ஆற்றுப் படலம் தொடர்ச்சி.........


பணை முகக் களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்தென ஈர்த்து, இரைத்து ஆர்த்தலின்,
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்,

புணரிமேல் பொரப் போவதும் போன்றதே.

பருத்த முகமும், களிப்பும் கொண்ட யாணைகள் அணி வகுத்தது போல இழுத்து கொண்டு ஆரவாரத்தோடு முழங்குதலாலும், அழகான கொடிகள் தோன்றுதலாலும், கடலின் மீது படையெடுத்து போர்ச்செய்யச் செல்வது பொல சரயு வெள்ளம் காணப்பட்டது.

இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,
சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ்
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்

சூரிய குலத்தில் தோன்றிய எண்ணற்ற பல வேந்தர்களின் போற்றத் தகுந்த நல்லொழுக்கத்தின் தன்மையை மேற்கொண்டதாகிய சரயு என்னும் பெயர் கொண்ட அந்த ஆறு, உயிரினங்கள் யாவற்றுக்கும் பாலூட்டி பேணும் தாயின் மார்பகம் போன்றது.

கொடிச்சியர் இடித்த சுண்ணம், குங்குமம், கோட்டம், ஏலம்,
நடுக்குறு சந்தம், சிந்தூரத்தொடு நரந்தம், நாகம்,
கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை, கண்டில் வெண்ணெய்,
அடுக்கலின் அளிந்த செந் தேன், அகிலொடு நாறும் அன்றே.

குறிஞ்சி நிலத்து பெண்கள் இடித்த மணப் பொடியினையும், குங்குமபூ, கோட்டம், ஏலக்காய், தன் குளிர்ச்சியால் உடலை நடுங்க செய்கின்ற சந்தனம், வெட்சி பூ, நரந்தம் பூ, சுரபுன்னை, கொன்றை, ஆத்தி, வேங்கை, பல்வகை பச்சிலைகள், கண்டில், வெண்ணை என்னும் பூண்டு, மலையில் கட்டப்பட்ட இனிய தேன் கூடு, அகில கட்டை ஆகியவற்றை இழுத்து வருவதால் சரயுவின் வெள்ளம் மேற் குறித்த பொருள்களின் மணத்தை கொண்டு இயங்கும்.

எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி,
வயின் வயின், எயிற்றி மாதர், வயிறு அலைத்து ஓட, ஓடி,
அயில் முகக் கணையும் வில்லும் வாரிக் கொண்டு, அலைக்கும் நீரால்,
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே.

சிறிய ஊரில் வாழ்கின்ற வேடர்களை அம்பு மழையால் ஓடச் செய்தும் எல்லா இடங்களில் வேடுவ பெண்கள் வயிற்றில் அடித்து கொண்டு ஓடும்படி விரட்டியும், கூர்மையான முனை கொண்ட அம்புகளையும் விற்களையும் வாரி வந்து அலைய செய்கின்ற தன்மையால் போர் செய்து வெற்றி பெற்ற மன்னர்களின் படையை போன்றது.

செறி நறுந் தயிரும், பாலும், வெண்ணெயும், சேந்த நெய்யும்,
உறியடு வாரி உண்டு, குருந்தொடு மருதம் உந்தி,
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்,
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே.

தோய்ந்து இருகிய மணம் மிக்க தயிரையும் பால், வெண்ணை, சிவந்த நெய் ஆகியவற்றையும் உரிகளோடு கவர்ந்து உண்டு குருந்த மரத்தொடு மருத மரத்தையும் முறித்து தள்ளி இடைகுல பெண்கள் உடுத்துகின்ற ஆடைகளை ஈர்க்கின்ற, புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட பாம்பின் மேல் ஆடிய தூய கண்ணபெருமானை ஒத்திருக்கும்.

கதவினை முட்டி, மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி,
நுதல் அணி ஓடை பொங்க, நுகர் வரி வண்டு கிண்ட,
ததை மணி சிந்த உந்தி, தறி இறத் தடக் கை சாய்த்து,
மத மழை யானை என்ன, மருதம் சென்று அடைந்தது அன்றே.

