இடை செறிந்த சோற்றின்,
தம்தம் இல் இருந்து, தாமும், விருந்தோடும், தமரினோடும்,
அந்தணர் அமுத உண்டி அயிலுறும் அமலைத்து எங்கும்.

அந்த நாட்டில் எல்லா இடங்களிலும் கனிகளில் முதன்மையாக எண்ணப்படுகின்ற வாழை, பலா, மா ஆகிய முப்பழங்களுடனும் பல் வகைப் பட்ட பருப்புகளுடனும் பரிமாறப்பட்ட பொருள்கள் முழுகும் படி வார்த்த நெய்யுடனும் செந்நிறமுள்ள தயிர்க் கட்டிகளுடனும் கண்ட சருக்கரை இடையிடையே செறிந்துள்ள சோற்றுடனும் தங்கள் தங்கள் வீட்டில் இருந்து விருந்தினருடனும் உறவினருடனும் கலந்து தாங்களும் தேவர்களுக்கு உரிய அமுதம் போன்ற உணவினை உண்ணுகின்ற ஆரவாரம் உடையது (அந்தக் கோசலம்)