பால காண்டத்தின் இரண்டாவது படலம் நாட்டுப் படலமாகும். நாட்டுப் படலமானது கோசல நாட்டின் வளம் மற்றும் சிறப்பினை கூறும் படலமாகும். கோசல நாட்டு மக்களின் பொழுது போக்கு, உழவர்களின் உயர்ந்த வாழ்க்கை, செல்வ பெருக்கு, பெண்டிர் பெருமை, நல்லவற்றை கொண்டு தீயவற்றை நீக்கி வாழும் மக்களின் பண்பு. கலை வளர்ச்சி ஒழுக்க நெறி பேணும் ஆடவர் மற்றும் பெண்டிரால் அங்கு அறம் நிலை பெற்றிருத்தல் போன்ற பல செய்திகள் இப்படலத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. நாட்டுப் படலத்தில் அறுபத்து ஒன்று பாடல்கள் உள்ளன. அதனை மூன்று பகுதிகளாக பிரித்து பதிவு செய்துள்ளேன்.

கோசல நாட்டு வளம்

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசலுற்றான் என்ன, யான் மொழியலுற்றேன்.


எடுத்து விடுவதற்கு அரிய நான்கு அடிகள் கொண்ட சுலோகங்களால் இராமாயணம் இயற்றிய வால்மீகி முனிவர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற முனிவன் தேவர்களும் தம் செவி வாயாகப் பருகும்படி இனிய அமுத கவி பெய்தான். ஆதி காவியத்தில் அம்முனிவன் புகழ்ந்துரைத்த நாட்டை அன்பு என்னும் மதுவைப் பருகி ஊமையே பேசத் தொடங்கிவிட்டான் என்றாற் போல நான் பீச்சலாநீன்.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரும்பு எலாம் செந் தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம்.

வரப்புகளிலெல்லம் முத்துக்கள், தண்ணீர் பாயும் மடைகளிலெல்லாம் சங்குகள் ,மிகுந்த நீர்ப்பெருக்குடைய செய்கரைகளிலெல்லாம் செம்பொன், எருமைகள் படிகின்ற பள்ளங்களிலெல்லாம் செங்கழுநீர் மலர்கள், பரம் படித்த இடங்களிலெல்லாம் பவளங்கள், நெற்பயிர்நிறைந்த பரப்புகளிலெல்லாம் அன்னங்கள், அவற்றின் பக்கங்களில் இருக்கின்ற சாகுபடிசெய்யப்படாத நிலங்களிலெல்லாம் செந்தேன்,அழகிய சோலைகளிலெல்லாம் மதுவுண்டு மகிழும் வண்டுகளின் கூட்டம்.

மருத நில வளம்
ஆறு பாய் அரவம், மள்ளர் ஆலை பாய் அமலை, ஆலைச்
சாறு பாய் ஓதை, வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறு பாய் தமரம், நீரில் எருமை பாய் துழனி, இன்ன

மாறு மாறு ஆகி, தம்மில் மயங்கும்-மா மருத வேலி.

பெருமைக்குரிய (கோசல நாட்டின்) மருத நிலத்து எல்லைக்குள் ஆற்று நீர்பாய்வதால் எழும் ஓசையும், உழவர்கள் ஆலையாடுதலால் உண்டாகும் ஓசையும் அக்கரும்பாலைகளில் கருப்பஞ்சாறு பாய்வதால் எழுகின்ற ஓசையும் நீர்க் கரைகளில் உள்ளசங்குகளிடமிருந்து பெருகும் ஓசையும், எருதுகள் தம்முள் மோதிப் பாயும்போது எழும் ஓசையும் நீர்நிலைகளில் எருமைகள் பாய்வதால் உண்டாகும் ஓசையும்,ஆகிய இத்தகைய ஓசைகள் வெவ்வேறாகஅமைந்தனவாகி தமக்குள் ஒன்றோடொன்று கலந்து ஒலிக்கும்.


தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ


சோலைகளிலே மயில்கள் ஆடவும், தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்கவும், மேகங்கள் மத்தளம் போலஒலிக்கவும் ,குவளைக் கொடிகளில்மலர்கள் கண் போல் விழித்துப் பார்க்கவும், நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலை போலக் காட்டவும், தேனை ஒத்த மகர யாழ் இசை போல வண்டுகள் இனிது பாட வண்டுகள் இனிமையாகப் பாடவும், மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்தது.

தாமரைப் படுவ, வண்டும் தகை வரும் திருவும்; தண் தார்க்
காமுகர்ப் படுவ, மாதர் கண்களும் காமன் அம்பும்;
மா முகில் படுவ, வாரிப் பவளமும் வயங்கு முத்தும்;
நாமுதல் படுவ, மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ.


வண்டுகளும் அழகு வளர்கின்றதிருமகளும் தாமரை மலர்களில் தங்கியிருப்பனவாம், விலைமாதர் கண்களும் மன்மதன் அம்புகளும் குளிர்ந்த மாலை அணிந்த காமுகர்களை தாக்குவனவாம், கடலில் விளையும் பவளமும் ஒளியால் விளங்குகின்ற முத்துகளும் கார்மேகங்களில் தங்குவனவாம் உண்மையும் புகழ் வாய்ந்த நூல்கள்கூறும் பொருளும் கோசல நாட்டு மக்களின் நாவிலே தங்குவனவாம்.

நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி;
தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யாள்;
தூரிடை உறங்கும் ஆமை; துறையிடை உறங்கும் இப்பி;
போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை.


சங்குகள் தண்ணீரில் உறங்கிக்கொண்டிருக்கும். எருமைகள் மரநிழலில் உறங்கிக் கொண்டிருக்கும். வண்டுகள் மலர் மாலைகளிலே உறங்கிக்கொண்டிருக்கும் திருமகள் (பெயர்தலின்றித்) தாமரை மலரிலே உறங்குவாள் ஆமைகள் சேற்றிலே உறங்கும். முத்துச் சிப்பிகள் நீர்த்துறைகளிலே உறங்கும். அன்னங்கள் நெற்போரிலே உறங்கிக் கிடக்கும். மயில்கள் சோலைகளிலே உறங்கிக் கொண்டிருக்கும்.

படை உழ எழுந்த பொன்னும், பணிலங்கள் உயிர்த்த முத்தும்,
இடறிய பரம்பில் காந்தும் இன மணித் தொகையும், நெல்லின்
மிடை பசுங் கதிரும், மீனும், மென் தழைக் கரும்பும், வண்டும்,
கடைசியர் முகமும், போதும், -கண்மலர்ந்து ஒளிரும் மாதோ.


கலப்பைகள் உழுததால் மேலேஎழுந்த பொன்னும், சங்குகள் ஈன்ற முத்துகளும், பரம்படித்த நிலங்களில் ஒளி வீசுகின்ற பல்வேறு இரத்தினத் தொகையும் நெல்லின் செறிந்த பசுங்கதிர்களும், மீன்களும், மென்மையான தாள்களையுடைய கரும்பும், வண்டுகளும், உழத்தியரின் முகங்களும், தாமரை மலரும், கண் மலர்ந்து ஒளி வீசும்.

தௌ; விளிச் சீறியாழ்ப் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி,
வள் விசிக் கருவி பம்ப, வயின்வயின் வழங்கு பாடல்,
வெள்ளி வெண் மாடத்து உம்பர், வெயில் விரி பசும் பொன் பள்ளி,
எள்ள அருங் கருங் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே.


தெளிந்த இசை கொண்ட சிறிய யாழையுடைய பாணர்கள் இனிமையாய் வடிக்கப்பட்ட மதுவினைக் குடித்து வாரால் இழுத்துக் கட்டப்பட்ட முழவுகள் ஒலிக்க ஆங்காங்கே பாடப்படுகின்ற பாடல்கள் வெள்ளை வெளேரென ஒளிவீசும் மாடங்களின்மேல் ஒளி உமிழும் பசும் பொன்னாலான கட்டிலிலே (உறங்குகின்ற) பழிப்பதற்கு அரிய கருமை நிறக் கண்களையுடைய மயில் போலும் மகளிரை இனிய உறக்கத்திலிருந்து எழுப்பும்.

ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரி தலைப் பாளைத் தேனும்,
சோலை வீழ் கனியின் தேனும், தொடை இழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும்,-வரம்பு இகந்து ஓடி, வங்க
வேலைவாய் மடுப்ப-உண்டு, மீன் எலாம் களிக்கும் மாதோ.


கரும்பாலைகளிலிருந்தும் பெருகும் தேன் போன்ற கருப்பஞ்சாரும், தேனும் கள் இறக்குவோர் அரிந்த பாளையிலிருந்து வடியும் கள்ளும், சோலைகளில் பழுத்த பழங்களின் சாறும், தொடுக்கப்பட்ட இடத்தினின்று வழிகின்ற தேனடைத் தேனும் மலர் மாலைகளிலிருந்து வடியும் தேனும், எல்லை மீறிப் பெருகி ஓடிகப்பல்கள் இயங்கும் கடலிலே போய்ச் சேர (கடலிலே வந்து கலக்கின்ற அவற்றை) மீன்களெல்லாம் பருகிக் களிக்கும்.

பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண், கை, கால், முகம், வாய், ஒக்கும் களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மள்ளர், களைகிலாது உலாவி நிற்பர்;-
பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்?


பண்கள் இசைந்தது போன்ற இனிய சொற்களை வாயால் பேசுகின்ற உழத்தியரின் அகன்று நீண்ட கண்கள், கைகள், கால்கள், முகம், வாய் ஆலியவற்றை ஒத்திருக்கும் (குவளை, தாமரை,ஆம்பல் என்னும் மலர்களாகிய) களைகளைத் தவிரவேறு களைகள் இல்லாமையால் கள் ஒழுகும் கடைவாயை உடைய உழவர்கள் களைகளைக் களையமாட்டாமல் இங்குமங்குமாக உலாவிக் கொண்டிருப்பார்கள் பெண்களிடம் வைத்த இச்சையைக் கீழோர் பெற்றால் பிழைப்பார்களா (பிழைக்க மாட்டார் என்றபடி)





















2 கருத்துகள்:

அரிய முயற்சி. வாழ்த்துக்கள். கண்டிப்பாகத் தொடர வேண்டய ஒன்று.

ஸ்ரீ....

நன்றி!

கருத்துரையிடுக