சரயுவின் வெள்ளம் அங்குள்ள மதகுகளின் கதவுகளை மோதி,உழவர்களின் கைகளை உயர்த்தி(மகிழ்ச்சியால்) ஆரவாரம் செய்யும் படி வந்து முன்னணியில் உள்ள ஓடைகள் பெருகுமாறு தேன் உண்ணும் கோடுகள் அமைந்த வண்டுகள் குடைய நெருங்கிய மணிகள் சிதறும் படி நீரை தள்ளி சென்று, இரு கரைகளில் நடப்பட்ட பெரிய கழிகளை முறியும் படிஅலைகளாகிய பெரிய கைகளால் சாய்த்து மத மழை பொழிகின்ற யானையை போல மருத நிலத்தை சென்று சேர்ந்தது.

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்,
செல்லுறு கதியில் செல்லும் வினை என, சென்றது அன்றே.

முல்லை நிலத்தை குறிஞ்சி நிலமாக்கியும், மருத நிலத்தை முல்லை நிலமாக்கச் செய்தும் புன் புலமாகிய நெய்தல் நிலத்தை நிகரில்லாத மருத நிலமாகச் செய்தும் அளவற்ற பண்டங்களை தத்தம் இடத்தை விட்டு வேறு நிலத்திற்கு கொண்டு செல்லும் தன்மையால் செலுத்த படுகின்ற போக்கிலே, இழுத்து போகின்ற இரு வினைகள் போல் சென்றது.

காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச்
சேர்த்த நீர்த் திவலை, பொன்னும் முத்தமும் திரையின் வீசி,
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு,
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே

உழவர்கள் காத்து நின்ற கால்வாயில் வெள்ளம் வருவதை தெருவிக்கும் கிணைப்பறை ஒலிக்க, ஒழுங்காகச் சென்று திரண்ட நீர்த் திவலையும், பொன், முத்து ஆகியவைகளை அலைகளால் வீசி எரிந்து, வெள்ளம் பெருகியும் அலைகளால் உயர்ந்தும் நிலம் கிழியும்படி நீளச்சென்று முறையாகத் தொடர்கின்ற கால்வாயிலிருந்து மற்றொரு கால்வாயாக பல கிளைகளாக பிரிவது போல் பிரிந்து சென்றது சரயு வெள்ளம்.

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
'எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது' என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே.

இமயமலையில் தோன்றி அங்கிருந்து வந்து கடலில் கலந்திட்ட சரயுவின் வெள்ளம், அளவிட முடியாத வேதங்களாலும், சொல்லுதற்கரிய பரம்பொருள் இவ்வெள்ளம் என்று கூறுவதற்கு ஏற்றபடி ஆதிமுதலில் ஒன்றாகவே இருந்து ஏரி, குளம் முதலிய எல்லா இடங்களிலும் விரிந்து ஆராய்ச்சி உடைய பல்வேறு சமயவாதிகள் விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போல பரவியது

தாது, உகு சோலைதோறும், சண்பகக் காடுதோறும்,
போது அவிழ் பொய்கைதோறும், புதுமணல்-தடங்கள்தோறும்,
மாதவி வேலிப் பூக வனம் தொறும், வயல்கள் தோறும்,
ஓதிய உடம்புதோறும் உயிர் என, உலாயது அன்றே.

மகரந்தத் தூள் சிந்துகின்ற சோலை தோறும், சென்பக மரங்கள் நிறைந்த காடுகள் தோறும், முற்றிய அரும்புகள் முருக்கு அவிழ்ந்து மலர்கின்ற பொய்கை தோறும், புது மணல் பரப்பை உடைய தடாகங்கள் தோறும், குருக்கத்தி கொடி படர்ந்த வேலியை உடைய கமுகந் தோட்டந்தோறும், நெல் வயல்கள் தோறும், நான்கு கதிகளாக நூல்களால் ஓதப்பட்ட பல்வேறு உடம்புகள் தோறும் சென்று உலாவும் ஒரே உயிர் போல சரயுவின் வெள்ளம் பரவிற்று.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக