நாட்டுப் படலம் -1தொடர்ச்சி.............

புதுப் புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும், கருங் கடல் தரங்கம்; என்றால்,
மதுப்பொதி மழலைச் செவ்வாய், வாள் கடைக் கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும், மின்னார் மிகுதியை விளம்பலாமே?

கரிய நிறத்தை உடைய கடலின் அலைகள் ஆற்றில் புது வெள்ளத்தில் நீராடும் மகளிரின் மலர்களும், கஸ்தூரிக் கலவையும் கமழ்கின்ற கூந்தலின் மிகுந்த மணமே கமழும் (என்றால்) ஆண்கள் விருப்பம் கொள்ளவாள் போன்ற கடைக் கண்களால் (காதல் எழப்) பார்க்கின்ற தேன் போன்ற குதலை மொழி பேசும் சிவந்த வாயைக் கொண்ட அந்தப் பெண்களின் எண்ணிக்கை மிகுதியைக் கூற இயலுமோ?(பெண்கள் எண்ணிக்கை மிகுதியாதலின் கூற இயலாது)

வெண் தளக் கலவைச் சேறும், குங்கும விரை மென் சாந்தும்,
குண்டலக் கோல மைந்தர் குடைந்த, நீர்க் கொள்ளை, சாற்றின்,
தண்டலைப் பரப்பும், சாலி வேலியும், தழீஇய வைப்பும்,
வண்டல் இட்டு ஓட, மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ.

பச்சைக் கற்பூரம் கலந்த சாந்தும், குங்குமப் பூ முதலியன கலந்த சந்தனமும் ,பூசிய குண்டலம் அணிந்த அழகிய ஆண்கள் முழுகி நீராடிய அந்த வெள்ளப் பெருக்கை சொல்லுவதாயின் சோலைப் பரப்புகளிலும் நெற்பயிர் விளையும் வயல்களிலும் அவற்றைச் சார்ந்துள்ள நிலப் பகுதிகளிலும் வண்டல் படியும்படி (நீர்) ஓடும் ஏனைய மண் பகுதிகளிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும்.

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்,
மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை,
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு, துயில, பச்சைத் தேரை தாலாட்டும்-பண்ணை.


வயல்களில் மீன் போன்ற கண்களை உடைய பெண்களைப் போல திரிகின்ற சிவந்த கால்களை உடைய அன்னங்கள், பெருமையுடைய தாமரை மலர்களாகிய படுக்கையில் கிடத்திய இளங்குஞ்சுகள், காலில் ஒட்டிய சேறுடைய எருமைகள் (ஊரகத்து உள்ள) தம் கன்றுகளை நினைத்துக் கனைத்திருப்பதால் தானே சொரியும் பாலை அருந்தி உறங்க பச்சை நிறத் தேரைகள் தம் ஒலியால் தாலாட்டுப் பாடும்.

குயில்இனம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகுசெய்ய,
பயில் சிறை அரச அன்னம் பல் மலர்ப் பள்ளிநின்றும்
துயில் எழ, தும்பி காலைச் செவ்வழி முரல்வ-சோலை.


சோலைகளில் உள்ள சேவலும், பெடையுமான குயில்கள் மணம் புணர மரக் கிளைகளுக்கிடையே ஆடுகின்ற மயில்கள் வேல் போன்ற கண்களையுடைய பெண்கள் ஆடுகின்ற நடன ஆடரங்கத்தை விட அழகை உண்டாக்க, நெருக்கமான சிறகுகளை உடைய அன்னப் பறவைகள பல தாமரை மலர்களாகிய படுக்கையி லிருந்தும் தூக்கம் கலைந்து எழுவதற்காக வண்டு காலை நேரத்தில் செவ்வழிப் பண்ணைப் பாடும்.


மக்கள் பொழுது போக்கும் வகை



பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்;


எல்லா வகைப் பொருத்தங்களும் உள்ள பெண்களுடன் மணவினையில் பொருந்தியிருப்பவர்களும், பருந்தோடு அதன் நிழலும் தொடர்ந்து செல்வது போல இயல் இசைத்த இசைப் பாடலை அனுபவிப்பவர்களும், அமுதத்தை விட இனிமை மிக்க கேட்டறியும் நூலறிவினைச் செவியிற் பொருந்த உண்டு அனுபவிப்பவர்களும், விருந்தினரின் முகத்தைப் பார்த்து, உண்ணும் சோறு வழங்கும் விழாவின் சிறப்பைவிரும்புவாரும்.

கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி,
உறுப்புறு படையின் தாக்கி, உறு பகை இன்றிச் சீறி,
வெறுப்பு இல, களிப்பின் வெம் போர் மதுகைய, வீர ஆக்கை
மறுப்பட, ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்;

சினம் மிகுந்த மனமும், கண்களைவிடச் சிவந்த கொண்டையையும் புலப்படுத்தி காலில் கட்டிய கத்தியினால் எதிர்க்கும் சேவலைத் தாக்கி தமக்குள் முன்பகை இல்லாமலே சினம் காட்டிபோர் செய்வதில் வெறுப்பு இல்லாதவனாய் வீர வாழ்க்கைக்கு மாசு உண்டாகுமாயின் உயிரையும் பெரிதாகப் போற்றாத சேவல்களை போரிடும்படிச் செய்பவர்களும்.....

எருமை நாகு ஈன்ற செங் கண் ஏற்றையோடு ஏற்றை, 'சீற்றத்து
உரும் இவை' என்னத் தாக்கி, ஊழுற நெருக்கி, ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன் அதனை நோக்கி,
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப, மஞ்சுற ஆர்க்கின்றாரும்;


பெண் எருமைகள் பெற்ற சிவந்த கண்களை உடைய கடாவோடு மற்றொரு கடா‘கோபம் கொண்ட இடிகள் இவை’ என்று சொல்லும் படியாக மோதி முறையாக நெருங்கி எங்கணும் ஒரே பொருளாய் விரிந்திருக்கின்ற இருட்பிழம்பு இரண்டுப குதிகளாகப் பிரிந்து நின்று ஒன்றோடு ஒன்று கோபம் கொண்டு தாக்கின. அந்தப் போரைக் கண்டு தலை முடியில் அணிந்த மலர்களில் இருந்த வண்டுகளின் கூட்டம் (கலைந்து) ஆரவாரம் செய்யும்படியாக தமது குரல் மேக மண்டலம் வரை செல்லும்படி ஆரவாரம் செய்பவர்களும்....

முள் அரை முளரி வெள்ளை முளை இற, முத்தும் பொன்னும்
தள்ளுற, மணிகள் சிந்த, சலஞ்சலம் புலம்ப, சாலில்
துள்ளி மீன் துடிப்ப, ஆமை தலை புடை கரிப்ப, தூம்பின் -
உள் வரால் ஒளிப்ப, -மள்ளர் உழு பகடு உரப்புவாரும்;


முள் கொண்ட தண்டினை யுடைய தாமரையின் வெண்மையான முனை ஒடியவும் நிலத்திலிருந்து முத்தும், பொன்னும் ஒதுக்கித் தள்ளப்படவும், பல வகை மணிகள் சிந்தவும் சலஞ்சலம் என்ற சங்கு புலம்பவும் கொழு முனையில் புரளும் மண் திரளில் மீன்கள் துள்ளித் துடிக்கவும், ஆமைகள் தலையையும் கால்களையும் ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்ளவும், மதகுகளினுள் வரால்மீன்கள் ஒளிந்து கொள்ளவும், உழுகின்ற எருதுகளை ஓட்டி அதட்டுகின்ற உழவர்களும் (அந்நாட்டில் உள்ளனர்).

கடல் வாணிகம்

முறை அறிந்து, அவாவை நீக்கி, முனிவுழி முனிந்து, வெ·கும்
இறை அறிந்து, உயிர்க்கு நல்கும், இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில், பொன்னின்
நிறை பரம் சொரிந்து, வங்கம், நெடு முதுகு ஆற்றும், நெய்தல்.


ஆளும் முறையை அறிந்துஆசையை அகற்றி கோபிக்க வேண்டிய போதில் கோபித்து தான் விரும்பும் வரியின் அளவைஅறிந்து தன் குடிகளுக்கு இரங்கும் புகழ் அமைந்த மன்னன் பாதுகாப்பதால் (பாவமாகிய) சுமை நீங்கப் பெற்று (அமைதியாகிய) இளைப்பாறுகின்ற தெய்வத் தன்மை வாய்ந்த நிலம் போலே பொன்னாகிய நிறைந்த பாரத்தை நெய்தல் நிலத்திலே இறக்கிவிட்டு கப்பல்கள் நீண்ட முதுகுகளை ஆற்றிக் கொள்ளும்.

வளம் பல பெருக்கி, மள்ளர் விருந்தோடு மகிழ்ந்திருத்தல்

எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகொளும் போத்தின் கொல்வார்; கொன்ற நெல் குவைகள் செய்வார்;
வறியவர்க்கு உதவி, மிக்க, விருந்து உண மனையின் உய்ப்பார்,
நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து, மண் நெளிய ஊர்வார்.


வாளால் அரியப்பட்ட நெல்லரிகளாகிய சுமைகளை சுமந்து சென்று வானம் அளாவிடக் குவித்த போர்களில் அடையாளம் இட்டுப் பாதுகாத்துக் கொள்வார்கள் கதிரடித்து உதிர்த்த நெல்லை குவித்து வைப்பார்கள் (களத்துமேட்டுக்கு வரும்)ஏழைகளுக்கு நெல்லை உதவி மீதியான போகும்வழிகள் புதையும்படியாக
வணடிகளில் நிறைத்து நிலமே நெளியும் படியாகச் சுமை ஏற்றி வண்டிகளைச் செலுத்துவார்கள்.

கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,-
மதுவளம் மலரில் கொள்ளும் வண்டு என-மள்ளர், கொள்வார்.

கதிர்களில் விளையும் வயல்களில் உள்ள நெல் முதலியவைகளையும், மணம் வீசுநீரில் உள்ள தாமரை மலர் முதலியவைகளையும், முதிர்ந்த பயன் தரத்தக்க மரங்களில் உள்ள காய், கனி முதலியவைகளையும், முல்லைநிலத்து விளையும் பருப்பு முதலியவைகளையும், (நிலத்தில்) பதிக்கப்பட்டுள்ள கொடிகளில் விளையும் மலர், கனி முதலியவைகளையும், நிலத்தில் உண்டான குழிகளில் விளையும் கிழங்கு முதலியவைகளையும், தேனாகிய வளத்தைப் பலவகைப்பட்ட மலர்களிலிருந்து சேகரிக்கும் வண்டுகள் போல உழவர்கள் பலவகை விளைச்சல் வளத்தைக் கொள்வார்கள்.

முந்து முக் கனியின், நானா முதிரையின், முழுத்த நெய்யின்,
செந் தயிர்க் கண்டம், கண்டம், இடை இடை செறிந்த சோற்றின்,
தம்தம் இல் இருந்து, தாமும், விருந்தோடும், தமரினோடும்,
அந்தணர் அமுத உண்டி அயிலுறும் அமலைத்து எங்கும்.

அந்த நாட்டில் எல்லா இடங்களிலும் கனிகளில் முதன்மையாக எண்ணப்படுகின்ற வாழை, பலா, மா ஆகிய முப்பழங்களுடனும் பல் வகைப் பட்ட பருப்புகளுடனும் பரிமாறப்பட்ட பொருள்கள் முழுகும் படி வார்த்த நெய்யுடனும் செந்நிறமுள்ள தயிர்க் கட்டிகளுடனும் கண்ட சருக்கரை இடையிடையே செறிந்துள்ள சோற்றுடனும் தங்கள் தங்கள் வீட்டில் இருந்து விருந்தினருடனும் உறவினருடனும் கலந்து தாங்களும் தேவர்களுக்கு உரிய அமுதம் போன்ற உணவினை உண்ணுகின்ற ஆரவாரம் உடையது (அந்தக் கோசலம்)






































































0 கருத்துகள்:

கருத்துரையிடுக